அரசியல் அரசியல்வாதி 4

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

இதுவரை...

தன் படிப்பு உதவிக்காக எம்.எல்.ஏ காசிநாதனுடன் மோதி, தன் தந்தையை இழந்த ராஜ்குமார். அரசியல் பற்றி அறிய சென்னைக்கு வந்தான்.. அங்கு தலைமை செயலகத்தில் அவனின் கோரிகைகள், விண்ணப்ப மனுக்கள் அதிகாரி ஒருவரால் முட்டாள்தனம் என்று புறக்கணிக்கப்பட அங்குள்ள காவலாளியின் நட்பை மட்டும் பெற்று விட்டு ஆளும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறான்.


இனி.....


**************************************


ஆளும் கட்சி அலுவலகம்............

கரை வேட்டியோடும் கஞ்சி போட்ட சட்டையோடும் விறைப்பாக சட்ட மன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும்
அங்குமிங்கும்...

”ஹலோ யாருப்பா நீ... யார பார்க்க இங்கு வந்திருக்க.” கட்சி அலுவலகத்திலுள்ள ஒர் ஊழியர்

“முதல் அமைச்சரை பார்க்கணும், ஒரு மனு கொடுக்கணும், தலைமை செயலகத்துல அவங்கள பார்க்க முடியல. இங்க வந்தா அவங்களை பார்க்கலாம்ன்னு...... ” ராஜ்குமார்

“ஹா....ஹா.. சி.எம் இப்போ இங்க வரமாட்டாங்க, வந்தாலும் நீ பார்க்க முடியாதே. உதவி கிதவி கேட்க வந்தீயா.
என்ன மனு? கொடு பார்ப்போம்.”

“இல்ல வேற யாராவது மூத்த தலைவர்கள் இருந்தா பார்க்கணும்.. ரொம்ப முக்கியமான விஷயம்.. அவங்கிட்ட மனு கொடுக்கலாம்ன்னு இருக்கேன்”

“சரி.. உள்ளே அமைச்சர் இருக்கார்.. அவரோடு உதவியாளர்கிட்ட கேட்டு சொல்ரேன். இங்கேயே இரு.”

தன் கையில் இருக்கும் மனு... அவனின் வாழ்க்கையின் பாதையை புரட்டிவிடும் என்று ராஜ்குமார் உணரவில்லை. அந்த மனு அந்த கட்சியின் எந்த தொண்டனின் கைக்கு சென்றாலும் ராஜ்குமாரின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாற வாய்ப்பு உண்டு.. ஆனால் அந்த மனு அந்த கட்சியின் முக்கிய தலைவரின் பார்வைக்கு செல்ல இருக்கிறது.

“தம்பி.... இங்க வா...... அங்க இருக்குற ரூம்ல வெயிட் பண்ணு. அமைச்சர் பி.ஏ உன்னை கூப்பிட்டு வாங்கிப்பார்”
சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த கட்சி அலுவலக ஊழியர்.

சற்று நேரத்திற்கு பிறகு............

அவனின் காதில் இருவர் பேசிக்கொள்ளும் உரையாடல் கேட்கிறது.

“நாளைக்கு மந்திரி சபை மாற்றம் இருக்கும்போல”

“ஓஹோ அப்படியா”

“யாருக்கு தலை போகுதோ.. ? யாருக்கு அதிர்ஷ்டம் வரப்போகுதோ?”


ராஜ்குமார்.மனதுக்குள்... “இருந்தவங்க என்ன தப்பு பண்ணினாங்க..... வரப்போறவங்களுக்கு அந்த துறைபற்றி தெரியவே 5 மாசம் ஆகிடும்.என்னமோ IAS ஆபிஸர்ஸ்னால எல்லாம் போகுது..”

யோசித்துகொண்டிருந்தப்போதே....... அமைச்சரின் உதவியாளர் அழைப்பு வர உள்ளே சென்றான்.

