வாழ்க திலகன் நாமம்

வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

(சரணங்கள்)

நாலு திசையும் ஸ்வாதந் தர்ய நாதம் எழுகவே!
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) 1

கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை
கட்டினான் -- நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
சொல்விளக்க மென்ற தனிடைக் கோயி லாக்கினான்
ஸ்வாதந் தர்யமென்ற தன்மேற் கொடியைத் தூக்கினான். (வாழ்க) 2

துன்ப மென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன்பெயர்
சோர் வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன்பெயர்
அன் பெ னுந்தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:08 pm)
பார்வை : 0


மேலே