ஏடு படைப்போம்!

பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை
பாய்ந்து கலக்கிய சேர மகன்

ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை!
ஏடா தமிழா! எடடா படை!

கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை?
கூப்பிடு கூப்பிடு வீரர்களை!

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?

கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!

காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!

கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?

நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி
நடுங்கப் புயல்போல் நடைகொளடா!

மானம் அழைத்தது! வீரம் அழைத்தது!
மலைத்தோள் இரண்டும் எழவில்லையோ?

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்?

ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம்! எழுதமிழா!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:51 pm)
பார்வை : 96


மேலே