இரு பக்கங்கள்

காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்
தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்
விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்
கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்
புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்


கவிஞர் : கவிக்கோ அப்துல் ரகுமான்(21-Apr-12, 2:53 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே