புரிந்து கொண்டான்; பிரிந்து சென்றார்!

* "பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்
தாம்பின் ஒருதலைபற்றினை, ஈங்கு எம்மை
முன்னை நின்றங்கே விலக்கிய எல்லா! நீ
என்னையே முற்றாய்? விடு;

விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்
கடுவய நாகுபோல் நோக்கித், தொடுவாயில்
நீங்கிச், சினவுவாய் மற்று.

நீ நிங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்றாங்கு
வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு

யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்றுநின்
கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,
நீ அருளி நல்கப் பெறின்.

நின்னையான் சொல்லினவும் பேணாய்; நினைஇக்
கணைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்

மாறு எதிர்கூறி, மயக்கப் படுகுவாய்!-
கலத்தொடு யாஞ் செல்வுழி நாடிப், புலத்தும்
வருவையால் - நாணிலி! நீ"

(கலித்தொகை : பாடல் : 116 (முல்லைக் கூலி)
பாடியவர் : சோழன் நல்லுருத்திரன்)

பொருள் விளக்கம்:
பாங்கு=அருகில், பாட்டங்கால்=தோட்டத்தினில்
முற்றாய்=தடுத்திடாதே. தொடீஇய=தொட்டிட.
துமித்து=கெடுத்து. மீண்டும்=விரைந்தோடும், கடு=மிகவும்.
வயம்=வலிமை. நாகு=பெண் எருமை
கதஈற்றுஆ=கோபங் கொண்ட தாய்ப்பசு.
கனைபெயல்ஏறு=மிகுதியான மழை பெய்யும்போதும் நிற்கும் காளை

இருவீணை, தலைகீழாய் இருத்தல் போன்று இடைக்குக் கீழ் இன்பபோதை ஊட்டுகின்ற உருவத்தாள்!

இணையாகக் குலுங்குகின்ற இளநீரைக் கெட்டியாக
இறுக்கிப்போடும் கச்சையணிந்த கன்னிப் பருவத்தாள்!

கன்றுக் குட்டியொன்றைத் தாம்பில் பிணைத்து
என்றும்போல் இசைபாடிக் குதித்து மகிழ்ந்து,

குன்றுக்கு அருகேயுள்ள தோட்டத்தை நெருங்கிடவே;
குறுக்கிட்டான் எதிரே; குறுஞ்சிரிப்புக் காளையொருவன்!

ஆம்பற்கொடி போன்று அவள் கையில் பிடித்திருந்த
தாம்புக் கயிறுதனை ஒருகையால் பற்றிக்கொண்டு

"சாம்பல் நிறக் கன்றுக்குட்டி நலந்தானா? அதனை உயிராக
ஓம்புகின்ற என்னுயிரே; நீயும் நலந்தானா? எனக் கேட்டான்."

துள்ளிப் பாய்ந்திட்டாள் அத்துடியிடையாள் - "நீ
அள்ளிப் பருக நான் என்ன அருவி நீரா?

வழியில் போகும் என்னிடம் எதற்காக வீண்வம்பு? என்
விழியின் அனல்கண்டு விலகிப்போ; இல்லையேல் என்மொழியும் கனலாகும்"

என எச்சரித்த இளமங்கைக்கு நேர்நின்று,
"ஏகந்திழையே! எதற்காக நான் விலகிப்போகவேண்டும்?

பிடிக்க வருவோரைப் பின்காலால் உதைத்து; வாலால் அடித்துப்
பிடிபடாமல் ஓடுகின்ற பெண்எருமைக் கன்றைப்போல்; எனை

இடித்துத் தள்ளிவிட்டு இங்கிருந்து நீ ஓடிவிடு! உரையாட
இஷ்டந்தான் உனக்கும்! ஊர்வாயை மூடமுடியாதே என அஞ்சுகின்றாய்!

முதலில் உன் வாயை என் உதடுகளால் மூடட்டுமா? ஓகோ!
பதிலில்லை எனில் ஒப்புதலுக்கு அடையாளமோ?" என்றான்.

"என்ன துணிவிருந்தால்; எனை வழிமடக்கி
இன்னல் விளைத்திடுவாய்? என் தாய்க்குச்

சேதி தெரிந்தால் இந்நேரம் ஓடிவந்து
வீதியிலே கன்றை வளைப்போர் மீது சினம்பொங்க

வேகமாய்ப் பாய்ந்து முட்டும் பசுவைப் போல்
விட்டியடிப்பாள் உனை!" என்றாள்; அவன் சிரித்தான்!

"உன் தாயே வரட்டும்; அல்லால் இந்த ஊரே வரட்டும்!
ஊராளும் உன் தந்தை கூட உருவிய வாளுடன் வரட்டும்!

யாருக்கும் நான் அஞ்சத்தேவையில்லை; இந்தச் சின்ன எழில்
தேருக்கு நான்தான் சாரதியென நீ சொல்லிவிட்டால்!" என்றான்.

அவளோ; உடல் குலுக்கி, முகம் சுளித்து, அவனை நோக்கி
ஆர்ப்பாட்டம் பலபுரிந்து எதிர்ப்பு காட்டி

"அய்யா; நீ பெருமழை பொழியும்போதும் அறியாமல்
அசையாமல் நிற்கின்ற காளைமாடென ஆகிவிட்டாய்!

ஏட்டிக்குப் போட்டியாக ஏதேதோ சொல்லி
காட்டிவிட்டாய் உன்காதல் எண்ணத்தை!"

எனக்கடு மொழியுரைப்பவள்போல் நடித்தவாறு
"எள்ளளவும் வெட்கமின்றிப் போனவனே!" என இழித்துரைத்து
பட்டென்று பதிலாய்ப் படபடவெனப் பொறிந்தாள் எனினும்
பட்டுப்போல் மென்சொற்களாலே ஒன்று கேட்டாள்;

"நாளை நான் கறவைக் கலமுடனே பசுமேயும் இடத்துக்குச் செல்லுகிறேன்
காளைநீ அப்போதும் அங்கேயும் வருவாயோ?" என்பதுதான் அக்கேள்வி!

புரிந்து கொண்டான் அவள் உள்ளம்; பின்னர்
பிரிந்து சென்றார் புன்னகை புரிந்தவாறே!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 10:58 pm)
பார்வை : 145


மேலே