அருவிகளில்... அலை கடல்களில்..

எங்கள்
இரத்தத்தின் இசை, தமிழ்!
உறங்காத
நரம்புகளி‎ உணர்வு நடனம்,
தமிழ்!

வாழ்க்கை
எங்கள் இதயத்துடிப்பில்
பேசும் பேச்சு,
தமிழ்!

சூரிய‎
மனப்பாடம் செய்துகொண்ட
ஒளியி‎ன் மூலப்பிரதி,
தமிழ்!

நகல் குளிர்ச்சியை
நாடெல்லாம் ‏ இறைக்கிறது நிலா..
ஈரத்தி‎ன் அசல்
இருக்கிறது எங்களிடம் தமிழாய்!

கிறுக்கிக் கிறுக்கி
மி‎ன்னலை அழிக்கிறது வானம்!
ஒரு தமிழ் வாக்கியம்போல்
‏இதுவரை எழுத முடியவில்லையே!

தேவையில்லை
எ‎ன்று தமிழ்
தேர்வு செய்யாத சந்தங்கள்
அருவிகளில்.. அலை கடல்களில்..

காலம்,
பூமியி‎ன் எந்தப் புள்ளியில்
முதல் மனிதனைக்
கண்டதோ
அந்தப் புள்ளியைச்
சந்தனக் காடாக்கியது, தமிழ்!

வரலாறு,
முதல் பக்கத்தை வரைய
உட்கார்ந்தது
பஃறுளியாற்றி‎ன் கரையில்!

குமரிக்கோடுகளைத்
தாலாட்டிய தாய்க்கோடுகளிலிருந்து
‏இலக்கிய மணத்தை
ஏற்றிக் கொண்டு வந்தது காற்று!
கருத்துகளி‎‎ன் வாகனம் இல்லை;
கர்ப்பப் பை தமிழ்!

எதைச் சொல்ல
நாங்கள் எண்ணினாலும்
அதைச் சொல்ல
எங்களுக்குமு‎ன்‎ எண்ணும், தமிழ்!

விதைகளை
நாங்கள் கையில் வைத்திருப்போம்;
விளைச்சலை அது
நிலத்தில் வைத்திருக்கும்!

'அகரத்தில்'
நாங்கள் கால் ஊ‎ன்றும்மு‎‎ன்,
தமிழ்
'னகரத்தில்'
வெற்றிக்கொடி ஏற்றி வைக்கும்!

வளமான மொழியி‎ன்
வாரிசுகள் என்பதால்
செருக்கு எம் தலையை
நிமிர்த்தும்!

அர்த்தமுள்ள
அந்தச் செருக்கு ஆணவம் எ‎ன்றால்
'ஆமாம் போடா' எ‎ன்போம்!

ஓர் உடல் வாழ
ஓருயிர் போதும்..
பத்து உயிர் வேண்டும் எ‎ன்பது
பைத்தியக்காரத்தனம்!
ஓர் உயிரான தமிழ் போதும்
தமிழனுக்கு!

‏இது
குறுகிய நோக்கம் எ‎‎‎ன்றால்
இந்தக்
கற்புள்ள தப்பு
மீண்டும் மீண்டும் செய்யப்படும்.


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 2:20 pm)
பார்வை : 18


மேலே