விடுதலை வேண்டும்

வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா;
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற
நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 1:54 pm)
பார்வை : 21


பிரபல கவிஞர்கள்

மேலே