இன்னொரு சுதந்திரம்!

இன்னொரு
சுதந்திரம் வேண்டும்

இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்?
எவர் வாங்கினோம்?
ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்.

வேதித்தும்
சோதித்தும் அதை
உண்மைச் சுதந்திரம் என்று
வயல்வெளிகள் வனாந்திரங்கள்
சொல்ல வேண்டும்;

குடிசைகள் கிராமங்கள்
சொல்ல வேண்டும்.
வேர்வையும் கண்ணீரும்
நம்ப வேண்டும்.

'ஆகஸ்டு 15'...
மாஜி மனிதர்களின்
அந்தப்புரங்கள் சொல்லும்
சுலோகமா?

இந்தியனிடமிருந்து
இந்தியாவை விடுதலை செய்ய எழட்டும்
இன்னொரு சுதந்திரப் போர்!

கட்சிகளின்
படுக்கை அறைகளில்
கசக்கி எறியப்பட்டது இந்த
ஜன நாயகம்!
எந்தத்
தீக்குளிப்பாலும் தீராது சந்தேகம்!

ஆட்சிக்கட்டிலின்
ஐந்தாண்டுப் புருஷர்கள்
பசிக்கப் பசிக்கப் புசிப்பது
இந்தியாவின் ஈரல்.

ஊழல்
நாட்டின் சுவாசப் பையில்
ஓட்டைகள் போட்டது!
கங்கைக் கரை முதல்
காவேரிக் கரை வரை
எங்கும்
அடையாளம் தெரியா அபலைப்
பிணங்களாய்ச்
சட்டமும் ஒழுங்கும்!

இங்கே,
கடத்தல்காரனிடம்
தேசபக்தி, தங்க பிஸ்கட்!
கலப்படக்காரன் கையில்
தேசபக்தி, கறுப்புப்பணம்!

அரசை
ஆட்டி வைப்போனிடம்
தேசபக்தி, கள்ளச் சாராயம்!

அறிவாளியிடம்
தேசபக்தி, சபலங்கள்!
நியாயவான் வாசலில்
தேசபக்தி, தண்டனை!

இன்னொரு சுதந்திரம்
வேண்டும் ...
இப்போதிருப்பது சுதந்திரம் அல்ல
என்பதை இடிகளில் சொல்ல
மின்னல்களில் எழுது!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:32 pm)
பார்வை : 41


மேலே