சேராத கனவினில்... தீராத நினைவுகள்.

அன்புள்ள ஆனந்திக்கு... உன் பால்ய தோழி வான்மதி எழுதுவது,.......


அகில் மணக்கும் அத்தி மரம்!
பிடித்து வளைய வந்து விளையாடிய
நம் கால்த்தடம் இன்னும் அங்கே அழியவே
இல்லை தோழி...

உன் வீட்டுக் கோழிமடம்
உள்ளே ஒழிந்து கிடக்கின்றன நம்
கண்ணாம்பூச்சி நினைவுகள்...!

கிணத்தடியில் நீர் இறைத்து
சிமெண்டுத்தொட்டி நிரப்பி முடித்து..
ஈரப் பாவாடைகளை பிழிந்த நாட்கள்
இன்னும் காயமல் குளிர்கிறது...

தேக்குதூண் ஊனிய வாசல் திண்ணை
மேல் வளைந்திருக்கும் மோட்டு
ஓடுகளின் இடைவெளிக்குள் நம் குருவிக்கூடு
இன்னும் கீறிச்சிடுகிறது... காதோரம்...

தாளம்பூ பறிக்கச்சென்று
பாம்பு பார்த்து பதறினோமே!
யாரும் பார்க்கவில்லை அப்பாடா! என
நிம்மதிப் பட்டுக்கொண்ட கூத்துக்கள்...
மெய்சிலிர்த்து ரசிக்கிறேன்..

வியாழன் சந்தைக்கு நீ வரவில்லை என்றதும்
நானும் போமாட்டேன் என்று
மாட்டுவண்டியில் இருந்து
எகிறிக்குதித்து சிராய்த்த காயம்...
சின்னத்தழும்பாய்...சிரிக்கிறது...

அணைக்காரப்பட்டியில் திருவிழாவுக்கு
குடைராட்டினம் சுற்றினோமே நினைவில் வைத்திருக்கிறாயா! எனக்கு இருக்கிறது..
என்னவெல்லாம் எனக்கு தைரியம் சொல்லுவாய்
அன்று அப்படி கத்தினாயே... பயந்தாங்கோழி!

தட்டான் பிடிப்பதில் நீ தான் மகா கில்லாடி
எனத்தம்பட்டம் அடிப்பாயே! நானும் எத்தனை முறை
அருகி வந்தும் பட்டெனப்பறந்து போகும்
தட்டானை இப்போது நம் ஊரில் பார்க்கவே முடிவதில்லை...!

சென்ற வாரம் விகடன் வாங்கிப்புரட்டினேன்
நம் பழைய புகைப்படத்தைபோட்டு என் பெயரையும்
சுட்டி பால்ய தோழி வான்மதியைத்தேடுகின்றேன்
என எழுதி இருக்கிறாய்...

என்னையும் உன்னையும் தவிர யாருக்கும் அடையாளம் தெரியாத என் புகைப்படத்தை பார்த்து
எப்படி அழுதுச்சிரித்தேன் தெரியுமா!

இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாயே..! இப்போதே உன் கழுத்தைக்கட்டிக்கொண்டு ....

இல்லை இல்லை உன் கைகளை குறுக்காய் பிடித்து
வேகமாய்ச்சுற்றி... என்னவெல்லாம்
சின்ன வயதில் விளையாண்டு களித்தோமோ
அத்தனையும் வேண்டுமெனக்கு
இந்நிமிடம்!

ஆனாலும்... ஆசைகளை அடுக்களைக்குள்
பூட்டிவைக்கும் வாழ்க்கை எனக்கு..

இதோ என் கணவர் வந்துவிடப்போகிறார்!
இன்னும் தூங்காமல் என்னடி செய்துட்டு இருக்கே என்பார் உறங்கப்போகிறேன் உன் நினைவுகளோடு...

எப்படி என் கனவுகள் உன்னைச்சேராதோ!
அப்படி என் கவிதையும் உன்னைச்சேராதென்பது
உனக்குத்தெரியப் போவதில்லை...

-தோழி வான்மதி



எண்ணம் & எழுத்து
கவிதைக்காரன்

எழுதியவர் : -கவிதைக்காரன்! (4-Feb-13, 3:49 am)
பார்வை : 308

மேலே