ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு

மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது
****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?
****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் - என்
நடையின் வேகம் நான் குறையேன்

ஞாலம் கருதினும் கைகூடும் - அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்
கடலை எரித்த தீக்குச்சி



கவிஞர் : வைரமுத்து(4-Jan-12, 11:43 am)
பார்வை : 114


பிரபல கவிஞர்கள்

மேலே