கால முனிவன் கூற்று


எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:07 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே