நடுக்கத்தில் கண்ட நயம்!

* "உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்ளுகிர்
மாரிக்கொக்கின் கூரலகு அன்ன
குண்டுநீ ராம்பல் கண்துறை யூரன்
தேங்கம ழைம்பால் பற்றி யென் வயின்
வான்கோல் எல்வளை வெளவிய பூசல்
சினவிய முகத்துச் சினவாது சென்றுநின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனையூர்ப்
பல்லா நெடுநிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும்
நன்னர் ஆளன் நடுங்கஞர் நிலையே."

(நற்றிணை: பாடல்: 100 பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம்

வள்ளுகிர் மாரி=பெரிய நகம் கொண்ட பறவையினம்.
தேம் கமழ் ஐம்பால்= நெய் மணக்கும் கூந்தல்.
எல்வளை=ஒளியுடைய வளையல். ஒய்யும்=இழுத்து வரும்.
முந்தை=முன். புலம்பிரி= வேற்று நாட்டு. வயிரியர்=கூத்தர்.
மண் ஆர் கண்= மார்ச்சனை எனும் கரிய சாந்து வைத்த பக்கம்

வெல்லம்போல் பரத்தையின் உடலைச் சுவைத்து;
இல்லம் ஒன்றிருப்பதையும்; அங்கே தனக்காகக்

கள்ளமில்லாப் பெண்டொருத்தி கண்ணீர் உகுத்துக்
கவலை மிகக் கொண்டிளைத்துத் தேய்வதையும்;

எண்ணிப்பார்த்திடவே இமைப்பொழுது நேரமின்றி
கண்ணிக்குள் அகப்பட்ட பறவைபோல் காளையவன்

கலவியின்பக் கலையனைத்தும் கண்டு கண்டு;
காமத்துப்பால் பருகிக்கிடந்தான் மொண்டு மொண்டு!

இன்பத்துப்பாலுக்கென இன்னும் சில குறள் எழுத
இனியொரு முறை வள்ளுவனும் பிறந்து வரவேண்டுமென;

இனிதினிதாய்ப் புதிது புதிதாய் இருவரும் புதையல் தோண்டி எடுத்தனர்!
ஈருடல் ஓருடலாய் இணைந்து புரண்டனர்; இதழால் நனைந்து; பிணைந்து உருண்டனர்!

தெவிட்டியதோ தேன்? அல்லால்; தெளிந்ததுவோ இதயவான்?
தேரேறிச் சென்றுவிட்டான் தன் தேவியினைத் தேற்றி வாழ!

இழந்துவிட்ட பொருளென்று வலியவந்து;
இருகையில் ஏறிக்கொண்ட விந்தைபோல,

மறந்துவிட்டான் என்றிருந்த மணவாளன் மீண்டும்
திறந்துவிட்ட கூண்டுகிளிபோல திரும்பி வந்தாலே;

பறந்துவிட்டதடி கவலையென்று தோழியின் தோள் பற்றிப்
பத்தினியாள் மகிழ்ச்சியினல் விழுந்திடாமல் சாய்ந்து நின்றாள்!

தலைவியின் வீடு சேர்ந்த தலைவனை மீண்டும் காணத்
தவித்திட்ட பரத்தையோ; தந்திரமொன்று செய்தாள்!

தலைவியின் தோழியினை வீட்டுக்க்ழைத்துத்
தலைவனுடன் ஒட்டியுறவாடித் தான் வாழ்ந்தபோது;

நடந்த கதையொன்றைச் சொல்லி அந்த
நகைச்சுவைத் துணுக்காகத் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்!

"தோழி நீயொன்று அறிவாயா? தோகையெனது
தோள்தொத்திக் காளையவன் சுகித்திருந்தபோது;

கொக்கின் மூக்கைப்போல் நீண்டிருக்கும்
குளத்து ஆம்பல் மலர் குலுங்கும் ஊரான்;

கோபத்தில் ஒருநாள் கோதையென் மீது பாய்ந்து
கூந்தல்தனைப் பற்றியிழுத்ததோடமையாமல்;

கைவளையலையும் கழற்றுவதற்கு முனைந்து;
கடுகடுத்த முகத்துடனே குதித்தோடி வந்தான்!

ஆத்திரம் கொள்ளாதே தலைவா! பொறுத்திடுக!
அமைதி நீ கொள்ளாவிடில்; இக்கணமே இச்செய்தியினை;

உன் அருமைமிகு மனைவிக்கு அறிவிப்பேன் என நான்
உரைத்ததுதான் தாமதம்; உடன் என்ன ஆனான் தலைவன் என்று;

உன்னிடம் சொல்வதற்கே இயலாமல் நான்
ஒருத்தி மட்டும் தனியாகச் சிரிக்கின்றேன் ஓயாமல்!" என்றாள்!

"அப்படியென்னதான் நடந்தது? அதை நானறியச்
செப்புக பெண்ணே"யென்றாள், செந்தாழம்பூத் தோழி!

"ஆநிரை கவர்வதற்கு வில்லேந்திப் போர்புரிந்து
ஆர்த்தெழுந்த பகைவர்களை வென்றுகாட்டி,

மானமுரசு கொட்டி வாழுகின்ற நமது மன்னன்
மலையமானின் அத்தாணி மண்டபத்தில்;

வேற்று நாட்டினின்றும் பரிசில்பெற வந்துள்ள - இசைக்
கூத்தர்கள் கொட்டுகின்ற மத்தளத்தில்

அவர்தம் கைவிரல்கள் பட்டு "மார்ச்சனை" வைத்தபக்கம்
அதிர்வது போல் அவன் உடல் முழுதும் நடுங்கியது கண்டேன்" என்றாள்!

இச் செய்தியினைத் தோழி சென்று அவன் இல்லத்தரசியன் காதில் போட்டுவிட்டால்;
"சிச்சி! இவரும் ஒரு மனிதரா?" என அவன் துணைவி வெறுப்பாளென்றும்

காய்ச்சிய பால்மீண்டும் காராம் பசுவின் மடி புகுந்தது போல்;
கைவிட்டுச் சென்ற தலைவன்; துணைவியைக் கைவிட்டுத் தன்
கட்டிலறை நாடி ஓடி வருவான் என்றும்;

கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் அக்கலையழகி; அவள்
கனவு பலித்ததா இல்லையா என்பது பற்றி;

நற்றிணையில் பாடல் இயற்றிய பரணராம்
நற்கவிஞர் சொல்லவேயில்லை; பிறகு நமக்கேன் கவலை?

எனினும்;
"மனைவிக்கு உரைத்திடவா?" எனக் கேட்டவுடன்
மத்தளத்தைக் கொட்டி முழக்குகையில் - அதன்

"மார்ச்சனை" வைத்த பக்கம் அதிர்வது போல்
மாவீரன் நடுக்கமுற்றான் என்பதில்தான் என்ன நயம்! என்ன நயம்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:00 pm)
பார்வை : 113


பிரபல கவிஞர்கள்

மேலே