“சொல்லும்மா... என்ன மேட்டர்... ? மனுவ கொடுங்க ஐயாகிட்ட கொடுத்து பரிசீலிக்க சொல்றேன். ”

“சார் ! அந்த ஐயாவை நான் பார்க்கலாமா? நேரடியா பேசின்னா எனக்கு விளக்கம் கிடைக்கும்.”
“சாரிம்மா... இப்போ ஐயா பிசி. மனுவ கொடுங்க என்கிட்ட கொடுத்தா ஐயாகிட்ட கொடுத்த மாதிரிதான்.என்ன டவுட் கேளுங்க நான் பதில் சொல்றேன்”

“என் தொகுதி எம்.எல்.ஏ பெயர் காசிநாதன். அவரை எந்த தகுதி அடிப்படையில தேர்தல்ல முதல் அமைச்சர் நிக்க வச்சாங்க.”
சற்று அதிர்ந்த அந்த உதவியாளர்.... “தம்பி... ராசா.. நீ எங்க வந்திருக்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீயா... நீ பேசறதை வேற யாரவது கேட்டா அவ்வளவுதான். அந்த மனுவை கொடுப்பா.. நான் பார்த்துட்டு இத அமைச்சர்க்கு கொடுக்கலாமா வேண்டாமான்னு சொல்றேன்.”
மனுவை படித்தார் அதில் “ மாண்புமிகு முதல் அமைச்சர் பல திட்டங்களை செய்தாலும் இலவச திட்டத்தை அமுல்படுத்தியது தவறு. அந்த இலவச திட்டம் மக்களாகிய எங்களுக்கு எந்த பயனும் தரவில்லை. மேலும் அது காசிநாதன் போன்ற உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் லாபம் பார்க்கவே உதவுகிறது. மேலும் வீதிக்கு வீதி மதுக்கடை, அதன் தாக்கத்தினால் எனது உறவினர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஒட்டி ஒருவன் ஏற்படுத்திய விபத்தால் என் தாயாரை இழந்தேன். குடித்து வாகனம் ஒட்டியது தவறு என்றால் குடிக்க வழிவகை ஏற்படுத்திய உங்கள் அரசும் தவறு செய்திருக்கிறது. இதற்கு மாண்புமிகு முதல் அமைச்சரின் விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன்.
கல்வி அனைவருக்கும் சமம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த கல்வியை வியாபாரமாக்கி எனக்கு அடிப்படை உரிமை வழங்க உதவ வேண்டிய உங்கள் கட்சி உறுப்பினரும் சட்ட மன்ற உறுப்பினருமான காசிநாதன் அவர்கள் என் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தட்டி கேட்ட என்னை தகாத வார்த்தை பேசியதோடு மட்டுமல்லாமல் என் தந்தையின் மரணத்திற்கு காரணமாக உள்ளார்.. இதற்கு கட்சி தலைமை என்ற முறையில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று நீள்கிறது அந்த மனு.
படித்த முடித்தப்பின் அந்த உதவியாளர்...

“ அம்மா..அப்பா செத்துடாங்க உதவி வேணும்ன்னு கேளும்மா.. உதவி கிடைக்கும். இப்படி எழுதி கேட்டா உனக்கு உதைதான் விழும் .. கோவத்துல அரசியல் பற்றி தெரியமா பேசுற. எதிர்கட்சிகாரனே கேட்காத கேள்வியை நீ நேரடியா சி,எம்கிட்ட கேட்டா.....”

“சார், சி.எம் கிட்ட கேட்பது என்ன தவறு. நானும் இந்த மாநிலத்துல ஒருத்தன்.தப்பா இருக்கு, மாத்தி பண்ணுங்கன்னு கேட்கிறேன்.”

“முதல்வன், அந்நியன் படம் பார்த்து கெட்டு போயிட்டன்னு நினைக்கிறேன். ஹாஹா.. அது படம் .. ஆனா இது உன் வாழ்க்கை. சரி சரி உனக்கு பண உதவி பண்ண அமைச்சர்கிட்ட பேசி ரெடி பண்றேன்..”

குறுக்கிட்ட ராஜ்குமார் கோபத்தின் உச்சியில் “எனக்கு உங்க பிச்சை காசு வேண்டாம்.. எனக்கு காரணம் வேணும்” ராஜ்குமாரின் ஆவேச ஒலி அங்குள்ளவர்களை மிரட்டியது.
அவனை சுற்றி ஒரு கூட்டம் கூடியது...

அந்த மூத்த அமைச்சர் அழைக்கவே......... அந்த உதவியாளரும் ராஜ்குமாரும் அமைச்சரின் முன் அமர்ந்திருக்க..
அங்கு காசிநாதன் வருகிறார்.

அமைச்சர் “ என்ன சத்தம்... இந்த பையனுக்கு என்ன வேணும்.”

“ஐயா.. நான்........” பேச முற்பட்ட ராஜ்குமாரை தடுத்து...

