கைம்மைக் கொடுமை

கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக்
கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
எதிரிற் காணுகின்றோம்
கண்ணிருந் தென்ன பயன்? நமக்குக்
காதிருந் தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் - கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை, உமி - இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே - அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம - நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் - பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் - இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; - அவற்றின்
விருப்பத்தை யறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் - அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ,
அடிமைப் பெண்கதியே!


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:03 pm)
பார்வை : 0


மேலே