திரும்பிப் பார்

இதுவரை...

என்ன எழுதினேன்?
எதற்காக எழுதினேன்?
எழுதியவை
என்ன ஆயிற்று?

பின்னிரவில் பதுங்கும்
குற்றவாளியின்
அலையும் கண்களைப் போல
எதைத் தேடி
என் பேனா செல்கிறது...?

முன் தோன்றி
மூத்த தமிழின்
இலக்கண முகம்
அலங்கரித்து இருக்குமா?

தெருவோரம் திரியும்
எண்ணைப்பசை அற்ற
எண்ணற்ற குழந்தைகளில்
ஒருத்திக்காவது
தலை வாரிப் பூச்சூடி இருக்குமா?

எக்கணமும்
வறுமை தின்னும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சோறு கிடைத்திருக்குமா?

எங்காவது ஒரு
சிட்டுக்குருவிக்கு
சிறகு முளைத்திருக்குமா?

எதிர்த்துப் போராடும்
எம் மாணவர்
ஏந்தும் பதாகையில்
எழுத ஒரு வாசகம்
கிடைத்திருக்குமா?

சொல்ல வாயும்
வார்த்தைகளும் அற்று
தவிக்கும் ஒரு இதயத்திற்கு
சொல்லும் வழியாகி
காதல் மொழியாகி இருக்குமா?

விரிந்து கொண்டிருக்கும்
ஓசான் ஓட்டைப் படலத்தின்
ஒரு துளி அடைக்க சமூகத்தை
முன்னெடுத்து இருக்குமா?

முகிழ்த்து
முன்னே வரத் துடிக்கும்
கைம்பெண் முன்
ஒப்பாரி வைப்பதைத் தவிர்த்து
அவள் கைப் பிடித்து
காலம் களிக்க ஒரு
நல் இதயம்
கிடைக்கச் செய்து இருக்குமா?

குறைந்த பட்சம்...
உழைத்துக் களைத்த
எம் பெரு மக்கட்கு
ஒரு துளி நேரம் பொழுது
போக்கக் கிடைத்திருக்குமா?

இருக்கும் விலைவாசியில்
இரண்டு சொட்டு மை ஒன்றும்
பெரிய செலவில்லை என்பதாலா...?
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (23-Mar-13, 4:45 pm)
பார்வை : 5868

மேலே