காற்றாடிப் பெண்

" ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்..?" என்று சந்தியா கேட்ட கேள்விக்கு பேந்த பேந்த விழித்தான் அச்சு.. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அச்சுவும் சந்தியாவும் சேர்ந்தே பள்ளி செல்வது தான் வழக்கம்.. பள்ளி அவர்களின் வீட்டிலிருந்து மிகவும் தூரமென்பதால் அச்சு சந்தியாவின் வீட்டில் வந்து அவளையும் தன்னுடன் சேர்த்து கூட்டி கொண்டு பள்ளிக்கு செல்வான்.. அவனுக்கு இப்படி வருவது சில சமயங்களில் சலிப்பை உண்டாக்கினாலும் சந்தியாவை அழைத்து செல்ல வரும் போதெல்லாம் அவளின் அம்மா கொடுக்கும் அதிரசம், முறுக்கு போன்ற தின்பண்டங்களுக்காகவும் சந்தியாவின் சிரித்த களையான முகத்திற்க்காகவுமே அதை பொருத்து கொண்டான்.. வயல் வெளிகளும் கோவில் தோட்டங்களும் நிறைந்த அந்த கிராமத்துப் ஒற்றையடிப் பாதைகளில் விளையாடிக் கொண்டே பள்ளிக்கு செல்வதை இருவரும் வழக்கமாக வைத்திருந்தார்கள்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு என்பது அவர்களின் தீர்மானம்.. சண்டை போட்டு கொள்ளமால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு என்றும் ஏதாவது உண்டா...? அவர்களின் விளையாட்டின் இடையே தினமும் சண்டையும் போட்டுக் கொள்வார்கள்.. அன்றும் அப்படியே ஆனது... விடுகதைக்கு விடை தெரியாமல் அச்சு விழிப்பதை கண்டு அவனை கேலி செய்யத் தொடங்கினால் சந்தியா.. இதனால் கோவமடைந்த அச்சு அவளை தொடங்க இருவருக்கும் சண்டை முற்றியது.. என்றும் தன்னை எதிர்த்து அடிக்காத சந்தியா அன்று எதிர்த்து அடிக்க அச்சுவின் கோபம் எல்லை மீறியது.. அவளை பிடித்து அச்சு தள்ளிவிட கீழே விழுந்தவளின் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது... அழுது கொண்டே எழுந்த சந்தியா பள்ளி நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்.. அன்று தான் அந்த வருடத்தின் கடைசிப் பரீட்சை... சந்தியா காயம்பட்டதும் முதலில் வருத்தப்பட்ட அச்சு பிறகு "எப்படி என்னை திருப்பி அடிக்கலாம்...?" என்று தன் செயலுக்கு நியாயம் கற்ப்பித்துக் கொண்டே இருந்தான்.. பரீட்சை முடிந்ததும் அச்சுவை எதிர்பார்க்காமல் சந்தியா வீட்டிற்கு கிளம்பி விட்டாள்...


சந்தியா தன்னை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றது அச்சுவிற்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.. அன்று இரவு தூங்கும் முன்பு "நாளைக்கு காலைல முதலப் போய் சந்தியா கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. இனிமே உங்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சாமி மேல சத்தியம் பண்ணி சொல்லணும்.." என்று நினைத்து கொண்டான்.. மறுநாள் காலை அச்சுவை அவளின் அம்மா எழுப்பினாள் " டேய் அச்சு.. எழுந்திரி டா.." என்றாள்.. தூக்கம் கலையாமல் எழுந்து உட்கார்ந்த அச்சுவிடம் அவளின் அம்மா " டேய் உன் ப்ரெண்ட் சந்தியா, அவங்க அம்மா, அப்பா எல்லாரும் வேற ஊருக்கு போறாங்க... சந்தியாவோட அம்மா உன்ன பாக்கனும்னு சொன்னங்க... போய் ஒரு எட்டு பாத்துட்டு வா டா..." என்றாள்... இதை கேட்டவுடன் தூக்கம் கலைந்த அச்சு சந்தியாவின் வீடு நோக்கி ஓடத் தொடங்கினான்.. சந்தியாவின் வீட்டை அடைந்த அச்சுவை பார்த்து சந்தியாவின் அம்மா " டேய் அச்சு.. வா டா.. உன்ன தான் பாக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்... மாமாவுக்கு வேற ஊருக்கு மாத்தலாகிடிச்சி அச்சு.. அதன் அதான் இங்க இருந்து கெளம்பிட்டு இருக்கோம்.." என்றாள்... "மறுபடியும் எப்போ அத்தை இங்க வருவீங்க.." என்ற அச்சுவிடம் " இனி இங்க வர மாட்டோம் அச்சு.. மெட்ராஸ்க்கு போறோம்.." என்றாள்... அச்சுவிற்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது... இனி சந்தியாவிடம் விளையாட முடியாது என்ற நினைப்பு அவனை மிகவும் கஷ்டப்படுத்தியது.. திடீரென ஏதோ நியாபகம் வந்தவனாய் திரும்பி ஓடினான்.. இரண்டு நாட்களுக்கு முன் சந்தியா அவனிடம் காற்றாடி செய்து தர சொல்லிக் கேட்டிருந்தாள்.. அவள் இங்கு இருந்து போகும் நேரத்தில் அவளுக்கு இந்த காற்றாடியை தர வேண்டும் என்று எண்ணியவன் ஒரு காற்றாடியை செய்து கொண்டு மீண்டும் சந்தியாவின் வீட்டிற்கு வந்த போது அவர்கள் வண்டியுடன் கிளம்பிச் செல்வதற்கு தயாராக இருந்தார்கள்... அச்சு நீட்டிய காற்றாடியை வாங்கி கொண்ட சந்தியா அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்... புழுதிப் பறக்க சென்ற அந்த வண்டி சில நிமிடங்களில் அச்சுவின் கண்களிலிருந்து மறைந்து போனது...