ஒண்ணுமில்லீங்க... இந்த பையன் அப்பா இறந்துட்டார்...அனாதை, உதவி கேட்க வந்தான்... நான் கொஞ்சம் பணம் கொடுத்தேன்..இல்ல எனக்கு காலேஜ்ல சீட் வேணும்ன்னு ஆத்திரப்பட்டு கத்திட்டான்.. பாவம் .. “ உதவியாளர் அவனை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

காசிநாதனின் கொடூர பார்வை ராஜ்குமாரை எரித்துவிடும் போல இருந்தது. “ கட்சி ஆபிஸ்கே வர துணிச்சல் ஆச்சா... உன்னை சும்மா விட்டா.. தப்பாகிவிடும்..” மனதுக்குள் திட்டம் தீட்டுகிறார்.


கட்சி அலுவலகத்துக்கு வெளியே....
அமைச்சரின் உதவியாளர்.. “தம்பி... உன்னை விட அதிகமான கோபம் எனக்கு இருக்கு. 5 வருஷத்துக்கு ஒரு தடவை கூட்டாச்சின்னு சொல்லி சர்வாதிகார ஆட்சிதான் எல்லாம் மாநிலத்திலும்.. ....என்ன ..? ! எதாவது புரட்சி பண்றேன் சொல்லி உன் வாழ்க்கையை நீ இழந்து விடாதே... மதுக்கடைக்கு காரணம் இந்த ஆட்சி மட்டுமில்ல , எதிர்கட்சிகளும்தான் காரணம். உனக்கு பக்குவம் இல்ல... கோமாளித்தனமாக எதாவது பண்ணி மாட்டிகாதேப்பா..” என அறிவுரைகள் பல சொல்லி அவனுக்கு தன் விசிட்டிங் கார்டை கொடுத்து தேவைப்படும்போது கூப்பிடு என்று
அவன் மீது இரக்கப்பட்டு சொல்லி விட்டு சென்று விட்டார்.

ராஜ்குமார்க்கு அடுத்த என்ன பண்ணுவது... அவன் சென்னைக்கு வந்த நோக்கம் நிறைவேற எந்த வாய்ப்பும் கைகொடுக்க வில்லை...
மனதுக்குள்.” எல்லாரும் சொல்வதைப்போல இந்த அரசியலை மாற்ற நான் மட்டும் ஆவேசப்பட்டு ஒண்ணும் ஆகாது, நான் ஆத்திரப்பட்டு எல்லாரையும் பார்ப்பது முட்டாள்தனமா? .. என்ன செய்யலாம்.” என யோசித்து சாலையை கடக்க முயன்ற போது.....

அவனை தூக்கி வீசி சாலை நடுவில் கிடத்திவிட்டு வேகமாக செல்கிறது அந்த வாகனம்.

அவனை காப்பாற்றுகிறது சில நல்ல உள்ளங்கள்.....

பலத்த காயத்துடன் இருந்த ராஜ்குமார் சற்று மயக்கம் தெளிந்த பிறகு........ அந்த அரசு மருத்துவமனை ஊழியர்.. அவனை பற்றி விசாரிக்கிறார், விசாரித்து பின்பு ராஜ்குமாரின் மேல் அவருக்கு அனுதாபம் வர அவனுடன் மிகவும் பிரியமாக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுடன் அவனை காப்பாற்றிய மிக முக்கியமான ஒருவர் உடன் இருந்தார்.. அவரின் பெயர் அப்துல் அன்சாரி. வயது 40 ..

அப்துல் செல்போன்க்கு அழைப்பு ஒன்று வருகிறது.....

“ஆமா........ ”

-------

“இல்ல சீரியஸ் கண்டிஷன் தாண்டிட்டான்”

----

“நீங்க... ”

------

“உங்களுக்கு என் நம்பர் எப்படி தெரியும் ?”

--
“ஆமா ஆமா அவன் பேரு ராஜ்குமார் தான்...”

---
“ஓஹோ ..இந்த வேலை பண்ணி இருக்கான்னா...... நீங்க வாங்க பேசிக்கலாம் ”
மேகங்கள் வானில் தங்களை பூமிக்கு அர்ப்பணிக்க தயாராகி கொண்டிருக்கிறது……. மழை பெய்யுமா.. ? காற்று மழையினை தடுத்திடுமா ? அந்தரத்தில் பட்டிமன்ற சூழ்நிலை……….



----------------------------(தொடரும்)----------------------------

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (23-Oct-13, 8:34 pm)
பார்வை : 241

மேலே