வையை

நிருவாண மாய்க்கிடந்தாய் வையை! - இன்று
நீர்ச்சேலை அணிந்துள்ளாய்; நன்றுன் செய்கை!
வருமான மில்லாமல் நின்றாய் - இன்று
வள்ளல்போல் வாரிநீ வழங்கு கின்றாய்!

மாமதுரைப் பதிகண்ட கொடையே! - தீய
வறுமைத்தீக் கேள்விக்கு வாய்ந்த விடையே!
தேமதுரத் தமிழ்நாட்டின் மறத்தை - இன்று
தெரிவிக்கக் காட்டினையோ சிவப்பு நிறத்தை?

கோடிப்பூ மாநாட்டு மேடை! - உன்றன்
கொடும்பகைவன் யார்? சொல்ல வா, நான் - கோடை
வாடிப்போ கும்பிள்ளைப் பயிரும் - இனிநீ
வார்க்கின்ற நீர்ப்பாலால் வளரும்; உயரும்!

புதுவெள்ளப் பெருக்குக்கு நன்றி - உன்னால்
புதுஇன்பம் காண்கின்றேன் கவலை யின்றி
மதுஉள்ளம் கவின்காணும் நேரம் - என்றன்
மனம்ஊறும் பாட்டாறும் உனையே சேரும்!


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:35 pm)
பார்வை : 31


மேலே