உலைக் களத்து இரும்பும் ஒரு துளி நீரும்!

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவ€ரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,

அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்க நின்வேலே!"

(புறநானூறு: பாடல் :21 பாடியவர் : ஐயூர் மூலங்கிழார்)
பொருள் விளக்கம்:
புலவரை இறந்த=பாடுவோரின் அறிவின் எல்லையைக் கடந்த,
நிலவரை= பூமியின் ஆழம், புரிசை=மதில்
ஞாயில்=கோட்டையின் உச்சியில் உள்ள ஏவறை,
மிளை= காவற்காடு. குறும்பு= சிறிய அரண். ஆடுகொள= வெற்றி கொள்ள.

சின்ன மருது, பெரிய மருது என சிவகெங்கைச் சிமை ஆட்;
சிவந்தமண்ணின் வரலாற்றில் செங்குருதி மலராய்ப் பூத்த
சிங்கநெஞ்ச மாவீரர் இருவருக்கும் சிலைகள் இருக்கின்ற,
காளையார்கோயிலுக்குப் பழங்காலத் தமிழகத்தில்;
"கானப்பேர்" என்று பெயர் உண்டு; இன்றும் அது,
மானப்போர் தொடுக்கின்ற மறவர்பூமி - அங்கு;
வேங்கை மார்பன் எனும் குறுநில வேல்வேந்தன்
ஓங்குபுகழ் கொண்ட அரண் ஒன்று அமைத்து - அதனை
வெற்றி கொள்ள யாரால் முடியுமென அறைகூவல் விடுத்திருந்தான்.
அணுவைத் துளைத்து அதற்குள் நுழையவும் கூடும் - ஆனால் அந்த
அரணுக்குள் நுழைதல் இயலாதென்று
அடலேறு வீரரெல்லாம் திகைத்து நின்றார்!
அப்போது பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி;
அரிமாதான் போர்க்களத்தில்!
ஆனைகளைத் தூக்கிப் பந்தாடும் பலமுடையான்!
அவன் வாளுக்குத் தப்பிப் பகைவர் உயிர் வாழ்தல் அரிதரிது!
ஆற்றல் பெருக்குடனே அறிவார்ந்த கலையுள்ளம் கொண்டதாலே;
அகநானூறு பாடல்களைத் தொகுத்தளித்துப் பெருமை பெற்றேன்.
அணையாச் சுடர் விளக்காம் திருக்குறளின் நலம்பாடும்
அரங்கேற்றுவிழா அவன் முன்னிலையில்தான் நடந்ததென்பார்!
ஒளவை ஒருநாள்; அவனும், சோழன் பெருநற்கிள்ளியும்
அவர்களுடன் சேரமான் மாரிவெண்கோவும் வீற்றிருந்த காட்சி கண்டு,

அருந்தமிழ்க் கவியாரம் தொடுத்துச் சூட்டி,
அங்கு மூவேந்தர் ஒற்றுமைக்கு வாழ்த்துரைத்தாள்.

கயற்கொடி கொண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி
கயல்விழி மங்கையொருத்திக்கும் காதலனும் - அந்தக்
காதற்கிழத்தியுடன் ஒருநாள் கட்டிலறைக் காவியம் படித்தபோது;
அவள்
கடைவிழியோரம் வினாக்குறியைத் தொங்கவிட்டு,
"கண்ணாளா! எனக்கோர் ஐயம் போக்கிடுக" என்றாள்.

"என்ன கண்ணே; உனக்கு ஐயம்? அதோ நீந்துகின்ற
அன்னத்தின் தூவிபோல் மென்மை உனக்கு
எப்படி வந்ததென்று என்னைக் கேட்கின்றாயா? அல்லது
வண்டுகள் கொண்டுவந்து கொட்டாமலே உன் வாயிதழில்
மொண்டு குடிக்கின்றேனே தேன்; அது
வந்தவிதம் தெரிந்துகொள்ள விரும்புகின்றாயா?

செந்தாமரையைப் பார்த்துச் செய்யப்பட்டது உன் முகமா? அல்லது
செல்வமே! உன் முகம் பார்த்துத்தான் செந்தாமரை உருவானதோ என்ற ஐயமா?

