மாடு புடிக்க வாரியளா...?!

ஏறு தழுவுதல்னுதானே சல்லிக்கட்டை அப்பவே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்க...இன்னிக்கு புதுசா வந்து மிருக வதை லொட்டு லொசுக்குன்னு கோர்ட்ல கேச போட்டுகிட்டு...என்னாப்பு நீங்க...? ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ரெகுலேசன் எல்லாம் வச்சிகிட்டு, காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு இருந்த விசயதை இம்புட்டு சீரியசா ஆக்கிபுட்டியளே....
சல்லிகட்டுல மாடு குத்திதேன் மனுசங்க செத்துப் போயிருப்பாய்ங்கன்னு பேப்பர்ல படிச்சி இருப்பீக...? எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா என்ன மாட்ட தும்புறுத்துறதா....? அங்க அங்க சில பேரு அத்து மீறி இருப்பாய்ங்க...அது கழுத எல்லா பொழப்புலயும்தானே அத்து மீறிப் போற ஆளுக இருக்கு....

சல்லிகட்டு எங்களுக்கு வீர வெளையாட்டுப்பா...?என்னாண்டு நினைச்சீய..? இதுல என்னப்பு வீரம் இருக்குன்னு கேக்கிறியளா...? மாட்டை புடிச்சு அடக்கி கீழ தள்ளி மேல ஏறி நிக்கிறதுதான் சல்லிக்கட்டுன்னு யாரு சொன்னது....அப்டி எல்லாம் செய்றது இல்லப்பு சல்லிக்கட்டுனா...

மாட்ட வெரசா வெரட்டிகிட்டு போயி அதோடு திமிலிசங்கைய புடிச்சி கட்டிப் புடிச்சிகிட்டு, கீழ விழுந்துறாம வெரசா மாட்டோட வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமா ஒடியாரணுமப்பே...மாடு குத்தப் பாக்கும், சில நேரம் குத்தியேபுறும், அங்கிட்டு இங்கிட்டு தள்ளி நம்மள விழுத்தாட்டப் பாக்கும் அம்புட்டையும் தாங்கி கிட்டு ரெம்ப நேரம் யாரு நிக்கிறானோ அவென் செயிச்சவன்...
மாட்டு புடிக்கிறதுல என்ன வீரம்னு கேப்பாய்ங்க..நீங்க அம்மூரு மாடுகள வந்து பாக்கணும்...தீனியப் போட்டு,...கொம்புகளை சீவி சிங்காரமா இதுக்காண்டியே வளர்த்தி வச்சு இருப்பாய்ங்க...! மாடுன்னு சொன்னா அது மிருகந்தேன்..அதுக்கு ஒரு கூறு மாறும் தெரியாது ஆனா மனுசப்பயலுக்கு கூறு மாறு தெரியும்ல...

மாடு எங்கிட்டு எப்போ திரும்புதுன்னு மனுசப்பயலாள ரோசிக்கவே முடியாது...
அங்கிட்டு திரும்பும், இங்கிட்டு பாத்து முறைக்கும், முன்னாடி இருக்க கால சிராண்டிகிட்டே நம்மள குத்தறதுக்கு குறிபாக்கும், வாலை தூக்கும்...முன்னாடி பாயும், பின்னாடி கால எட்டி ஒதைக்கிம், அங்கிட்டு போகுதுன்னு நினைப்பீக லவக்குன்னு இங்கிட்டு வெரசா திரும்பும்...,
அசந்து மசந்து நின்னியன்னு வச்சிகிறுங்க...எந்தப்பக்கட்டு சதைய குத்தி கிழிக்கும்னு நமக்கே தெரியாது...! ஒண்ணுந்தெரியாட்டி லவக்குனு கீழ படுத்துக்கிட்டியன்னா பேயாம திரும்பிகிட்டு போயிறும்..ஓடி ஒளிஞ்சறாலாம்னு வெரசா ஓடினா வெரட்டி வந்து குத்தும்...
கனமான மாடுகள எவ்விப் புடிக்கறதுக்கு முன்னாடி நம்மள் எவ்வி குத்தியேபுடுமப்பே...வவுத்துல குத்தி தூக்கி எறிஞ்சுச்சுனா... அம்புட்டுதேன்....குடலு வேற குந்தாணி வேறயா போயி விழுக வேண்டியதுதேன்....!

அம்புட்டும் தெரிஞ்சும் அந்த உசுர துச்சமா மதிச்சு மாடுக கிட்ட போயி அதுவும் பெல்லா கோவக்கார மாடுகளா பாத்து அதுக மேல பாஞ்சு திமிலி சங்கிய புடிச்சு அணைச்சுகிட்டு போகையில் மனசு பூரா காத்துல பறக்குற மாதிரி இருக்கும் பாருங்க....அதேன்...அதேன் சந்தோசம்....!

மாடு குத்திபுறும்னு தெரிஞ்சும், குத்தினா செத்துப் போயிருவோம்னு புரிஞ்சும் போயி மாட்ட புடிக்கிறோம் பாத்தியளா அது வீரந்தானே....!
இளந்தாரிப் பயலுக இப்படி சாடிப் போயி மாடு புடிக்கிறது எல்லாம் அதுவும் முரட்டு மாடுகளை பிடிக்கிறது எல்லாம் வீரம்யா...வீரம்..பொறவு இதை என்னாண்டு சொல்லுவிய? மாடு குத்தி பத்து பன்னெண்டு தையலுகள போட்டுகிட்டு அடுத்த சல்லிகட்டுக்கு வந்து நின்ன பயலுக எங்கூர்ல ரெம்பப் பேரப்பே....! சும்மா காச்சுக்கும் ஓடிப்பிடிச்சு வெளையாடுற வெளையாட்டு இல்ல இது....சல்லிக்கட்டுன்னா...தமிழப்பயலுகளோட வீர வெளையாட்டு...!

வயக்காட்ல நின்னு விதை போட்டு தண்ணி பாச்சி, ஏறு ஓட்டி உழுது, களையெடுத்து, நட்டு, வெள்ளாமை செஞ்சு, கதிரறுத்து, பொனையடிச்சு, தூத்தி, அதை நெல்லா ஆக்கி அதை மூடையில கட்டி இந்தா......அப்டி முதுகுல தூக்கி பாரவண்டியில இப்டி இறக்கி வைக்கியில மனசு ரெக்கை கட்டி பறக்குமப்பு...
வயக்காட்டுப் பொழப்பு கஷ்டப்பாடு பொழப்புதேன்...ஆனா அடிமை பொழப்பு இல்லப்பு...வலியோட செஞ்சாலும் மனசு நெறஞ்சு செய்யிறோம்....

சொல்ல வந்த சோலிய மறந்து போயிட்டேன் பாருங்க...அம்மூர்ல நாளைக்கி சல்லிகட்டு வந்திருங்கப்பு...., மாடுகளை இளந்தாரிக புடிக்கிறதும், புடிமாடுகளைக் கொண்டு வந்தவைங்க மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு அழுகுறதும்னு..........ஒரே ஆட்டமாத்தான் நிப்போம்....,அம்ம வீட்டுக்கு வந்துருங்க...சாப்டு கீப்டுபுட்டு...போயி மாடு புடிக்கலாம்...!

எழுதியவர் : Dheva.S (14-Jan-13, 11:23 am)
பார்வை : 145

மேலே