தொழில்

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
எழிலை உலகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!

இந்தவான், மண், கனல், எரி, வளி, உருப்படா
அந்தநாள் எழுந்தஓர் "அசைவினால்" வானொடு
வெண்ணி லாவும் விரிகதிர் தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்
அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத்
துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார்.
அழியா தியங்கும்அவ் வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும்,
ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!

மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாறு தளிர்த்திடு கின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை!
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பைந
பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே!
பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றஓர்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடந்தோர் உனைத்தம், ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!

தொழிலே காதுகொடு! சொல்வேன், எங்கள்
அதிர்தோள் உன்றன் அழகிய மேனி
முழுவதும் தழுவ முனைந்தன பார்நீ
அழகிய நாட்டில் அந்நாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!

அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்
மலையெனச் செந்நெல் வழங்கஎம் தோளில்வா!
கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட்
டிரும்பா லைக்கும் வரும்பழு தகற்றினோம்
பண்டம்இந்நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!

சூட்டி ரும்பும் துளியும் போலஎம்
தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாமும் நீயும் இரண்டறக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ளிகள்யாம்;
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானூர்தியால்இவ் வையம் ஆள்வோம்

ஐயப் படாதே! அறிவு புகட்டும்
வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்ந
மாசு தவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பிணைதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்! இதோபார் கிடந்த
துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:32 pm)
பார்வை : 25


மேலே