செண்டு இரண்டும் தாங்காமல் - குளத்தில்
கெண்டைக்குப் போட்ட தூண்டிலில் நெளிகின்ற புழுப்போல
நெளியும் இடை நிலைக்குமா? அல்லது
ஒளியுமிழும் உன் தந்தத் தொடைகள் அதனைத் தூக்கி நிறுத்துமா?
உன் மனத்தில்
விளைந்த ஐயமெல்லாம் இதுதானே?" எனக் கேட்ட வழுதியின்முன்;
வளைந்த கதிர்போல தலை நாணிக்கொண்டு அவள்;
"என்மீது கவிதையெழுதிப் பரிசுபெறக் கேள்வி எழுப்பவில்லை நான்!
"எயில்" என்றால் இன்பத்தமிழில் பொருள் என்ன? சொல்லுங்கள்" என்றாள்!

"அட, மடமயிலே! இது தெரியாதா?
அயலார் படை தடுக்க;
அரண்கட்டுகின்றோமே தலைநகரைச் சுற்றி -
அதற்குப் பெயர்தான் "எயில்" என்றான் மன்னன்!

"எனக்கும் தெரியும் அது; ஆனாலும் ஒன்று!
எவராலும் உடைக்க முடியாத "எயில்" ஒன்று இருக்கிறதாம்; - அதனை

இவராலும் நெருங்கொணாது என ஒரு வேந்தன்,
இறுமாப்பு துள்ளப் பேசுவதை அறியீரோ?" எனக் கேட்டு
"இவராலும்" என்றபோது; வழுதியைச் சுட்டிக்காட்டிக் கட்டிக்கொண்டாள்!

"காதுவழி எனக்கும் எட்டியது அச்செய்தி
கானப்பேர் எனும் நகரில் கட்டியதாம் அந்த அரண்! - நமது
அவைப்புலவர் ஐயூர் மூலங்கிழார் அது குறித்து
அரியதோர் வர்ணனையை செய்துள்ளார்!
அதை நான் உனக்குச் சொல்லுகின்றேன் கேள்;
அரண்களின் வரிசையில் அதற்கு முதலிடமே பொருந்தும்!
நிலத்தின் ஆழத்தையும் கடந்த நெடியதோர் அகழியும்,
நீலவானை நிமிர்ந்து தொடுகின்ற நிலையில் உயர்மதிலும், அவ்வானில்

நிறைந்து கிடக்கும் விண்மீன்கள் போன்று
விரைந்து செயலாற்றும் ஏவறை உச்சியும்,
கதிரவனின் ஒளிபுகவும் இடமின்றி மரம் செறிந்த காவற்காடும்,
கணக்கிலாச் சிறுசிறு துணை அரண்களும் சூழ்ந்ததே
களிறுகள் ஆயிரம் முட்டினும் அசைந்திடாத கானப்பேர் எயில்!

அதனை நம் புலவர்;
கவித் தமிழால் கூறக் கேட்டு நான் பலமுறையும்
களிப்புற்றிருக்கின்றேன்" என்றான் மன்னன்!
"பாண்டியர்க்கு நெடுந்தூரம் இருக்கின்ற பகையெல்லாம் தெரிகிறது;
கூண்டிலிட்ட புலிபோல எதிரிகளைக் கொண்டு வருகின்றீர்; ஆயினும்

பக்கத்தில் கானப்பேர் எனும் நகரில் அரண் அமைத்து
படைகொண்டு எவராலும் நெருங்கமுடியாதென்று
உடைவாளை ஓங்கிக்கொண்டு
ஊர் அதிர ஒலிக்கின்றான், வேங்கைமார்பன்!
நமது வீரத்தை மறைமுகமாய்ப் பழித்தபின்னும்
நமக்கென்ன என்றிருத்தல் நாணத்தகும் செயலன்றோ? - என் இதய

ஆழத்தின் அடியிற் கிடந்த பலநாள்
ஐயத்தை இன்றிழுத்துப் போட்டுவிட்டேன்; மதங்கொண்ட
வேழத்தைக்கூட எதிர்த்து மத்தகத்தைப் பிளந்தெறியும் மன்னருக்கு;
வேங்கைமார்பன்ன கட்டியுள்ள மதில் சுவரென்ன; விந்திய மலைத் தொடரா? அவன்
தோண்டியுள்ள அகழியோர் ஆழ்க்கடலாயினும்; என்
பாண்டியர்க்குத் தாண்டும் தொலைவுதானே!