15 வருடங்கள் ஓடிவிட்டன... அச்சு பொறியியல் படித்து விட்டு சில கம்பெனிகளுக்கு வேலைக்காக அப்ளை செய்திருந்தான்.. ஒரு நாள் சென்னைலுள்ள ஒரு கம்பனிலிருந்து நேர்முகத் தேர்விற்காக அச்சுவிற்கு தபால் வந்தது.. பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பிய அச்சுவிற்கு சென்னைக்கு வருவது இது தான் முதல் முறை.. பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் ஒரு ஆட்டோவை பிடித்து எறிக்கொண்டவன் கம்பெனியின் முகவரியை கூற சரியான நேரத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்... படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்திருந்ததால் அச்சு எதிர் பார்த்ததைப் போலவே வேலையும் கிடைத்தது.. நாளையே வேளையில் சேர சொல்லிவிட்டதால் அந்த கம்பெனியில் இருந்த ஒருவரின் உதவியோடு அருகில் இருந்த ஒரு மென் ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கி கொண்டான்.. தனக்கு வேலை கிடைத்து விட்டதை பெற்றோரிடமும் சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டவன் மறுநாள் வேலையில் சேர்ந்து விட்டான்.. சேர்ந்த முதல் நாளே அங்கே இருந்த திவ்யா என்றப் பெண்ணை பார்த்தவனின் கண்கள் அவளையே சுற்றி சுற்றி வந்தது... வேலையில் சேர்ந்து மாதம் இரண்டாகி விட்டது... இந்த இரண்டு மாதத்தில் அச்சுவிற்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள்.. அதில் திவ்யாவும் ஒருத்தி... அச்சுவின் வேடிக்கையான பேச்சை கேட்ப்பதற்க்காக எல்லோரும் அவனிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்... அதிலும் திவ்யா ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூட அச்சுவிடம் வந்து பேசிக்கொண்டிருந்தாள்... அச்சுவின் உடன் இருக்கும் ஆன் நண்பர்கள் " டேய் அச்சு.. திவ்யா யார்கிட்டயும் இப்டி வந்து பேச மாட்டா.. ஆனா உங்கிட்ட மட்டும் சுத்தி சுத்தி வந்து பேசுறா... என்னடா லவ் ஆ..? " என்று கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள்.. அச்சு அதை உள்ளுர ரசித்தாலும் " டேய் அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல டா... அவ ஜஸ்ட் பிரெண்டா தான் என்கிட்ட பழகுறா... அதை தப்பா பேசாதிங்க..." என்று மறுத்து வந்தான்.. அவளின் மேல் அவனுக்கு காதல் இருந்தபோதும் எங்கே தான் காதலை சொல்லி இருக்கின்ற நட்ப்பும் போய் விடுமோ என்று பயந்து கொண்டு அவளாக சொல்லட்டும் என்று அமைதி காத்தான்...

ஒரு நாள் காலை திவ்யா அச்சுவின் காபின் அருகே வந்து " அச்சு.. நாளைக்கு எங்க வீட்ல ஒரு பங்க்சன்... நீ கண்டிப்பா வரணும்.. அருண், கோகுல், ஷீலா, ப்ரியா எல்லாரும் கூட வராங்க... அவங்க கூட நீயும் சேந்து வந்துடு... கண்டிப்பா வரணும்... வரல உங்கிட்ட அப்புறம் பேச மாட்டேன்.." என்று கூறிவிட்டு சென்றாள்... அச்சுவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.. எப்டியாவது அவளோட அம்மா அப்பா ரெண்டு பேர்கிட்டையும் "நல்ல பையன்" அப்டின்னு பேர் வாங்கிடனும்.. " என்று முடிவெடுத்துக் கொண்டான்... மறுநாள் வாரவிடுமுறை என்பதால் மிச்சமிருக்கும் வேலைகளை அவசரகதியில் முடித்து விட்டு அறைக்கு கிளம்பிய அச்சு " காலைல சீக்கிரம் எழுந்திடனும்" என்று முடிவு செய்து கொண்டு தூங்கச் சென்றான்...

