குளிர்ந்த விதை - தனிமையின் ஆயிரம் இறக்கைகள்

ஏற்கெனவே இதயத்தின் கனிவான சதைப்பகுதிகளையெல்லாம்

அவன் தின்று தீர்த்திருந்தான். விதையைத்

தரிசுநிலப் பாழ்வெளியில் விட்டெறிந்தான்.

முன்னோர்களின் எச்சம் என்னோடு தீர்ந்துவிடாதபடிக்கு

ஆயிரமாயிரம் மரங்கள் பருவமெய்துவதற்கான

ஊட்டத்தை

எனது கால்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தேன்

எறும்புகளும் சுவைத்திடா வண்ணம் ஓட்டை

வலியதாக்கிக் கொண்டேயிருந்தேன்

தளிரற்ற மரக்கிளையில் பறவைகள் வந்தமர்வதில்லை

சூரியன் ஒளியை வெப்பமாய் எங்கெங்கும்

ஊற்றிக் கொண்டிருந்தான்

அவ்வழியே களைப்பாறிய எருமை சொரசொரப்பான

தனது நாவால் எனை முழுதுமாய் விழுங்கியது

அதன் சீரணமண்டலம் குளிரூட்டியது

சிறிதும் சேதமிலாது வெளியே பாய்ந்தேன்

மழைக்குப் பூமி தயாராக

மண்ணுள்ளே கருக்கொண்டேன்

முளையெழுந்தது...


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:40 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே