சில நேரம் காதல் தாமதமா வரும்!!!

காலம் பல மனித உடலைப்பற்றி அறிவியலால் விளக்கி இருந்தாலும், நம் உடலின் ஒவ்வொரு அணுக்களையும் பிளந்தெடுப்போம் காதல் வயப்பட்டு. அப்படி வயப்பட்டு போராடி அடைந்த காதலை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அங்கே ஊடல் கூடல்கள் இனித்திட பழகிய நாட்களை நினைவில் கொண்டு சுகமாய் வாழ முற்படுவோம்.

காதல் கதைகள் எத்தனை விதம்? அதில் நாம் ரசித்தது எத்தனை? வாழ்ந்தது எத்தனை? வருஷத்தின் 365 நாளும் ஒவ்வொருவரின் காதல் கதையில் அடுத்த திருபங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம், காதலர் தினம் என்ற ஒன்று அந்த வெள்ளைக்காரன் நமக்கு பகிராமல் சென்றிருந்தால்? இங்கே காதலை அவரவர் சந்தித்த நாளை தான் காதலர் தினமாய் கொண்டாடி இருப்போம்.அப்படி இருந்தும் சில பேருக்கு சில நேரம் காதல் தாமதமா வரும் அதுவும் காதலர் தினத்தில் இங்கே.

(அப்படியே நீங்க நிக்கிற இடத்துல வேகமா ஒரு பஸ் பெரிய ஹாரன் சத்தத்துல கடக்குது - Flash)

கோயம்பேடு ப்ரீபெய்ட் ஆட்டோ வரிசையில் சுபா நெடு நேரம் காத்திருந்து தாம்பரத்திற்கு ரசிது வாங்கினாள். காசாளர் ஏற இறங்க பாத்துட்டு தான் ரசிது கொடுத்தாரு. பின்ன கோயம்பேட்டுல இருந்து தாம்பரத்துக்கு பேருந்து இல்லாத மாறி ஆட்டோக்கு கேட்டா?, எவனோ ஒருத்தன் நல்லா சம்பாதிக்க போறான் அவ்ளோதான். அடுத்த ஆட்டோ ராஜவோடது, ஹ்ம்ம் அம்பது ரூவா சம்பாரிக்க காலைல எட்டு மணிக்கு ஸ்டாண்ட்ல போட்டு இப்போ ஒம்பதர மணி இப்பவாச்சும் கிராக்கி வந்திச்சே ஒரு சந்தோஷத்தோட பாத்தா ஒரு பொண்ணு வந்து நிக்குது. இதுக்கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா பத்து ரூவா கூட கெடைக்காதுன்னு நினைப்போடவே பார்த்தான்.

சுபா: அண்ணா! தாம்பரம் போகணும்!
ராஜா: (என்னது தாம்பரமா? ரசீதை பார்த்தா 250 ரூவா, அட்ரா சக்க! காலைல இருந்து ஒன்னும் சரியில்லன்னு பார்த்தா.இப்படி வந்து மாட்டிகிச்சே) போலாம் வாம்மா!
சுபா: அண்ணா போற வழில அசோக் நகர்ல ஒருத்தர கூட்டிட்டு போய்டுவோம். உள்ளலாம் போகத்தேவல பஸ் ஸ்டான்ட்லயே தான்.
ராஜா: சரி மா! ஏறுங்க போலாம்.

(இடையில் சுபா ஒருவரிடம் தன் கைபேசியில் யாரிடமோ அசோக் நகர் வந்திடுமாறு சத்தம் போட்டு கூறினாள். கொஞ்சம் இறுக்கமும் அதிகாரமும் குரலில் வெளிப்படவே ஒரு பையன் தான் வர போகிறான் என்பதை யூகிக்க முடிந்தது)

அசோக் நகர் நெருங்கியது.

சுபா: இங்க! இங்கதான் ஒரு ரெண்டு நிமிஷம் அண்ணா!
(கைபேசியில் - நான் வந்துட்டேன்.. எங்க நீ? நீல சட்ட தான போட்டிருக்க? சரி வா சீக்கிரம் நான் ஆட்டோ ல இருக்கேன்.)

(தூரத்தில் நீல சட்ட போட்டுட்டு ஒரு பையன் நடந்து வந்தான்)

ராஜா: ஏம்மா! அவாரன்னு பாரு!
சுபா:(புருவத்தை உயர்த்திய படி ராஜாவை ஒரு பார்வை பார்த்து விட்டு) இல்ல அவர் இல்ல.

