முதல் நாள்...அன்று...!

அவள் கவிதையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் படையிழந்த அரசனாய், மொழி மறந்த புலவனாய், நடை மறந்த முடவனாய் உணர்வுக்கும் மூர்ச்சைக்கும் இடையே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தேன். வழக்கமாய் கண்கள் காண்பதற்காக பயன்படும் ஒரு உபகரணம் என்று அறிவு ஏற்றி வைத்திருந்த கருத்துச் சாரத்தினை நம்பி அவளை நேருக்கு நேராய் பார்த்ததின் அவஸ்தையைத்தான் இப்போது பகிர திக்கித் திணறிக் கொண்டிருக்கிறேன்.

இன்னுமொரு ஆச்சர்யமும் என்னை மொய்த்துக் கொண்டிருந்தது...ஆமாம்...! இவளின் விழிகளே எல்லா செய்திகளையும் பகிர்ந்து விடுகிறதே....என்று வார்த்தைகளின்றி உணர்வுகளை பரிமாறும் யுக்தியறிந்த சித்தியோடு இவளைப் படைத்து விட்ட கடவுளின் மீது கண நேரம் கோபமும், அவள் மீது பொறாமையும் ஒன்றாய் வந்து சென்றது.

மிரட்சியாய் என்னுள் ஆழச் சென்று கொண்டிருந்த அவளின் விழி வீச்சில் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறிப் போனதில் ஆக்ஸிஜனின் வரத்து சட்டென்று அதிகரித்ததில் இதயத்தின் துடிப்பு அதிகமாகி....

அது உந்தித் தள்ளிய இரத்தம் உடலெல்லாம் பரவ ஜிவ்வென்ற ஏதோ ஒரு உணர்வில் நான் இருக்கிறேனா? இல்லை பறக்கிறேனா என்று மூளையை சரிப்பார்க்க சொன்ன போது அது வெவ்வ வெவ்வே...என்று என்னிடம் பழிப்புக் காட்டி விட்டு அவளை பார்த்த செய்தியைப் பகிர்ந்த விழியிடமிருந்து பிம்பங்களைத் திருடி திருடி அச்சேற்றி கொண்டிருந்த அவசரத்தில் என்னை நினைவற்று சும்மா கிட என்று அதட்டி விட்டு அதன் வேலையைத் தொடந்து கொண்டிருந்தது.

விழிகளோடு மோதிச் சிதறிப்போய்க் கிடந்த என்னை கொஞ்சமேனும் இரக்கப்பட்டு அப்போது வீசிய காற்றாவது பேசாமல் சென்றிருக்கலாம். சட்டென்று வீசிய காற்று ஒரு ஓவியத்தின் மீது பரவிச் சென்ற கோபத்தில் நானிருக்க, பரவி மட்டுமா செல்வேன்.....என்று என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஒதுங்கிக் கிடந்த அவளின் தலை கேசத்தை கலைத்து கலைத்து விளையாடியது கூட பரவாயில்லை....

ஒவ்வொரு முறையும் காற்றில் கலையும் கேசத்தினை அவள் சரி செய்து கொண்டிருந்த போதும், பட படப்பாய் இமைத்த போதும் அதைத்தான் என்னால் எதிர் கொள்ள் முடியவில்லை. ஒப்பனை கலைந்த சித்திரம் தன்னை தானே சரி செய்து கொண்டிந்தது.

அட இது என்ன இது....? எனக்குள் மூன்றாம் உலகப் போரை துவக்கி விட்டு விட்டு இவள் மெளனித்து இருக்கிறாள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது அவள் அந்த கோப்பையிலிருந்த காபியை வாஞ்சையாய் உறிஞ்சிக்கொண்டே என்னை உற்று நோக்கிய நொடியில்...

மோட்சத்தை அடைந்த சந்தோசத்தில் காலியாகியிருந்த கோப்பைக்குள் நிறைந்து கிடந்தது என் மனது. காதலென்ற உணர்வின் மூலம் எது..? என்று வேகமாய் கணக்குப் போட்ட என் மூளை இவளிடம் என்ன பேசுவது என்று உள்ளே ஒரு ஒத்திகையையும் நடத்திக் கொண்டிருந்தது.

கவிதையிடம் கவிதை பேசினால் புரியுமா? என்று தெரியவில்லை அதே நேரத்தில் விக்கிரகத்திடம் பேசினாலே வீண்தானே என்று கூட ஒரு எண்ணம் தோன்றிய போது மூளை சொன்னது அட...நீயும் விழியாலே பேசிவிடு என்று...

அட விழியால் பேசும் வித்தை அறிந்தவனா நான்...? அவளை எதிர் கொண்டு பார்க்க முடியாமல் கீழிறங்கிக் கிடக்கும் எனது விழிகள் மேலேறி அவளை பார்க்குமா? என்ற எண்ணத்தை முயற்சியாக்கி இதோ... இதோ முயல்கிறேன்...மெல்ல அவளின் விழிகளை சந்தித்த மூன்றாவது நிமிடம் அது நழுவி அவள் அப்போது வெளியிட்ட சிறு கவிதையை வாசிக்க உதடுகளுக்குச் செல்கிறதே...

