வெளிச்சம் வெளியே இல்லை

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

கவலையும் பயமும்
என்னைக்
கட்டிப் பிடித்துக்கொண்டு
கட்டிலில்
என்னுடன்.

சாயங்காலத்துக்
காற்றுப் போல்
உரிமையோடு
உள்ளே நுழையும்
சலனம்.

விரக்தி-
ஒரு போர்வையாய்
என் தலை முதல்
கால்வரை
போர்த்தியிருக்கும்.

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

நம்பிக்கையிடம்
சலனமும் பெரு மூச்சும்
சண்டை பிடிக்க
பயம் ஓடிச்சென்று
பரிகாசம் செய்கிறது:

“ஐயன்மீர் யாரோ?
ஓ…
பழைய நண்பரா?

பார்வையாளர் நேரம்
முடிந்துவிட்டது…
பயனெதுவும் இல்லை.

போவீர்… வருவீர்
போய் வருவீர்!”

வேக வேகமாய்
வந்த
விரக்தி
விரட்டுகிறது:

“அவசியம்
பார்க்க வேண்டுமென்று
அடம் பிடிக்காதே.

அவரோ -
நூறு வகையான
நோய்களில்
நொந்து போய்ப்

படுத்த படுக்கையில்
படுபாடு படுகிறார்.

இன்றோ நாளையோ
அவர்
இறந்த பிறகு

தந்தி கொடுக்கிறோம்
தாராளமாய் வா.

இப்போது உடனே
இடத்தைக் காலிசெய்!”

நகரா திருக்கும்
நம்பிக்கை
மோதும் குரலில்
முழக்கமிடுகிறது.

“உள்ளே நுழைவதைத்
தடுக்கிறீர்கள்…

எனது
உரத்த குரலினை
என்ன செய்வீர்கள்?”

பயமும் கவலையும்
பஞ்சினைத் தேடின…
என்
காதுகளை அடைக்கக்
கனத்த முயற்சிகள்…

குறுக்கீடுகளைத்
தாண்டி
நம்பிக்கை
குரல் கொடுக்கிறது:

“தோழனே!
ஓ! என் தோழனே!
நான் தான் உனது
நம்பிக்கை நண்பன்.

சுதந்திரக் கொடியின்
சுடரொளியாக
உச்சிக் கம்பத்தில்
உயரப் பறந்த நீ
ஏன் இப்போது

அரைக் கம்பத்தில்
இறங்கி
அழத் தொடங்குகிறாய்?

அவிழ்க்க முடியாமல்
உன்னை
அவதிப் படுத்தும்
விரக்தியின் முடிச்சுகளை
வெட்டி எறி!

உன்னுடைய
புண்களின் மீது
புன்னகையைத் தடவு!

எதிர் காலத்தை
எழுதுவதற்கு
உன்
மனதில் பட்ட
காயங்களில்
மை தொட்டுக் கொள்!

போர்வைகளில்
ஏன் இப்படிப்
புதைந்து கிடக்கிறாய்?

விழித்து நீ
எழுந்தால்
விலங்குகளே நொறுங்கும்!

சின்ன நூல்கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?”

நம்பிக்கையின்
வார்த்தை மின்சாரம்
நரம்புகளில் பாய்ந்து

உறக்கத்தைக்
கலைத்து
உசுப்பிவிட

விரக்திப் போர்வையை
வீசி எறிந்தேன் -

கவலை பயங்களை
ஓரத்தில் விழும்படி
உதறி எழுந்தேன்

தடைகளை மீறித்
தாழ்ப்பாள் திறந்து

அருமை நண்பனை
உள்ளே
அழைத்தேன்!

நானும்
நம்பிக்கையும்
கை குலுக்கிக் கொண்டு
நாற்காலிகளில்
அருகருகே
அமர்ந்திருக்க

எடுபிடி வேலை
செய்யத் துவங்கின
இதுவரை என்னை
ஏவிக்கொண்டிருந்த
கவலையும் பயமும்.

தேநீர் கொண்டுவந்து
மேசையில் வைத்து
“சர்க்கரை போதுமா
சார்?” என்று கேட்டன.

சலனம்-
பெருமூச்சோடு
காலிக் கோப்பைகளை
எடுத்துச் சென்று
கழுவி வைத்தது…

விரக்தி மட்டும்
ஒரு கௌரவமான
வில்லன் போல்
விடைபெற்றுக் கொண்டு
வெளியேறியது!


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:30 pm)
பார்வை : 28


மேலே