நீலமலை நீரினும் குளிர்ந்த நெஞ்சம்!

* "உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறல் தடக்கை
வென்வேற் பொறையன் என்றலின் வெருவர
வெப்புடை ஆடுஉச் செத்தனென் மன்யான்;
நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுடை அண்ணல்
கழைநிலை பெறாக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சார்ந்துவரு வானி நீரினும்
தீந்தன் சாயலன் மன்ற தானே!"

("பதிற்றுப் பத்து" ஒன்பதாம் பத்து,
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்)

பொருள்விளக்கம்:
உறல்கூறு= நிலத்திலே ஊறுகிற அளவுக்கு
புலவ= புலால் நாற்றம் நாற. வெண்வேல்=வெற்றிவேல்.
பொறையன்=சேரன். வெப்புடை ஆடுஉ=கொடுமை நிறைந்த ஆண்மகன். செத்தனென்மகன்=முன்பு கருதியிருந்தது இப்போது இல்லை என்று ஆயிற்று.
கழை=ஓடக்கோல். குட்டம்=ஆழம். சார்ந்துவரு வானி நீர்=சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்று நீர். தீந்தண் சாயலன்= தெளிந்த குளிர்ந்த மென்மையுடையவன்.

குறிப்பு: வானியாறு "பவானி"யாறு எனவும் அறியப்படுகிறது.

பத்துப் பத்தாகப் பாவாணர்கள் வடித்த
பாடல்களின் தொகுப்பாம்
"பதிற்றுப் பத்து" எனும்
பழமுதிர் சோலையில்,
காலமெனும் கள்வன் புகுந்து
கைவரிசை காட்டியதால்
இரு பத்துக்கள் குறைந்து;
எட்டு பத்துக்களே மிஞ்சியதாம்! அந்த
எண்பது பாடல்கள் இயம்புவதென்னவாம்?
உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையல்ல;
புண்படும் போர் முனை போந்து,
வெற்றி அல்லது வீர மரணமெனப்
புகழ்பட நிற்பதே வாழ்க்கையாகும்!
இல்லார்க்கும் - தமிழில் வல்ல
நல்லார்க்கும்; இல்லையெனாது
எடுத்துச் செல்வீர் என,
ஈவதே வாழ்க்கையாகும்!
துணையாக வந்து கொஞ்சி,
தோளில் தொத்திய கிளியுடனே
இல்லறம் போற்றுவதே வாழ்க்கையாகும்!

இவ்வாறு
செந்தமிழர் திருநாட்டுப் பெருமை சொல்லி,
சேரர், சோழர், பாண்டியர் - அவரனைய
தீரார் மிகு தமிழ்க் குலத்தார்தம்
செப்பரிய வீரம் பாடும் இலக்கியங்கள்;
ஒப்பற்ற நம் மண்ணின் சொத்து - அவற்றிலோர்
ஒளியுமிழும் முத்துத்தான் பதிற்றுப் பத்து!
சேர மன்னர் திறம் போற்றும்
வீர வரலாற்றுப் பேழையிது!
தொலைவிலிருந்து நுகர்ந்தாலும்
தூய தமிழ் மணக்கும் தாழையிது!

இதில்,
ஒன்பதாம் பத்தென்னும் மலர்க் கொத்து;
ஓங்கு புகழ்ப் "பெருங்குன்றூர்க் கிழார்" எனும்
ஒலி முரசக் கவியரசர் கட்டியது - அதன்
உயர்மணத்தில், உயிர்த்தமிழின் உணர்வைக் காண்போம்!

"குட்டுவன் இரும்பொறை" யென்பானுக்கும் - அவன்
கோப்பெருந்தேவி "அந்துவஞ் செள்ளை"க்கும்
மட்டில்லாப் புகழ் விளக்கொன்று
மகனாகப் பிறந்த தம்மா!