ஐந்து நிமிடம் கழித்து சட்டென்று....

பின் இருந்து ஒரு ஊதாவும் நீளமும் கலந்து கருப்பு கோடு போட்ட சட்டை போட்டவன் வந்து நின்னான். கையில ஒரு பூச்செண்டு. சுபாவிடம் காதலர் தின வாழ்த்துக்கள் என்று காதில் கூவினான். சுபா பூச்செண்டின் ஒவ்வொரு பூக்களையும் ஒரு நொடியில் ஆராய்ந்தாள் அதன் அழகையும் அடுக்கினையும். அவள் தன் மார்போடு அணைத்ததையும் குழந்தை சிரிப்புடன் அந்த பையனை நோக்கியதில் யாருக்கும் காதல் வயப்பட தோன்றும். இருவரும் கைகுலுக்கினர் இல்லை பொது இடம் நாகரிகம் கருதி இரு கைகளால் கட்டி அணைத்து கொண்டனர்.

ராஜா: (ஒரு சில நிமிடங்கள் சிலையாகி பின் சுதாரித்தான்) ஏம்மா போலாமா!
சுபா: தோ! போலாம்னா! சார் சுரேஷ்.. ஏறுங்க லேட்டா வந்துட்டு நிக்காதீங்க.. உள்ள போங்க..

(ஆட்டோ மெதுவாய் தாம்பரத்திற்கு தன் வழித்தடங்கள்களை தாண்டி புறப்பட்டது. ராஜாவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெளிவாய் கேட்கும் இந்த வண்டி சத்தத்திலும். இரு புற கண்ணாடிகளை இருவரும் தெரிவது போல் திருத்தி வைத்தான்)

"நீல சட்டை போட சொன்னா இது என்ன கட்டம் போட்ட சட்டை அதுவும் நீலம் அங்ககங்க இருக்கு", செல்லமாய் கடிந்தாள் சுபா.அவனும் லேசு பட்டவன் இல்லை "நீ மட்டும் என்ன நீலமா போட்டிருக்க அங்ககங்க பூ டிசைன், ஒரு கலர்ல இருக்கு இது பத்தாதுன்னு கண்ணாடி வேற சின்ன சின்னதா", அந்த கண்ணாடியில் முகம் பார்க்க கூட முடியாது என்று செய்முறை விளக்கம் வேறு குறும்பாய்.

"காதலர் தினத்துக்கு ஒரு பூங்கொத்து தானா,வேறொன்னும் இல்லையா",சுபாவின் எதிர்பார்ப்பிலும் சின்ன நியாயம் இருக்கத்தானே செய்யும். "சின்ன பூங்கொத்துக்கே அரை மணி நேரம் வரிசைல நின்னேன் தெரியுமா,கால்லாம் ஒரே வலி",என்றான் சுரேஷ். "நீ வேணும்னா கால் நீட்டி வச்சிக்கோ" என்றாள் அக்கறையாய்.

"சரி நான் இன்னைக்கு எப்படி இருக்கேன்",என்றாள் ஆவலாய்."nose தான் கொஞ்சம் oversize, its ok ma plastic surgery பண்ணிடலாம்", கிண்டலாய் களாய் ஆனால் நொடி பொழுதில் தோள்பட்டையில் அடி,அடி,அடி(மூணு தடவ)."ஸ்சு, விளையாட்டுக்கு சொன்னேன் டி , அதுக்குள்ளே அடி பின்னிட்ட, உனக்கென்னடி என் செல்லம் எப்பவுமே அழகுதான்", தோளை தேய்த்து கொண்டே பம்மினான்.

(அவள் உண்மையிலே அழகுதான், கடிந்து கொண்டாலும் கோவமில்லாமல், இடித்து உக்கார்ந்தாலும் விரசம் இல்லாமல் - ஆட்டோ ராஜா)

"சரி வீட்ல என்ன சொல்லிட்டு வந்த", அவன் வினவினான்."எங்க ஆயிரம் கேள்வி வெளிய ப்ரெண்டை பாக்க போரேன்னு சொன்னதுக்கு, அப்புறம் சீக்கிரம் வந்துடு சொல்லி விட்டாங்க, ஆனா அக்கா கண்டு புடிச்சிட்டா",என்றாள் குழப்பத்தோடு.

