கலங்கரை

முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை - நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?

அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!
ஓடு தூக்குதே! - இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே!

மாற்றார் தலைதனில் ஏற்றினாய்
கல்லை! வாட்டினாய்! - இன்று
மூட்டை சுமந்து நடக்கிறாய்!
தாழ்ந்து கிடக்கிறாய்!

ஆதியில் மாடம் அமைத்தவர்
வாழ்வு சமைத்தவர் - அட
வீதியில் காலம் கழிப்பதோ?
நால்வர் பழிப்பதோ?

"முல்லைக்குத் தேரை வழங்கினோம்"
என்று முழங்கினோம்! - இங்கே
பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!
தருவார் யாரடா?


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:40 pm)
பார்வை : 47


மேலே