ஊழி

நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இருக்கும் பூமிக்கு இன்னொரு சிறகு கட்ட; அழிவை உழுது அன்பு விதைக்க.



கடைசியாய் ஒருமுறை
கூவிக்கொள்க குயில்களே!

கடைசியாய் ஒருமுறை
வான்பாருங்கள் மலர்களே!

இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து
இதழ்பிரிக்காதீர் காதலரே!

மார்புகுடிக்கும் மழலைகளைத்
தள்ளிவிடாதீர் தாயர்களே!

எது நேரக்கூடாதோ
அது நேரப்போகிறது

சிறிது நேரம்தான்...
பூமி சிதறப்போகிறது

நாலரைக்கோடி ஆண்டுகளின்
அடையாளச் சின்னம்
அழியப் போகிறது

சூரியக்குயவன் செய்த
பெரிய மண்பானை
உடையப் போகிறது

* * * * *
திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்
தட்டுக்கள் எழும்
ஒன்றன்மீதொன்று படையெடுக்க...

பூமியின் வயிற்றெரிச்சலாய்க்
காலங்காலமாய்க் கனன்றுகிடந்த
அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...

வெறிகொண்ட மேகங்கள்
விரைவதைப்போலப்
பாறைகள் பூமிக்குள்
பயணப்பட...

தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது
பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்

* * * * *
பறவைகளுக்கு மூக்குவேர்த்தது
விலங்குகளுக்கு விளங்கிவிட்டது

குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்
பொத்துக்கொண்டது பூமியின் ஓடு

ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
காற்றில் சமாதியாயின கதறல்கள்

* * * * *
வான் நடுங்கியது
பூமியின் இடியில்

மேகம் நனைந்தது
கடல்களின் அலையில்

பூமியின் வயிற்றில்
புகுந்தன தேசங்கள்

கடல்களை எரித்தது
அக்கினிக் குழம்பு

குன்று பெயர்த்துக்
கோலி ஆடியது காற்று

* * * * *
பாளம்பாளமாய்
பூமி பிளக்க...

பூகம்ப அளவை சொல்லும்
ரிக்டர் வெடிக்க...

ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்
கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...

அவரவர் வீடு அவரவர் கல்லறை

* * * * *

மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!

தன் சுற்று வட்டம்
இடவலமா வல இடமா
முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது


பட்டாசு கொளுத்திய புட்டியாய்
பூமிப்பந்து பொடியாதல் கண்டு
விசும்பியது விசும்பு

எல்லா மேகங்களையும் இழுத்துத்
தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது

* * * * *
பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்
சரித்திரம் எங்கேதெரியப்போகிறது

பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி
மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது

உள்ளே
புதிய பிணங்களைப் போட்டுப்போனது

பசிபிக்கின் கன்னத்தில்
மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்
பருக்காய் உதிர்ந்தனவே!

மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்
வேரில்லாத பென்சில்களாய்
வீழ்ந்து கழிந்தனவே!

நிமிர்ந்ததெல்லாம்
சாய்ந்து போனதில்
சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது
பைசா கோபுரம்!

* * * * *
அட்லாண்டிக் தூக்கியெறிந்த
அலையன்று விழுந்ததில்
சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா

விழுந்த அலை எழுவதற்குள்
சகாரா பாவம் சமுத்திரமானது

சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்
பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்
தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்
தகர்த்துக்கொண்டு
வெற்றிலைபோட ஓடியது
ஆப்பிரிக்கக் காட்டுக்கு.

இன்னொரு கிரகம் ஏகக் கருதி
ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து
இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்

உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :
இது இறப்பா?
இன்னொரு பிறப்பா?

* * * * *
எது நைல்? எது தேம்ஸ்?
எது கங்கை? எது அமேசான்?
எது காவிரி? எது வால்கா?
பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை
பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை

எது சீனா? எது ரஷ்யா?
எது இந்தியா? எது அமெரிக்கா?
எது ஈரான்? எது லெபனான்?
பிரித்துச் சொல்ல தேசம் இல்லை
பிரஜை என்று யாருமில்லை

சுவாசிக்க ஆள்தேடி
அலைந்தது காற்று

துள்ள ஒரு மீனில்லை
துடித்தது அலை

* * * * *
வெறுமை...வெறுமை...
தோன்றியபோது
தோன்றிய வெறுமை
மீண்டும் அமீபா...
மீண்டும் பாரமேசியம்...

மனிதா!
வருகின்ற பூகம்பம்
வரட்டும் என்றாவது

போர்களை நிறுத்து
புன்னகை உடுத்து

பூமியை நேசி
பூக்களை ரசி

மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது.


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:09 pm)
பார்வை : 0


மேலே