கசடறக் கற்க

பகவற் கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்;
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்.
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்!

இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு
உளஎன உணர்தல் வேண்டு மன்றோ?

கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினான் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்,
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினார் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழி யாளர் வழங்கு கின்றார்;
பரிமே லழகர் திருக்குற ளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்றுணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவிலதாகும்!

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே.
மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்

திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும்
ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர்
ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின்
பரிமே லழகர் உரைசெய் துள்ளார்
என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும்

பரிமே லழகர் உரையோ வள்ளுவர்
திருவுள் ளத்தின் திரையே ஆனது
நிறவேறு பாட்டை அறமே ஒதுக்கிய
தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை
நஞ்சென்று நாட்டினார் பரிமேலழகர்.

பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென
அன்னார் ஆய்ந்த அறவே அறமென
ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென
வள்ளுவர் நாட்டினார், தௌ¢ளு தமிழர்
சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார்.
பரிமேலழகர் செய்த உரையில்
தமிழரைக் காணுமாறில்லை. தமிழரின்
எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின்
செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்

வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை
இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி
உரைசெய் துள்ளார் பரிமே லழகர்!
எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்;
'ஒழுக்க முடைமை' குடிமை என்பதற்கு
உரைசொல் கின்றார் பரிமே லழகர்,
தத்தம் வருணத் திற்கும் நிலைக்கும்
ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை
உடைய ராதல் - உரைதா னாஇது?
'ஒழுக்க முடைமை உயர்தமிழ்க் குடிகளின்
தன்மை யுடைய ராதல்' -தகும் இது;
குடிமை என்பது குடிகளின் தன்மையே!
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இல்' எனப் பகர்ந்ததில்
பழங்குடி குறித்த பாங்கும் அறிக
நன்றுயாம் நவில வந்த தென்எனில்
திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக்
கசடறக் கற்க; கற்றே
இசையொடு தமிழர் இனிது வாழ்கவே*!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:06 pm)
பார்வை : 38


மேலே