பின் எதற்காக
அறைகூவல் விடுக்கின்ற வேங்கைமார்பன்
ஆணவங்கண்டும் அடங்கிக் கிடக்கவேண்டும்?
அரசர் இந்த ஐயத்தைப் போக்கிடுக - அதன்பிறகு
சரசமாடிடலாம்" என ஊடினாள்! பாண்டியனோ,
எட்டிச் செல்ல முயன்றவளைக்
கட்டியண€த்துக் கால்பின்னி நெய்தவாறு,
"காலைமலரட்டும் கானப்பேர் எயில் நோக்கிக்
காலாட் களிறு புரவியுடன் தேர்ப்படை புறப்படக்
கட்டளையிடுகின்றேன்; கவலையைவிடு! இப்போது தடுக்கின்ற
கையினை எடு" என்றான் - எடுத்துவிட்டாள்!

கண்ணிமைக்கும் பொழுதுக்குள் ஊடல் பறந்தது -
கதிர்விரியும் நேரம் வரை கூடல் தொடர்ந்தது!

மறுநாள்
வாக்குறுதி தந்தவாறு பாண்டிமாதேவியின்
நோக்கு நிறைவேறக் கிளம்பியது படைவரிசை!
கானப்பேர்எயில் என்னம் காவல்நிறை அரணை மோதி,
கடுமைப்போர் நடத்திப்பின்னர் முற்றுகையை முடித்துவிட்டான்.

உக்கிரப்பெருவழுதியின் உறுதிமிகு தாக்குதலால்
உருக்குலைந்து போயிற்று வேங்கைமார்பன் கோட்டைக்காவல்!

நெற்றித் திலகமிட்டு வழியனுப்பிவைத்த அரசிக்கு,
வெற்றிச்சேதி சொல்வதற்குப் பாண்டிமன்னன் திரும்பிவந்தான்.
குத்துண்டு புண்பட்ட கோவேந்தன் மார்பகத்தில்
ஒத்தடங்கள் ஓய்வின்றிக் கொடுத்திட்டாள்; உடல் மேட்டால்!
ரத்தம் கசிந்துருகும் விழுப்புண்கள் எல்லாம் - அவள்
முத்தங்கள் பெற்று முழுமையாக ஆறினவே!

சிலநாள் சென்று

ஐயூர் மூலங்கிழார் பாண்டியன் அவைக்கு வந்தார்.
அரசே! மதியாத பகைவரெல்லாம் உமை மதித்துப் புகழ்கின்ற பெருமை என்னே!
களம் சென்றால் வெற்றியன்றி வேறொன்று அறியாத வேந்தே! இன்றுமுதல் உம்மை;
"கானப்பேர்எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி" என
காவியங்கள் பாடட்டும்! கவியரங்கம் புகழட்டும்!
கதிர் உள்ளளவும் அப்பெயரே நிலைக்கட்டும்," எனப்புகன்றார்.
"நன்றி புலவரே!" எனப் பணிந்த வேந்தன்; அவரைப்பார்த்து - இப்போரில்
குன்றிவிட்ட வேங்கைமார்பன், கோபக்கனல் உமிழ
கானப்பேர்எயிலை மீட்பதற்கு மீண்டும்
களம் அமைக்கப்போகின்றானா? எனக்கேட்டான்.
அதற்கு ஐயூர் மூலங்கிழார் சொன்ன பதில்
அரியதோர் உவமையினை அன்னைத்தமிழுக்கு வழங்கியது!

அஃதென்ன?
உலைத்தீயில் கொல்லன் காய்ச்சிடும் இரும்பில்
ஒரு துளி நீர் பட்டால் அந்நீரை மீட்டிடல் முடியுமா?

(அவ்வாறே)

உக்கிரப் பெருவழுதி வென்றுவிட்ட கானப்பேர்எயிலும்
உலைக்களத்து இரும்பு உறிஞ்சிய நீர்த்துளியாய் ஆனது என்று
உமது பெருமையைப் பேசி - வேங்கைமார்பன்
உளம் நொந்து நிற்கின்றான்" என்றார்! - அந்தத்

தங்கப் புலவர் தந்த உவமை அழகுக்குத்
தக்க பரிசு என்ன தருவதென்று புரியாமல்
தவித்திருப்பான் பாண்டியன் என்கின்றேன் நான்;
தவறுண்டா என் கருத்தில்?
தமிழின் சுவை அறிந்தோரே! கூறிடுவீர்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:23 pm)
பார்வை : 106


மேலே