ஒரு ஊரில் அழகே உருவாய்

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே


கவிஞர் : தாமரை(6-Dec-12, 12:41 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே