நிலாப்பழம் அவள் (மெய்யன் நடராஜ்)

என் வருகையின்போது
உன் வாசலில் குரைத்தக்
கடிநாயைப் பிடித்து நீ
கட்டிப்போட்டப்போதே
கட்டவிழ்ந்துவிட்டது
கட்டுக்கடங்கா ஆசைகள்.

உள்ளே வரவழைத்த
உன் அழகான
வரவேற்பில்
வரமறுத்து
அடம்பிடித்தன
என் கறுப்புகள்.

உள்ளே வந்து
நின்றுகொண்டிருந்த
எனக்கு நாற்காலி
போட்டுவிட்டு
அமர்ந்துகொண்டாய் நீ
என் உயிருக்குள்.

சூடாய் தேநீர்
வழங்கினாய்
இனித்தது சர்க்கரையாய்
உன் பரிமாற்றம் .

நிறைய விபரங்களோடு
பேசிக்கொண்டிருந்தாய்
காதல் குறித்த
விபரமில்லாதவளாய்.

எனக்கு ஏதோதோ
விளங்கப்படுத்தினாய்
என்னை விளங்கிக்
கொள்ளாதவளாய்.

என் பாதணிகளைபோலவே
உன் மனவாசலுக்கு
வெளியே என்காதலும்
கவனிப்பாரற்றுக் கிடந்தது.

விடைபெற்றபோது
பாதணிகளோடு மட்டும்
நடந்து வந்துவிட்டேன்
கால்களை உன்னிடத்தில்
விட்டுவிட்டு.

பாத பூஜை
செய்வாய்
என்பதற்காகவல்ல
என்றாவது அதன்
பின்னால் நீ
வந்தாலும் வரலாம்
என்னும் எதிர்பார்ப்பில்தான்.

அடுத்த சிலநாளில்
ஒருநாள்
உன் தோழி சொன்னால்
உனக்கு
பிரசவமாகிவிட்டது
காதல் குழந்தையென்று

மறுபடியும்
உன் வாசல்தேடி
ஓடோடி வந்தேன்
உள்பக்கமாக
பூட்டியிருந்தாய்
என்னை மனதுக்குள் வைத்து.

அன்று அந்த
அடை மழையில்
நனைந்து வந்த
என் தலையை
உன் முந்தானையில்
நீ துவட்டி விட்டபோதும்
காயவில்லை இன்னும்
அந்த காதலின் ஈரம்.

முற்கள் மூடிவைத்தப்
பலாப் பழமாய்
உன் நிலாவின்
இதழ் சுளைகளை
பரிசளித்த
நிலாப் பழம் நீ
தந்த அறுசுவைகளை
ஒருசுவையும் இல்லாத
இந்த பாலைவனத்தில்
இருந்து ஞாபகிக்கும்போது
சுடுவது சூரியன் அல்ல
ஏகாந்தத்தின் நரகம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Sep-13, 2:43 am)
பார்வை : 100

மேலே