அடையாளம்

போன பிறப்பில் வாயிலோன்
மிதித்து ஏறிய கற்படி
வளர்த்த பார்ப்பு
அணிந்து கழற்றிய ஆடை
கொங்கை முன்றில் எழுதிய குங்குமம்
அற்ற நீர்க் குளத்து அறுநீர்ப் பறவை

வரும் பிறவியில் ஒக்கலைப் பிள்ளை
புறம் நின்று புல்லும் கொழுநன்
உட்தொடையில் உராயும் மச்சம்
உண்ணீர்க் குளத்துக் கொட்டியும் ஆம்பலும்
இந்த இப்பிறப்பில்
தொலைந்த போயிருந்ததென் அகமும் புறமும்
யாருமறியாப் பாலை மணற்படுகை
பாதம் பொறாத பதைக்கும் சுடுவெயில்
வெந்து சோரும் காலடி

அவனும் உவனும் இவனும்
நானென
எங்ஙனம் உனக்கு உணர்த்துவன்
ஊருக்கு உரைப்பன்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:40 pm)
பார்வை : 0


மேலே