உண்மை நிகழ்ச்சி

(என் வாழ்க்கையில் நான் பார்த்து, ரசித்த நகைச்சுவை இது)

என் தங்கை திருமணத்தன்று உறவினர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சிக்காக என் நண்பன் வீட்டை ஒருநாள் தருமாறு கேட்டிருந்தேன். அவனும் தந்தான். விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

என் நண்பனுக்கு ஒரு பழக்கம் உண்டு. எந்த திரைப்படம் வந்தாலும் அதே ஹீரோப்போல் கொஞ்ச நாள் வாழ்வான், அவனுக்கு பிடித்த அடுத்த ஹீரோ நடித்த படம் வரும் வரை...

அப்படி அவன் ரசித்த ஒரு படம் நாட்டாமை. அந்தப் படத்தின் கதாநாயகனைப்போல் தடித்த மீசையை கன்னத்தின் இருப் பக்கமும் அரிவாளைப்போல் வைத்திருந்தான்.

அதே கெட்டப்போடு பழைய நாற்காலியில் அமர்ந்து, போட்டோ எடுத்து தனது வீட்டின் கூடத்தில் மாட்டி விட்டிருந்தான். பிறகு வேறோரு நடிகரின் படம் வெளிவரவே, தனது மீசையெல்லாம் எடுத்து விட்டு பாலிவுட் ஹீரோப்போல் மாறிவிட்டான்.
விருந்துண்ண வந்தவர்களில் ஒரு தாய் தன் சுட்டி மகளுக்கு உணவு ஊட்டி விடுகிறாள். அந்த சுட்டிப் பெண்ணோ உண்ண மறுத்ததால், என் நண்பனை பார்த்து, தம்பி... இந்த பாப்பா சாப்பிட மாட்டேங்குது, சாப்பிடக்காட்டி, அந்த போட்டாவுல இருக்கிற மாக்கான்ட பிடிச்சிக் கொடுத்துடுவியலப்பா...? என்றாள். உடனே அந்த சுட்டிப் பெண், வேணா மாமா, அந்த பேயிட்ட என்னைப் பிடிச்சி கொடுத்துடாதீங்க, நானே சாப்பிடுறேன்னு சொல்லி, கடகடவென சாப்பிட்டாள்.

என் நண்பனின் முகம் பேய் ம்ஹூம் மாக்கான் அறைந்ததுப் போலாயிற்று....

எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு... என் நண்பன் மீசை எடுத்திருந்ததால், அந்த சுட்டிப் பெண்ணின் தாயிற்கும் இவனை சரியாக முக அடையாளம் தெரியவில்லை.

குறிப்பு

நாம் நாமாக வாழ்ந்தால் எல்லோரும் ரசிப்பார்கள். இயற்கையை மீறி செயல்படும்போது நம்மை நாமே தேவையில்லாமல் கஷ்டப்படுத்திக் கொள்கிறோம் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (21-Oct-13, 9:00 pm)
பார்வை : 354

மேலே