"உங்க அக்கா எப்பவுமே ஸ்வீட் தான்,பரவால தெரிஞ்சும் அனுப்புராளே, உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்குவோம்", ஆர்வத்துடன் அவன்."எனக்கு ஒன்னும் வேணாம் சேத்து வச்சா எதாவது பெரிசா வாங்கலாம், இன்னிக்கி உன் கூட இருக்கறது விட வேற ஒன்னும் பெருசா தேவல", அவன் கன்னங்களை தடவி கூறினாள்.

(என்ன பொண்ணு இந்த பொண்ணு இந்த கண்ணாடி போட்டு சப்பையா இருக்கற பையன இப்படி உருகி உருகி காதலிக்குது - ஆட்டோ ராஜா)

கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள், அவன் செய்வதறியாது அவள் கைகளை நீண்ட நேரம் கண்னமிடயே வைத்து நீண்ட நேரம் யோசித்து பின் முத்தம் அளித்தான் கைகளுக்கு.

(அடடா!! பகல் காட்சியா இல்ல இருக்கு! - ஆட்டோ ராஜா)

"சரி நேத்து உன்ன அந்த புக் வாங்க சொன்னேனே வாங்கிட்டீயா",வினவினாள். அவனோ தலையை சொரிய."நீ எப்பவுமே உனக்கு வேணும்னா மொதல்ல வாங்கிடுவ,எனக்குன்னா மட்டும் யோசிப்ப,பேசாத போ", கோபமாய் அவள்.

அவனும் சமாதனம் என்று ஏதேதோ கூறினான் அவள் செவிமடுக்க வில்லை. சற்று கோவமாய் கத்தியும் பார்த்தான், பின் அமைதியானான்.

(என்னடா இது! இவ்ளோ நேரம் கொஞ்சிகிட்டாங்க, இப்போ எதுவுமே பேசாம பாத்து நிமிஷமா வராங்க- ஆட்டோ ராஜா)

ராஜா : எம்மா தாம்பரம் வர போது எங்க இறங்கனும்.
சுபா: சொல்றேன்னா எங்கன்னு!! நேரா போங்க!

"சரி சொல்லு, எங்க போலாம்? விடு அத பத்தி பேசவேணாம்", கோவம் போய் பொய் கோவமாய் கேட்டாள். "இல்லமா!, சாரி நான் வேணும்னு பண்ணல மறந்துட்டேன்", கெஞ்சினான்."நான் அத பத்தி பேச வேணாம்னு சொன்னேன் இல்ல, விடு", அவள் உண்மையாய்."ப்ளீஸ், கொஞ்சம் சிரிங்களேன்,மன்னிச்சிடு",அவன் மேலும் கெஞ்சலுடன். சிரிப்புடன், " போடா இன்னிக்கு உன்கிட்ட சண்ட போடா கூடாதுன்னு வந்தேன், நானே அத மறந்து கத்திட்டேன்,எனக்கு கொஞ்சவும் கெஞ்சவும் கத்தவும் நீ தான இருக்க", கண் கலங்கிய சிரிப்புடன் அவள் கூறினாள்.

(கெஞ்சவும்,கொஞ்சவும்,கத்தவும் நீ தான் இருக்க, உறுத்தியது ஆட்டோ ராஜாவிற்கு)

சுபா: அண்ணா! இங்க தான் நிறுத்துங்க.(பாஸ்கின் அண்ட் ராப்பின்ஸ் ஐஸ் கிரீம் கடையை காட்டினாள்)
ராஜா: எது மா இங்கயா! (அட பாவிகளா ஐஸ் கிரீம் சாப்பிட இவ்ளோ தூரம் வரணுமா)

இறங்கியதும் பணத்தை கொடுத்தாள், அதுக்குள்ள அந்த பையனும் பணம் கொடுத்தான், இருவரும் அவரவர் கைகளை தட்டி விட்டு கடைசியில் அந்த பொண்ணு கொடுத்த பணத்தை வாங்கினான் ராஜா. "ஏம்மா திருப்பி வருவீங்களா நான் வேணும்னா வெயிட் பண்றேன்" என்றான் ராஜா. "இல்ல அண்ணா, பரவால ஒரு மணி நேரமாவது ஆகும்", என்றாள். "சரிம்மா! சவாரி வந்தா போறேன்,இல்ல இங்க தான் இருப்பேன்",என்றான் ராஜா. சரி என்ற சமிக்கையோடு கண் சிமிட்டி சென்றாள் சுபா.

