விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!

நரேந்திரன் ஒரு விழிப்புணர்வு பெற்ற இளைஞனாக இருந்ததால்தான் தன்னைக் கடந்து மானுடநலம் சார்ந்து அவனால் சிந்திக்க முடிந்தது. வாழ்வியல் பிரச்சினைகளின் தீர்வுகளை கையில் சுமந்து கொண்டிருந்த பட்டங்களையும், வாசித்த புத்தகங்களையும் கடந்தும் அவன் தேடியதன் விளைவாகத்தான் அவனுக்குள் ஞானம் குடிகொண்டது. நரேந்திர தத்தா என்னும் சராசரி மனிதன் விவேகானந்தர் ஆனார்.

வாழ்வியல் தேடலின் பிரதிபலிப்பாய் ஆன்மீகம் இருப்பதை அறிந்திருக்கும் உலகத்தீர், ஆன்மீகம் என்பதற்கு யார் யாரோ பின்பற்றும் மூடநம்பிக்கைகளை மட்டும் உதாரணமாகக் காண்பித்து விட்டு தங்களை அறிவு ஜீவிகள் என்ற உறைக்குள் புதைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த தேடல் உடையவர்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர்.

கடவுளை நம்புவனுக்கும் கடவுளைத் தேடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுளைத் நம்புபவன் யாரோ ஒருவரிடம் கோரிக்கைகளை வைத்து விட்டு ஆட்டு மந்தையைப் போல எதையோ பின்பற்றுகிறான், ஆனால் கடவுளைத் தேடுபவன், படைப்பின் அற்புதத்தை ருசித்து விட்டு இதன் மூலமும் எப்படி வந்து இருக்கும் என்ற ஆர்வ மிகுதியால் வாழ்க்கை என்னும் அற்புதத்திற்கு பின்னாலிருக்கும் அதிசயத்தை தேடி அலைகிறான்.

கோபம், காமம், தூக்கம், காமம், பசி இந்த ஐந்து உணர்வுகளை மட்டும் கொண்டிருந்து அதை மையப்படுத்தியே வாழ முற்படுவாயின் அவன் விலங்கை ஒத்தவனாகிறான். அதனைக் கடந்து இவை எல்லாம் ஏன் தோன்றுகின்றன? எங்கே நகர்கிறது வாழ்க்கை என்று உள்ளுணர்வு விழித்தெழும் போது அவன் ஆன்ம விசாரத்தை தொடங்குகிறான்.

நான் பிறந்திருக்கிறேன். சிரிக்கிறேன், கதைக்கிறேன், அழுகிறேன், என்னவெல்லாமோ செய்கிறேன் எனது நகர்வு எதை நோக்கி என்று சிந்திக்காமல் இட்டதை உண்டு, கிடைத்ததை குடித்து ஒரு தெரு நாய் சாலையைக் கடக்கையில் மரித்துப் போவது போல மரித்தலில் என்ன சிறப்பு இருக்கிறது...

நரேந்திரன் தன்னை உணர்ந்ததால் மட்டும் விவேகானந்தர் ஆகவில்லை. அவர் இயல்பிலேயே தன்னை உணர்ந்தவராய் தியானம் என்ற மன ஒருநிலை கூடியவராய் பிறந்திருந்தார் ஆனால் அவர் வாழ்க்கையையும் சக மனிதர்களையும், தான் சார்ந்திருந்த மண்ணின் மகத்துவங்களையும், கடவுள் என்ற விசயத்தில் பதிந்து கிடந்த விஞ்ஞானத்தையும் உணர்ந்த போதுதான் விவேகானந்தர் ஆனார்.

" எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்”

விவேகானந்தர் உத்வேகம் கொடுத்து இளையர் சக்தியை உசுப்பேற்றி விட்ட ஒப்பற்ற இந்திய தேசத்தின் இளம் தலைவர். தான் சார்ந்து இருந்த மண்ணில் வேறோடு பற்றியிருந்த ஒரு சித்தாந்தத்தை உணர்ந்து வேதாந்தப் பாடங்களின் தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான வடிவங்களை உள்வாங்கிக் கொண்டு அதை செயல்வடிவமாக்கிய சூத்திரதாரி.

கடவுள் தேடலின் உச்சத்தில் விவேகானந்தருக்கு கிடைத்த தெளிவுதான் இந்திய தேசத்தின் ஆன்மீக வரலாற்றின் மீது விழுந்த ஒரு புதிய பரந்த வெளிச்சம். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தன்னம்பிகையும், சுய சீர்திருத்தமுமே நிரம்பிக் கிடந்தது.

கடவுள் என்பது நம்மை விட்டு எங்கோ அமர்ந்திருக்கும் ஒரு மனிதரல்ல அவர் சிலருக்கு கொடுத்து சிலருக்கு மறுப்பதற்கு....கடவுள் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களே....பண்படுத்தப்பட்டு தன்னை சரியாக வைத்திருக்கும் ஒருவன் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஜெயிக்கிறான். தன்னைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் யாரோ வந்து ஏதோ அதிசயம் செய்வான் என்று நம்பும் சோம்பேறி தோற்கிறான்.

39 வயதில் விவேகானந்தரின் ஆயுள் முடிவடைந்தது அல்லது முடித்துக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். பிரம்மத்தின் வலுவான சக்தி விவேகானந்தர் என்னும் உடலுக்குள் சென்று அற்புதமான விளைவுகளை பாரத தேசத்தில் உருவாக்கத்தான் செய்தது.

இந்திய தேசத்திலிருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மிகப்பெரிய ரோல் மாடலாய் விவேகானந்தர்தான் இருக்க முடியும். மொழி, இனம், மதம் சாதி என்று எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு விவேகானந்தரின் வாழ்க்கையை வாசிக்கும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையும் சர்வ நிச்சமாய் மாறித்தான் போகும்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரின் கருத்துக்களை பற்றியும் நாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.. அவற்றை எல்லாம் இன்றைய இளையர்கள் எடுத்து வாசிப்பதோடு மட்டுமில்லாமல்....ஆன்ம விசாரணையையும் அறிவுத் தேடலையும், உரம் கொண்ட உறுதியான செயல்களையும், தெளிவான பார்வைகளையும் கைக் கொள்ளத்தான் வேண்டும்.

நமது தேசத்தின் வருங்காலம் முழுக்க முழுக்க இருப்பது இளையர்கள் கையில்தான். உலக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது சராசரியில் இளையர்கள் நிறைந்த ஒரு நாடாக இருக்கும் இந்தியாவை சர்வதேசம் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீரத் துறவி விவேகானந்தரின் இந்த 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வேளையில் இந்திய இளையர்கள் அவரைப் போலவே தெளிவான பார்வையுடனும் வலுவான ஆன்ம பலத்தோடும் எழுச்சி பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

" நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே "

என்ற விவேகானந்தரின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை அறிவோம்...! உத்வேகம் கொண்ட இளையராய் இந்த தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாய் மாறுவோம்...!

எழுதியவர் : Dheva.S (13-Jan-13, 6:01 pm)
பார்வை : 450

மேலே