அறப்போர்

எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன
ஈனர் குண்டுகளே! - குண்டு
பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப்
பாய்ந்தார் தொண்டர்களே!

மானம் பெரிதென ஊன உடல்விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள்
தங்கம்! தங்கமடா!

பெண்களை மென்மைப் பிறவிகளென்று
பேச மனம் வருமோ? - அங்கே
மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த
மகளிர் குலமல்லவோ?

பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே
பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர்
வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம்
விரும்பித் துடிக்கின்றார்!

ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும்
உரிமைப் போராட்டம்! - வாழ்வு
தாவென்று கேட்டு மடியுதடா எங்கள்
தமிழர் படைக்கூட்டம்!

தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும்
தமிழன் மடிகின்றான்! - தங்கள்
பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு
புலவன் மலர்கின்றான்!

எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி!
இனிய அறமங்கை - கண்ணில்
பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே
பூமி அழியாதே?

ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர்
எழுந்து பெருக்கெடுத்து - நின்ற
ஆழியுஞ் செங்கடலானது கண்டார்!
அதிர்ந்தார் புவிமாந்தர்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:19 pm)
பார்வை : 31


மேலே