கைகரம் பற்றியே தான் இருவரும் உள்ளே சென்றனர். என்னடா காதல் என்ற கேள்விகள் ஆயிரம் எழுந்து,ஏன் நம் மனைவி எப்பவுமே கடுப்பேத்து ரா, என்ற கேள்விகளுடன் காலை நடந்த சண்டையை(இது தான் காலைல இருந்து எதுவும் சரி இல்லன்னு சொன்னது இது தான்) யோசித்து கொண்டிருந்தான். ஆட்டோ சவாரிக்கு எத்தனை பேர் கேட்டாலும் மனம் என்னவோ இந்த காதல் ஜோடியை விட்டு செல்ல ஏங்கியது.

(ஒரு மணிநேரம் இல்லை ஒன்றரை மணி நேரம் கழித்து)

வெளியே அவர்கள் வந்ததும் ராஜா முகத்தில் சந்தோஷம்(இன்று 500 ருபாய் வருமானம்), அவர்களை கைகளை ஆட்டி வரச்சொன்னான். "ஏன்னா சவாரி கெடைக்கலையா!",என்றால் சுபா. "இல்லமா,ஒன்னும் பெருசா வரல பக்கத்துல ஒரு சவாரி போயிட்டு தான் வந்தேன்,சரி வாம்மா கோயம்பேடு தான",என்று கதை கட்டினான் ராஜா.

(ஒரு சில உரையாடல்களுக்கு பிறகு, ஆட்டோ கோயம்பேடு நோக்கி பயணமானது)

"டேய்! உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்கிட்டயே என் ப்ரெண்டு அழகுன்னு சொல்லுவா", அவள் மீண்டும் சினுங்கல் சண்டை ஆரம்பித்தாள்."போடி! உண்மையா அவ அழகு தான் ஆனா நீ வேற எனக்கு",என்றான் அவன்.

"உனக்கு தெரியுமா, நான் ஏன் ஆட்டோல போலாம்னு சொன்னேன்னு", அவள் வினவினாள்.(ராஜா ஆர்வமானான்)."ஏன் comfortable ஆ போலாம் அதான",என்றான் ஏதோ சரியாய் கண்டு பிடித்தது போல. "போடா லூசு!, பஸ்ல நிறைய பேர் இடிச்சி நின்னுட்டு வருவாங்க,சத்தமா இருக்கும், அதுவும் இல்லாம நீ பக்கத்துல இப்போ இருக்குற சுகம் அங்க வராது, அதான்",என்றாள் காதலுடன்.

(ஓஹ்ஹோ ஆட்டோல வரதுல இவ்ளோ விஷயம் இருக்கா - ஆட்டோ ராஜா)

சிலபல உரையாடல்கள் உன்னதைமாய் வாழ்கையை பற்றி, சில பயத்துடன், சில கொஞ்சலுடன் அசோக் நகர் வந்தடைந்தனர்.

அவன் இறங்கினான் இவள் இளகினாள் ஏங்கினாள்,கண்களில் கண்ணீருடன்.அவன் ஆறுதல் படுத்தி மீண்டும் கைகளால் கைகளை தன நெஞ்சோடு வைத்து விடைகொடுத்தான். அவள் ஏறினாள் ஆட்டோ புறப்பட்டது.

கண்ணாடியில் ராஜா சுபாவை பார்த்தான் இன்னும் அந்த கண் கலங்கிய முகத்தோடு அங்கே இங்கே திருப்பி கை குட்டையை தொடைத்து கொண்டிருந்தாள். கோயம்பேடு வந்தது பணத்தை கொடுத்தாள். அவள் கனத்த இதயத்துடன் நடந்து சென்றாள்.

அங்கே அவள் கண்ணீர் ராஜாவை ஏதோ செய்தது,காலையில் சத்தமிட்ட போது அவன் மனைவி அழுதது கண் முன்னே வந்து நின்றது. புறப்பட்டான் வீட்டிற்க்கு கடையில் இரண்டு முழம் மல்லிகையை வாங்கி கொண்டு. இது எல்லாம் கெஞ்சவும் கொஞ்சவும் கத்தவும் நீ தான் இருக்கே சொன்ன அவளுக்கு மனதில் நன்றி கூறி புறப்பட்டு சென்றான்.

சில நேரம் காதல் தாமதமா வரும்!!!

என்றும் அன்புடன்,
ரசல்

எழுதியவர் : ரசல் (14-Feb-13, 11:46 pm)
பார்வை : 361

மேலே