பதிலை நெருப்பாக உமிழ்ந்த பாவாணர்!

*" மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து, அடிப்பின்
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே"
(புறநானூறு : பாடல் : 128)

*" விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய், நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!"
(புறநானூறு : பாடல் : 130)

*" மழைக் கணஞ்சேக்கும் மாமலைக் கிழவன்
வாழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறு மிகவுடைய இக் கவின்பெறு காடே!"
(புறநானூறு : பாடல் : 131)

*"வடதிசை யதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ, இம்மலர்தலை உலகே."
(புறநானூறு : பாடல் : 132)

*"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."
(புறநானூறு : பாடல் : 134)

பொருள் விளக்கம் :

பலவின் மாச்சினை மந்தி = பலாமரத்துக் கிளையில் இருக்கும் மந்தி.
இரவலர் நாற்றிய = பரிசு வாங்க வந்தோர் தூக்கிக் கட்டிவைத்த.
விசிகூடு முழவு = பிணிப்பு பொருந்திய மத்தளம்.
கனிசெத்து = பலாப்பழமெனக் கருதி.
குறுகின் = அணுகினால்.
தலைப்பெயர்த்திட்ட = தம்மிடமிருந்து விடப்பட்ட.
ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மை = அச்செய்கையின் பாற்பட்டதன்று அவனது ஈகைத்தன்மை.

வாள் தூங்கும் உறையைப் போல் மீசையுள்ள
வேள் ஆய் அண்டிரன் எனும் குறுநில வேந்தன்
பொதிய மலைப்பகுதி ஆய்குடியைத் தலைநகராய்க் கொண்டு
போரென்று வருவோரை எலியாக்கி விரட்டுகின்ற புலியாவான்!

உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார், குட்டுவன் கீரனார்,
துறையூர் ஓடைக்கிழார், பரணர், காரிக்கண்ணனார்,
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் என்றெல்லாம்
ஒரு புலவர் கூட்டமே இவன் புகழ் பாடிப் போற்றிற்று எனினும்

உடனிருந்து அவன் உளமுணர்ந்து உவகை பொங்கத்
திடங் கொண்ட அவன் கைகளாலே தினந்தோறும்
அள்ளிக் கொடுத்த வள்ளல் தன்மையினைப்
புள்ளி மயிலின் இறகெடுத்துக் குழந்தையின் பூங்குழலில்
செருகியது போல்

புறப்பாட்டாய் எழுதியெடுத்து தமிழ் முடியில் சொருகியவர்
புலவர் பிரான் உறையூர் ஏணிச்சேரி முடிமோசியார்
ஒருவர்தானே!
ஆய் அண்டிரன் மலை வளம் குறித்து ஏணிச்சேரி
முடமோசியார்
அரியதோர் நிகழ்ச்சியினை அழகுறப் பாடுதல் காண்போம்.
மலையோரம் ஊர்ப் பொதுவிடத்தில் இரவலர் கட்டியிருந்த
மத்தளத்தை
மந்தியொன்று பலாக்கனியென மயங்கித் தட்டிப்பார்க்க
மரத்தின் கிளைகளில் வாழ் அன்னச் சேவல்;
மருண்டு போய்ச் சிறகடித்து ஒலியெழுப்பிப் பறக்கின்ற;
புகை போலும் முகில் தவழும் பொதிய மலை நோக்கி
நகை முகத்து ஆரணங்குகள் ஆடச் செல்வரேயன்றி
படை யெடுத்துப் பகைநாட்டார்; அண்டிரனைச் சூழ்வதற்குத்
தலை வைத்தும் படுக்க மாட்டார் அவன் ஆளுகின்ற மலையிருக்கும் திக்கு நோக்கி!
கொங்கரை எதிர்த்து அவர் கொடும் பகை அழித்துக்
குடமலைக் கடற்கரை வரையில் விரட்டிய வீரனவன்!

ஏணிச்சேரியார் இயற்றிய பாடலில் - அவன் ஆண்ட நிலத்தின்
எழிலையும் காணலாம்; எதிரிகள் பட்ட பாட்டையும் காணலாம்!
தோற்றோடிய பகைவராம் கொங்கர் புறங்காட்டி
மேற்றிசைக் கடலோர மலைகளிலே ஒளிந்தபோது
எறிந்துவீட்டுப் போன வேல்களின் தொகையையும் மிஞ்சுமாம்;
பரிசிலர்க்கு ஆய் அண்டிரன் பரிந்தளித்த யானைகளின் தொகை!

