சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 1

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3

இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:03 am)
பார்வை : 142


மேலே