சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (எங்)

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! (எங்)

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! (எங்)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்)


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:06 pm)
பார்வை : 0


மேலே