ஒரு மனிதக் குரங்கு சித்திரம்

தன் நோட்டு புத்தகத்தில்
மனிதக் குரங்கென்று துள்ளிவர
பள்ளிச் சிறுமி குதூகலமாய்ச் சிரித்தாள்
தோட்டத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்த
ஒரு நீதிபதியைப் பார்த்து என் ஆனந்தம்
தூரிகை வர்ணத்தோடு கழுவப்பட்டது
கையிலிருந்த சஞ்சிகையை
காத்திருப்பில் வாசிக்கும்போது
பளிச்சிட்டு மறையும் குரங்கின்
மிரள் விழிகளுக்காக
மெலிதாகப் புன்னகைத்ததை – இல்லை
புன்னகைக்க நனைத்ததையறிந்து
குறிப்பெழுத பேனாவைத் திறந்துவிட்டார்கள்
பஸ் நிறுத்த நீதிபதிகள்
யதார்த்தத்தில் தலைநனைத்துத் தப்பித்தாயிற்று
சந்தடியான சாலையில் எதிரே பிரம்மாண்டமான
குரங்கின் வினையப்பரிதாபம் கண்டு
பொங்கிய பதில் சிரிப்பை நெரித்து அருகில்
நடந்து வந்து கொண்டிருக்கின்ற நீதிபதிகளிடம்
யாவும் ஒழுங்குபடிதான் அய்யா என இயல்பை
அறிக்கை செய்துகொண்டு நடந்தேன்
உதிர்ந்த கூரிதழ்ப்பூவைக் கையிலெடுதது
இப்படியானதுதான் அதன் பல் வரிசையினை
சொல்வதற்குள்
நண்பனின் கண்கள் வழியே கூர்ந்த
நீதிபதியை ஏய்க்க அதை
கடவுள் படத்தில் மேலேயே செருகியாயிற்று
யாரிடமோ எதுவோ பேசிக்கொண்டிருக்கையில்
உனக்கு இவ்வளவு தன்னிரக்கம்
தேவையற்றதென்றேன்,
துப்புக்கிடைத்த எதிர்நீதிபதி விழிப்படைந்து
விதிகளைக் துழாவியபடி
யாரைச் சொல்கிறீர்கள் எனக் கேட்கவும்
அபராதமாய்
மதுவருந்த அழைத்து
சட்டப்புத்தகத்தினடியில் தலை நசுங்கவிருந்த
சகஜத்தை காப்பாற்றியழைத்துப் போனேன்
மூன்றாவது பெக் பருகி முடித்ததும் பாரிலிருந்த
எல்லோருக்குமாகவும் சத்தமிட்டுச் சொன்னேன்
ஒரு மனிதக்குரங்கு தாவும் சித்திரம் எவ்வாறு
ஒரு சிறுமிக்கு
சிரிப்பூட்டியது என்பதை
குரங்கு போலவே விளக்கவும்
குடித்திருந்த நீதிபதிகள் என்னைப் போலவே
குறுக்கும் நெடுக்குமாய்த் தாவிச் சிரித்தார்கள்


கவிஞர் : யூமா. வாசுகி(2-Nov-11, 4:29 pm)
பார்வை : 96


மேலே