"வாம்மா ஷீலா.. நல்லா இருக்கியா..." என்று வாசற்ப்படியில் நின்று வரவேற்றார் திவ்யாவின் அப்பா... "நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க நல்லா இருக்கிங்களா... இவங்க எல்லாருமே எங்க ஆபீஸ் தான் அங்கிள்..." என்ற ஷீலாவைப் பார்த்து "அப்டியா ரொம்ப சந்தோசம்மா... போங்க எல்லாரும் உள்ள போய் உக்காருங்க.." என்றார் அவர்.. ஷீலா , பிரியா, அருண், கோகுல் இவர்களுடன் அச்சுவும் உள்ளேப் போய் அங்கே போடப் பட்டிருந்த பாயில் உட்கார்ந்தான்... இவர்களுக்கு எதிர்முனையில் சிலர் பழத் தட்டுக்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அச்சு ஷீலாவை அழைத்து " ஷீலா.. இது என்ன பங்க்சன்" என்று கேட்டான்.. "அடப்பாவி என்ன பங்க்சன்னு தெரியாமலையே வந்துட்டியா..? திவ்யாவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்... அவ சொல்லலையா உங்கிட்ட.." என்றாள் ஷீலா.. "இல்ல..." என்று கூறிய அச்சுவிற்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது... சொல்லாத காதல் செல்லாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு சகஜமாக இருப்பது போல் நடித்தான்.. செதுக்கி வைத்த சிற்பம் போல் பட்டுச் சேலைக் கட்டி வந்து அங்கே நின்றாள் திவ்யா... எல்லோருக்கும் வணக்கம் வைத்தவளைப் பார்த்த அச்சுவிற்கு இவள் தனக்கு இல்லை என்று நினைக்கையில் நெஞ்சை எதுவோ பிசைந்தது... கல்யாணப் பத்திரிக்கையை வாசிக்க போகும் நேரத்தில் " ஒரு நிமிஷம்.." எனக் கூறிய திவ்யா.. " எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. நான் வேற ஒருத்தர விரும்புறேன்.. எனக்கும் அவருக்கும் ரிஜிஸ்தர் மேரேஜ் கூட ஆச்சி.." என்றாள்... இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதை அவமானமாக உணர்ந்த மாப்பிள்ளை வீட்டார் கோபத்துடன் வெளியேறி விட திவ்யாவின் அப்பா அவளை ஆத்திரத்துடன் அறைந்து விட்டார்.. " ஏண்டி இப்டி பண்ண... லவ் பண்ணிருந்த எங்ககிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. இப்டி எங்கல சபைல வச்சி அசிங்கப் படுத்திட்டியே.." என்று கத்தினாள் திவ்யாவின் அம்மா.. அப்பொழுது தான் அச்சு கவனித்தான் திவ்யாவின் அம்மாவை.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று.. திவ்யாவின் அப்பாவை பார்க்கும் போதும் இதே போல் தான் தோன்றியது... "சொல்லுடி.. யார லவ் பண்ற... சொல்லித் தொலை.." என்றாள் அவளின் அம்மா.. "இதோ இவனை தான் லவ் பண்றேன்.." என்று திவ்யா அச்சுவை கை காட்ட அங்கே இருந்த திவ்யாவின் சொந்தக்காரர்கள் சிலர் அச்சுவை அடிக்க கையை ஓங்கி கொண்டு ஓடினர்... "இல்ல அவ போய் சொல்ற... நாங்க லவ் பண்ணவும் இல்ல.. மேரேஜ் பண்ணவும் இல்ல... நான் யாரையும் லவ் பன்னல" என்று அச்சு அலறினான்... "நீ இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்லையா..?" என்ற திவ்யாவிடம் "இல்ல.." என்றான் அச்சு... அழுது கொண்டே தன் அறைக்குள் ஓடிய திவ்யா திரும்பி வரும் பொழுது கையில் ஏதோ கொண்டு வந்தாள்... அச்சுவின் முன் வந்து நின்ற அவள் தன் கைகளை நீட்ட அதில் காய்ந்த ஒரு காற்றாடி இருந்தது... அச்சுவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை... "சந்தியாவா நீ..?" என்றான் அதிர்ச்சியாக..."ஆமா.. நான் தான் சந்தியா... என் பேர இங்க வந்ததும் மாத்தி..." என்ற பொழுது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலாரம் அடிக்க உதறிக் கொண்டு எழுந்தான் அச்சு... " இவளோ நேரம் கனவா கண்டுக்கிட்டு இருந்தோம்.." என்று நினைத்தவனுக்கு "எப்படி இத்தனை வருஷம் வராத சந்தியாவோட நினைப்பு இப்ப வந்தது.." என்ற எண்ணமும் வந்தது... " முதல அப்பாவுக்கு போன் பண்ணி ஊருக்குள்ள யாருக்காவது சந்தியாவோட பாமிலி எங்க இருக்காங்கனு தெரியுமான்னு கேக்கணும்..." என்ற மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டே தோளில் துண்டோடு குளியலறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்...

எழுதியவர் : ரமணி (11-Feb-13, 8:58 pm)
பார்வை : 251

மேலே