காவல்

அறுவடையான வயற்காடு
ஊடறுத்துச் சாரைப் பாம்பென
விரையும் தார்ச்சாலை
மேட்டுயர் அணைமேல்
இருக்கப் பயந்த வள்ளலார் மறந்து
சிற்றோடைக் கலுங்கில் ஏறி அமர்ந்தேன்
எவரோ எறிந்த காலிக் குப்பிகள்
ஓடைச் சரிவில் உடைந்து கிடந்தன

ஊரம்மன கோயில் அன்னக்கொடை
வில்லுப்பாட்டின் பானை, கட்டை,
உடுக்கு தெறித்துக்
கலங்கிய காற்று

பங்குனி நிலவு உயர்ந்து வளர்ந்தது

திசைபலிக்குப் போன
பம்பையும் முரசும்
ஒற்றைக் கொட்டாய்க்
காற்றைக் கலைத்து
மனதை வெருட்டிற்று

ஏகாந்தம் இனிதே
அச்சம் அதனினும் வலிது

நாச்சியார் புதுக்குளத்துத்
தாழம்புதரின் நரியுடன்
சில்லென்று ஒலித்தது யாமம்

முத்தாரம்மனின் மான் வாகனம், மாணிக்க ஆரம்,
மேநாள் அரும்பி மொட்டாகிப் போதாகி
உதிர்ந்தும் போன நேசத்தின்
வறண்ட கிழமுகம்,
நையாண்டி மேளம், கரகாட்டம்
எனத் துழாய்ந்து ஓய்ந்த
சின்னஞ் சிறுகாலை

கால்மாடு தலைமாடாய்த் துயின்ற
பேரன் பேத்திகள், மக்கள் மருமக்கள்,
உடன்பிறப்புகள் எழுப்ப நாணி
வலக்கை தலைக்கணைத்துத்
தெருப்படிப் புரையில் கண்ணயர்ந்தேன்

சாய்க்கடை வன்னாற்றம்
கொசுக் கூட்டத் தம்புரா

சுடலைமாடன் கோயில் ஆலமரத்து
ஆனைச்சாத்தன், நாகணவாய்
பிடரியில் சிலம்பின
கூட்டாக
மீனாட்சியின் ஆண்டாளின்
வல, இடத் தோட்கிளிகளின்
பேச்சரவம்
தேரேகாலின் கரையோரச்
சடைப் புதரின்
கானங்கோழியும் குருகும்
யாத்தன செப்பலோசை

கண்விழித்து ஆற்றில் முகம்கழுவித்
தேயிலைக்குக் காத்திருந்தேன்

அசைவம் ஆசைப்படும்
சந்தனமாரி, சூலைப்பிடாரிக்கும்
நள்ளிரவில் படைத்த
சைவப்படப்புச் சோறு வந்தது
ஈயம் பூசிய பித்தளை வாளியில்
இன்னும் இளம் சூடு
வசங்கிய முருங்கைக்கீரை வாசம்

எருக்கலம்பூச் சல்லடம் கச்சை
பாய்ச்சல்கயிறு
தொப்பியில் செருகிய செந்தாழைக் குறுமடல்
யோக தண்டம் தாங்கிய வைரவன்
முத்தாரம்மனுக்குக் காவல்...


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 5:12 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே