அகல் விளக்காக இரு

அகல் விளக்காக
இரு;
அது முடியாவிட்டால் பரவாயில்லை.
சூரியன் மேல் சாணி அடிக்காதே!

பாதை போட
வர மறுத்தாய்; பாதகமில்லை,
பாதையில்
முள்ளையும், கண்ணாடித்
துண்டையும் தேடாதே.

சத்தியத்தின்
பாதவிலங்கை உடைத்தெறிய
முடியவில்லையா?
சங்கடப்படாதே!
பொய்யின் உதட்டுக்கு
புன்னகை தயாரிக்க
உலகை உருக்காதே!

அறத்திற்கு ஆதரவாகப்
பேசத்தவறினாய்;
அது குற்றமில்லை.

ஊளையிட்டபடி
ஓடி வராமல் உன் வார்தைகளைச்
சங்கிலியால்
கட்டிபோடக் கூடாதா?

கொடுமைக்கு எதிராக
இரத்த முழக்கம் செய்!
முடியவில்லையா?
தப்பில்லை.

அநியாங்களின்
படுக்கை அறைக்கு
ஆள் அனுப்பும் வேலை உனக்கு
நல்லதா?

மகத்தான
மானுட இசை பெருக்கில்
உன் குரலை சங்கமிக்கச் செய்!.
ஒப்பவில்லையா?
ஒதுங்கிக் கொள்.

ஒளிந்திருந்து
அபஸ்வரங்களை விட்டெறிந்து
காயங்களைக் கண்டு
கை கொட்டிச் சிரிக்காதே!

மாறாக----

குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?

புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டு விட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக் கொள்ளாதே.

கடலிடம்
ஒறு முறை தோற்றால்
மறு முறையும் மோது.
ஒடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!

நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!

மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக் கொள்ளாதே
உன் தலையில்.

உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?

வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால் நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:50 pm)
பார்வை : 73


பிரபல கவிஞர்கள்

மேலே