"இளஞ்சேரல் இரும்பொறை" எனப் பெயர்
இட்டு அழைத்தனர்! இன்ப மகிழ்வில் திளைத்தனர்!
அவனோ;
வலிமையினைத் தோளில் ஏந்தி
வாய்மையினை நெஞ்சில் ஏந்தி
வஞ்சி மூதூர்க் கொடியி€க் கையில் ஏந்தி
வஞ்சினங்கள் பலவற்றை நிறைவேற்றி முடித்தான்!
"விச்சிக்கோன்" என்பானின் மலைநாட்டை வீழ்த்திப் பின்
விற்கொடியின் நிழல் நின்று பழையன்மாறனையும் சோழனையும் தோற்கடித்தான்!

போர்க்களத்தில் புலிப் போத்தாய் - சிங்க ஏறாய் -
புயல் காற்றாய்ச் சிறுகின்றான் சேரன்;
பூப்பந்தாய் எதிரிகளின் தலைகளையே; இரு
கரங் கொண்டு விளையாடும் அவன் நெஞ்ச
உரங் கண்டு பெருங் குன்றூரார் பெரிதும் வியந்து
பாசறை யொன்றில் அவனைச் சந்தித்தார்!
மாசறு பொன்னாம் அவன் மனையாள்
மன்னன் பிரிவால் மனமிக நொந்து
இன்னலுறும் செய்தியினைச் சொன்னார்!

"இருவாட்சியும் செண்பகமும் சூடி - முகத்தில்
திருஆட்சி புரிகின்ற ஆய மகளிர் முன்னே
தருநிழலின்றித் தவிக்கின்ற மான்போல் - உன்
பருவமயில் படுகின்ற துயரால்; மேனியில்
படர்கின்ற பசலை நிறம் மறைத்து
சுடர்கின்ற பொன்னொளி போல் திகழும் - அவள்
அடர்புருவ நெற்றியினைப் பற்றி
இடர்தீர்ப்பாய் மன்னவனே" என்றார்!

"போர் முனை விட்டகன்று சேரமாதேவியினை
மார்புறத் தழுவிமகிழ; நின்
தேர் இன்றே புறப்படுதற்குப்
புரவிகளைப் பூட்டிடுக" என்றார்!
"நகை முகத்தழகியாம் நின்துணையை
நாடி நீ நகர்வதாலே - இங்குள்ள
பகை முகத்தில் எல்லாம் எல்லையில்லாப்
பரவசத்தைக் காணலாமே!
இளஞ்சேரல் இரும்பொறையின்
கள முரசின் ஓசையின்றி
சில நாட்களேனும் - தம்
செவிப்பறைகள் ஓய்வு பெறுமே எனச்
செப்பிடுவர் - அதனாலே நீ
வஞ்சி மூதூர் சென்று, உன்
வஞ்சியினைக் கண்டுவர - ஒருசேர
ஒப்பிடுவர்!" எனச் சொன்னார்!

"ஆங்குநீ அரசியுடன் இருக்கும் நேரம்தான்
ஈங்குள்ள பகையரசர்க்குத்
தூங்கும் நேரம் என்பதாலே - அருள்கூர்ந்து
தூங்கவிடு அவர்களைச் சற்று!" என்றுரைத்தார்.

சேரனும், புலவர் உரை கேட்டுச்
செருமுனையில் சிதறியோடும் எதிரிகட்குச்
சிறிதளவு ஓய்வு தரச் சிரமசைத்தான்!
ஆவிதனை இவன்பால் விடுத்துக்
காவியுகு நீருடனே கலங்குகின்ற
தேவியின் தாபம் தீர்க்கப் புறப்பட்டான்!
மாவீரர் அனைவருமே அவன் ஆணை கேட்டுத்
தாவியோடித் தழுவிக் கொண்டார் தங்கள்
தங்கம் நிகர் காதலியர் தளிருடலை!

"தமிழ்ப் புலவர் வாழ்க" என்று அனைவருமே
இமிழ்கடல் அலையென முழங்கலுற்றார்!
சேரமா தேவியுடன் ஒன்றிப்போய் - "இரவு
நேரமா அதற்குள்ளே கழிந்த"தென்று
வீரமா மன்னன் இளஞ்சேரல் வியந்தெழுந்து
ஆரம் புரளும் அழகி மார்பில்
ஆயிரம் முத்தங்கள் பதித்தபோது - அவளும்
பாயிரம் பாடி வாழ்த்துகின்றாள் புலவரையே!
அவரால் தானே அவனும் வந்தான்
அதனால் அவர்க்கே வாழ்த்து என்றாள்!
ஆளன் முகத்தில் முகம் பதித்து - அவன்
தோளை விரலால் மீட்டியசைத்து
"அன்பே ஒரு வரம் வேண்டு"மென்றாள்.

"என்பு தோல் கிழித்து எதிரியை விரட்டும்
களத்திற்கினி மேல் போகாமல்
காரிகை உன்னருகே இருத்தல் வேண்டுமெனும்
அந்த வரம் தவிர - கண்ணே; நீ -
எந்த வரம் கேட்டாலும் தருவேன்" என்றான்!

"இந்த ஒரு நாள் என்னுயிர் பிழைக்க நீவிர்
வந்தது எதனால் என்பதை நினைத்தேன்
பெருங்குன்றூர்க் கிழார் இல்லையேல் - இன்று
அருந்தேனாய் இனித்த இன்பம் கிட்டாதன்றோ?
அள்ளி வழங்கிடுக அவர்க்குப் பரிசை!" என்றாள்.

"இன்பமே! இதோ உனக்கோர் பரிசெ"ன்று - அவள்
இதழோடு இதழ் பதித்து; விடுவித்துக்கொண்டு
அத்தாணி மண்டபத்திலமர்ந்து
அழைத்து வரச் சொன்னான் புலவர் கிழாரை!
வந்தவுடன் அவரை வணங்கி நின்று
வழங்குகின்றேன் பரிசிலாகப் பெற்றுக் கொள்க;
முப்பத்து ஈராயிரம் பொற்காசென்று
முறுவலுடன் மொழிந்திட்டான் - உடன் பொழிந்திட்டான்!
அவர் அறிந்து கொடுத்தது இப்பரிசென்றால் - அவர்
அறியாமலே கொடுத்தது பல ஊரும் மனைகளுமாம்!

அதுகண்ட புலவர்;
"வெட்டுண்ட உடல்கள் வீழ்ந்தும் சாய்ந்தும்
கொட்டிய குருதியால் போர்க்களம் முழுதும்
புலால் நாற்றமெடுக்க;
பொல்லாப் பகையை நொறுக்கும் கையில்
கொடித்தேர் மீதமர்ந்து கொடும்பகை தீர்க்க மட்ம்
படித்தான் சேரன் என்றிருந்தேன் - இல்லை! இல்லை*!
படையெடுத்துப் பகைப்புலத்தின்மீது செல்லும் ஆர்வம் போலே
கொடை கொடுத்துப் புலவர்தமை அரவணைக்கும் ஆர்வமுள்ளான்!

ஓடக்கோலுக்கும் எட்டாத ஆழமிகு நீரினிலே
ஓடிக் குதித்தாடும் மகளிர் தம் காதணிகள்
கழன்று வீழ்ந்து கைதவறிப் போனாலும் - மேலிருந்து
காண்போர்க்குத் தெளிவாகத் தெரியு மளவு
சந்தன மரங்கள்தமைச் சுமந்து கொண்டு
சலசல வெனப் பாய்ந்து வரும்
நீலமலைவானியாற்று தெள்ளிய நீரை விடக்
கோலமிகு சேரனது குளிர்ந்த உள்ளம்; இனிது என்பேன்!"

என்று பாடி ஏற்றிப் புகழ்ந்தார் - சேரனும்
சென்று வருகின்றேன் மீண்டும் செருக்களமென்று
விடைபெற்றுக் கிளம்பி விட்டான்! அவன்
படைமுரசின் ஒலிகேட்டுப் பகைவர்களோ மீண்டும் பதைக்கலுற்றார்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:15 pm)
பார்வை : 495


பிரபல கவிஞர்கள்

மேலே