எத்தனை முறை முயன்றாலும் தோல்வியில் அவளின் கவிதையை மீண்டும், மீண்டும் என் விழிகள் வாசிக்க அந்த கவிதை புன்னகை என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து சிரிப்பாய் மாறி

அதுவரையில் கண்கள் பட்டு வந்த அவஸ்தையை செவிகளுக்கு மாற்றி செப்புக் காசுகளின் சிதறுதலாய் செவிகளுக்குள் ஊடுருவி செவிப்பறையை அறைந்து....ஒலி வடிவில் மீண்டும் ஒரு படையெடுப்பு நடத்த தொடங்கியிருந்தது, மூளையை நோக்கி...

ஏற்கனவே போரில் அழித்தொழிக்கப்பட்ட ஒரு நகரமாய் குற்றுயிரும் குலை உயிருமாய் சிதைந்து கிடந்த என் மூளை அடுத்த தாக்குதலின் அவஸ்தைகளை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க....

உன் முகம் பார்த்து
ஆழமாய் உன் கண்களுக்குள்
ஊடுருவித் தொலைந்து
உன் இதயத்தின் சப்தங்களோடு
கலந்து துடிக்கத்தான்..
அனுமதியேன்...!

என்று கூட என் மெளனத்தால் இயன்ற வரை அவளுக்குக் கெஞ்சலாய் செய்தியனுப்பிக் கூடப் பார்த்ததிலும் தோல்வியே என்னைத் தழுவியது. அவள் என் தடுமாற்றத்தை ரசிக்க, ரசிக்க நான் தொலைந்து கொண்டிருந்தேன். மொத்தத்தில் அவள் எனக்கானவள் என்று அவள் சொன்ன முதல் நொடியிலிருந்து...

என்னை சந்தித்து என்னைக் கொன்று கொண்டிருக்கும் இந்த நொடி வரையிலும் அவளின் அருகாமை என்னும் பிரமிப்பில் நான் வீழ்ந்து கிடந்த காலம்...ஐன்ஸ்டீனீன் ரிலேட்டிவிட்டி தியரியை மெய்ப்பித்துப் போட்டது. ஆமாம் கண நேரம் போல எங்களுக்குத் தோன்றினாலும்....வெகு நேரமாயிருந்ததை நாங்கள் உணரத்தான்வில்லை.

அந்த அந்தி நேரத்து வானம் மழை என்ற கவிதையை எழுத ஆயத்தமானதற்கு சாட்சியாய் சில மழைத்துளிகளையும் அனுப்பி வைத்தது. அந்த திறந்தவெளி காஃபி சாப்பின் ஊழியர்களும் பொறுமையற்றுப் போய் எங்களின் மெளன நாடகத்தை கண்டும் காணாததும் போல நாற்காலி மேசைகளை நகர்த்திக் கொண்டிருந்த போதும்...நான் அவளிடமிருந்து மீளவில்லை.

அப்போது ஓவியம் தனது கை மணிக்கடை நகர்த்தி நேரம் பார்த்து 6:15 என்று சொன்ன கடிகாரத்தோடு..அவள் தலை நிமிர்ந்து இசைத்தாள்...

" என்ன ப்ரசன்னா...ஒரு மணி நேரத்துக்கு மேல மெளனமாவே இருந்துட்ட......அச்சச்சோ...மழை வேற வரப் போகுது இன்னுமொரு 15 மினிட்ஸ் 23C வந்துடும்டா...முதல் நாள் உன்கிட்ட எவ்ளோ பேசணும்னு ஆசையா வந்தேன். இப்டி போயிடுச்சே நேரம் .நான் கிளம்புறேன்டா....நாளைக்குப் பேசலாம்.....ப்ளீஸ் ப்ளீஸ்..........ப்ளீஸ்.......ப்ளீஸ்...!பை டா........நீ எனக்கு காத்தால போன் பண்ணு ஒரு 11 மணிக்கு...ஆபீஸ்ல கொஞ்சம் ஃப்ரியா இருப்பேன்டா......பாய்டா கண்ணா....நாளைக்கு பார்ப்போம் சரியா....! "

அவள் ஓடிவிட்டாள் கட கடவென்று......! மழை இப்போது வலுக்கத் தொடங்கியிருக்க...நான் என் முதல் காதல் சந்திப்பினை நெஞ்சுக்குள் தேக்கியபடி வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேன்...என்று யோசித்து..யோசித்து பார்க்கிறேன்...ம்ம்ம்ஹூம்..........தோணவே இல்லை....!

நாளைக்காவது பேச வேண்டும் என்று ஏதேதோ மூளை கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது..ம்ம்ம்ம் ...சரியாய் அவளின் அருகாமையில் எப்படி அறுந்து போகிறது எனது நினைவுகள்...? ம்ம்ம்ம்ம்...எனக்குள் நானே சிரித்துக் கொண்டு வெள்ளைப் பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தேன்.....ஆனால்...

வெற்று மையை
காகிதத்தில் பரவவிட்டு
வார்த்தைகள் ஓடி
ஒளிந்து கொண்டன..
அவளின் நினைவுகளுக்குப் பின்னால்!

பேனாவைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையில் சாய்ந்தேன்..!!!

வெளியே பெய்து கொண்டிருந்த மழை தாழ்வாரத்தின் வழியாய் ஜன்னலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.........திறந்த விழிகளோடு அன்றைய மாலையை மீண்டும் ரீவைண்ட் செய்து கொண்டிருந்த போதே அடுத்த நாள் பற்றிய நான் கனவுகளோடு உறங்கியே போனேன்....!

எழுதியவர் : Dheva.S (13-Feb-13, 8:58 pm)
பார்வை : 322

மேலே