வியப்புற்ற, தமிழ் வித்தகராம் ஏணிச்சேரியார் கேட்கின்றார்;
வேந்தே! உனது நாட்டு யானைகள் மட்டும் ஒரு தடவைக்குப்
பத்து கன்று போடுமோ என்று!
பாடி வந்த பாணர்க்கும், பாவலர்க்கும், பரிசிலர்க்கும்
பரிசளித்த எப்படித்தான் இருந்ததோ அத்தனை யானையென
அதிசயத்தால் மெய்மறந்து கவிதை தீட்டி
ஆய் அண்டிரனைப் புகழ்ந்த பாவேந்தர் முடிமோசியார்;
நாட்டு வளம் பாடுவதில் நற்புலமை நாவலராய்த் திகழ்ந்தார் எனினும்

காட்டு வளம் காண்பதற்கு ஒரு நாள் சென்றாராம்!
வழி நெடுக அவர் கண்ட காட்சி; அவர்
விழிகளையே அவர் நம்ப முடியாமற் செய்ததுவாம்!
கூட்டங் கூட்டமாய் யானைகள் பெரிதும் சிறிதும்
வாட்டமின்றி வளர்ந்தோங்கிய மரங்களின் நிழலில்
நூற்றுக்கணக்கில் நின்றதைப் பார்த்து
ஆற்றுப் பெருக்கென அருந்தமிழ்க் கவிதை யாத்தார் ஆங்கே!

பாடுவோர்தான் ஆய் அண்டிரனை நாடிப்
பரிசாகப் பன்னூறு யானைகளைப் பெற்றிடுவர்; இந்தக்
காடுகளும் ஒருவேளை; கவிதை கற்றுப்பரிசு பெற
நீடுபுகழ் ஆய் அண்டிரனைத் தேடி வந்து - இந்தக்
களிறுகளைப் பரிசாகப் பெற்று வந்து, நல்ல
குளிர் தருக்கள் நிழல் தனிலே குவித்து வைத்தனவோ?

கவிநயம், கவின் தமிழ் நயம் கற்கண்டாம் - அதிலும்
புவியாளும் ஆய் அண்டிரனைப் புகழ்கின்ற பொருள் நயம்
புதிய மணப் பூச்செண்டாம்!
பனி சூழ் மலையாம் இமயம் வடதிசையில் நிற்கும்போது,
கனி சூழ் மலையாம் ஆய்குடி தென்திசையில் நில்லாதாயின்
கீழ் மேலாகி இப்பெரும் உலகம் தலை சாய்ந்து
பாழ்பட்டுப் போகுமென முடமோசியார் பாடுகின்றார் எனின்;
அது, ஆய் அண்டிரனின் கொடைச் சிறப்பை எண்ணி
மதுவுண்ட வண்டு போல் மாக்கவிஞர் ஆனதினால்தானே!

வள்ளலுக் கெல்லாம் வள்ளலாய்த் திகழ்ந்தவனும்
வான்மழை யொத்தவனுமான வேள் ஆய் அண்டிரன் குறித்து
உள்ளத்தில் அழுக்கு கொண்ட ஒரு சிலரோ - புகழ்
உயரத்தில் வீற்றிருந்த ஆய்குடி வேந்தன் தன்னை
பள்ளத்தில் உருட்டுவதாய்க் கருதிக்கொண்டு - அவன்
அள்ளித் தருவதெல்லாம் ஆதாயம் எதிர்பார்த்துத்தான் என்றும்
இப்பிறப்பில் செய்யும் உதவியெலாம் மறுபிறப்பில் உதவுமென்ற

தன்னலத்தின் அடிப்படையில்தான் தருகின்றான் கொடையென்றும்
நாக்கிருக்கும் காரணத்தால் நாலு பேர் பத்த பேர் கூடி
நோக்கம் கற்பித்தார் ஆய் அண்டிரனின் அரவணைக்கும் போக்கிற்கு!
இதுகேட்டுச் சினம் மிகக் கொண்ட முடமோசியார்,
இழிதகை நோக்கம் கற்பித்தல் தீதென உரைத்து;
இம்மையிற் செய்வது மறுமைக்கு ஆகுமெனும்
அறவிலை வணிகனல்ல ஆய் அண்டிரன் என்று,
திட்டவட்டமாய்த் தீட்டினார் பாடல் ஒன்று!

கொட்டிக் கொடுக்கும் பொருளை விலையாக்கி
தட்டிப் பறித்திடலாம் மறுமையில் அறத்தையென்று
தரந் தாழ்ந்த சிந்தை அணுவளவும் கொள்ளாத
வேள் ஆய் அண்டிரனை வெறுப்பின் விளைவாலே
தேள் போலக் கொட்ட நினையாதீர்!
பயன் கருதி பரிசிலர்க்கும் இரவலர்க்கும்
பசும்பொன்னும் அணியும் மணியும் யானைகளும்
பரிசாகத் தருகின்ற எத்தனல்ல எமது மன்னனென்று
பதிலை நெருப்பாக உமிழ்ந்த பாவாணர் முடமோசியார்
வாழ்க! வாழ்க!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:25 pm)
பார்வை : 298


பிரபல கவிஞர்கள்

மேலே