நெய்தல் பாடல்

வாழிய தோழி கடலின்மேல் அடிவானில்
கரும்புள்ளியாய் எழுதப்படும்
புயற் சின்னம்போல
உன் முகத்தில் பொற்கோலமாய்
தாய்மை எழுதப்பட்டு விட்டது.

உனக்கு நான் இருக்கிறேனடி.
இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை
உப்புக் கடலாக்காதே.
புராதன பட்டினங்களையே மூடிய
மணல் மேடுதான் ஆனாலும்
தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட
இங்கு தன் முட்டைகள
நெடுநாள் மறைக்க முடியாதடி.

விரைவில் எல்லாம்
அறியபடா திருந்த திமிங்கிலம்
கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்
அதனால் என்னடி
இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.

அஞ்சாதே தோழி
முன்பு நாம் நொந்தழ
மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான்.
ஆனாலும் காதல் அவனை
உன் காலில் விழ வைத்ததல்லவா.
ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்
முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்
குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்
கரிசனை இருந்ததல்லவா.

ஆறலைக் கள்வர்போல
சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்
நீர்ப் பறவைகள் எங்கே போவது.

இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல
அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்
உண்மைதான் தோழி.
ஆனாலும் அஞ்சாதே
அவன் நீருக்குள் நெருப்பையே
எடுத்துச் செல்லவல்ல பரதவன்.

அதோ மணல் வெளியில்
முள்ளம் பன்றிகளாய் உருழும்
இராவணன்மீசையை
சிங்களக் கடற்படையென்று
மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.

இனிக் கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி.


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 3:53 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே