நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிச் சொற்பொழிவு....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் புனித யாத்திரையின் போது நிகழ்த்திய சொற்பொழிவு வரலாற்றின் பார்வையில் மட்டுமல்ல, மனித நேயத்தின் பார்வையிலும் மிக முக்கியமானது. அந்த ஆண்டு அவர்களோடு புனித யாத்திரையில் கலந்து கொண்ட 1,20,000 மக்களைப் பார்த்து சொன்னார்கள்.

"ஓ மக்களே! நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இனி இன்னொரு ஆண்டு எனக்கு இறைவனால் தரப்படுமா என்று தெரியவில்லை.

இந்த மாதத்தையும் இந்த நாளையும் போலவே, உங்கள் உயிர்களும் உடமைகளும் கண்ணியமும் புனிதமானது... நீங்கள் உங்கள் நாயனின் சன்னிதானத்தில் நிற்க வேண்டிய நாள் வரும் என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய செயல்களுக்கெல்லாம் கணக்குக் கேட்கப்படும். தவறு செய்ய வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன் (மூன்று முறை சொன்னார்கள்).

"மக்களே! உங்களுடைய மனைவிகளின் மீது உங்களுக்கு உரிமையுள்ளது. அதைப்போலவே அவர்களுக்கும் உங்கள் மீது உரிமையுள்ளது.... அவர்களை அன்புடன் நடத்துங்கள்....

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.... உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்களை உரியவர் வந்து கேட்கும் போது திரும்பக் கொடுத்து விடுங்கள்... ஒரு சகோதரரின் அனுமதியின்றி அவரின்:: உடமைகளில் உங்களுக்கு உரிமையில்லை... இறைவனுக்கு அஞ்சுங்கள்....


வட்டி வாங்குவது தடுக்கப்படுகிறது... ரத்தம் சிந்தப்பட்டது தொடர்பாக பழிக்குப்பழி வாங்குவதும் தடுக்கப்படுகிறது....

நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரராவீர்கள்... அநியாயம் இழைப்பதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்....

"மனித சமுதாயம் ஆதம் ஹவ்வா ஆகியோரிடமிருந்து உருவாகியுள்ளது. ஓர் அரபிக்கு அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு அரபியை விடவோ, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விடவோ, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்வித சிறப்பும் மேன்மையும் இல்லை. இறையச்சத்தையும் நல்ல செயல்களையும் தவிர...

"இங்கே இருப்பவர்கள் நான் சொன்னதை இங்கே இல்லாதவர்களுக்குச் சொல்லுங்கள். நான் சொன்னதை அவர்கள் உங்களை விட சிறப்பாக புரிந்துக் கொள்ளக்கூடும்."

பெருமானாரின் இந்த இறுதிப் பேருரையில் ஒரு மாபெரும் புரட்சியே அடங்கியுள்ளது. அதுதான், குலத்தாலோ நிறத்தாலோ மனிதனுக்கு மனிதன் எந்த வேற்றுமையுமில்லை என்ற உண்மை. அந்தக் கால இந்தியாவில் உயர்ஜாதி என்று தங்களைக் கருதிக் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை சூத்திரர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் ஒதுக்கி வைத்தனரே, அந்த தீண்டாமைக் கொடுமை இன்றளவும் கூட முழுமையாக நீக்கப்படாதைத்தான் நான் இன்றும் காண்கிறோம்.


ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கொடுமைகளை வேரோடு ஒரு வார்த்தையில் பிடுங்கி எறிந்த நடைமுறை சமத்துவ மார்க்கம் இஸ்லாம் உள்ளது. இறைத்தூதர் அவர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் காரணமாக, 150 கோடிக்கும் மேற்பட்ட இதயங்களில் இன்று இஸ்லாம் வாழ்கிறது. இந்த மார்க்கம் வாளால் பரப்பப்பட்டதென்று சொல்வதற்கு, அறியாமை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியுமா...?

நன்றி

நாகூர் ரூமி

நூல் உதவி
இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்.

எழுதியவர் : muhammadghouse (16-Oct-13, 4:02 pm)
பார்வை : 290

சிறந்த கட்டுரைகள்

மேலே