அரசியல் அரசியல்வாதி 10

------------------ தொடர்கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

முன்கதை சுருக்கம் :

ராஜ்குமார்....... 16 வயது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன். வயதுக்கு மீறிய சிந்தனையாளன். பயமறியா குணம் கொண்டவன் என்பதால் தான் கல்லூரி சேர பரிந்துரை கடிதம் வழங்க பணம் கேட்ட எம்.எல்.ஏ வை எதிர்த்து பின்பு தன் தந்தையை இழந்தான்.. அரசியல் மாற்றம் வேண்டும் என்று எண்ணி தன் வீட்டை அடமானமாக வைத்து 25,000 ரூபாய் பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளுங்கட்சி அலுவலகம் என தன் மனக்குமறல்களையும், சில புகார்களுடனும் அலைந்தான்.. ஆனால் அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.
சாலை கடக்கும் போது ஏற்பட்ட விபத்துக்குள்ளாகிறான். அவனை காப்பாற்றுகிறார் முன்னாள் IAS அதிகாரி அன்சாரி. அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது மருத்துவமனை ஊழியர் மாணிக்கத்துடன் நட்பாகி பின்பு மாணிக்கத்தின் வீட்டிலேயே தங்குகிறான். அங்கு அரசியல் மாற்றம் வேண்டும் என்று தன் விருப்பத்தை அன்சாரி, அவரது மகள் செய்தியாளர் ஜாஸ்மீன், மாணிக்கம் ஆகியோரிடம் சொல்லி ஒர் திட்டத்தை முன் வைக்கிறான். அதற்கு அவர்களின் உதவியையும் பெற்றான்..
பின்பு
முகநூல் மூலமாக ” மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் “ என்ற பக்கத்தை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. இந்த முகநூல் பக்கம் இந்த நால்வர் குழவால் நடத்தப்படுகிறது என்பதை யாரும் அறியாமல் இருக்க ஜாஸ்மீனின் தோழி ஒருத்தி கனடாவில் இருந்து இந்த பக்கத்தை ஆரம்பித்து கொடுத்தாள்
இந்த பக்கத்திற்கு அநேகம் பேர் வரவேற்பு தெரிவிக்க, சிலரின் எதிர்கேள்விக்கும் ஆதங்கமாக பதில் அளிக்கப்படுகிறது.. மேலும் முகநூல் மூலமாகவே அரசியல் மாற்றம் குறித்த விழிப்புணர்ச்சி கிராமப்புறத்திலும் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது... மேலும் இந்த அரசியல் மாற்றம் 30 நாட்களில் கொண்டு வர வேண்டும் என்றும் கால வரைறை நிர்ணியக்கப்படுகிறது இந்த நால்வர் குழுவால் ..

இந்த முகநூல் பக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லை , அதன் காரணங்களை விளக்கி, மக்களையும் சாடுகிறான் ராஜ்குமார். அப்போது அன்சாரி சொல்லும் கருத்தால் ஜாஸ்மீன், ஊடக்துறையால் இந்த முகநூல் பக்கத்திற்கு பாதிப்பு வருமா என்று சந்தேக கிளப்புகிறாள். அதற்கு ராஜ்குமார் பதல் அளிக்க தயாராகிறான்,

இனி....
********
ராஜ்குமார் தொடர்கிறான்...

“இந்த பேஜ்ல நிறைய பேர் மீடியா வில இருக்கிறாங்க. அவங்களே இந்த பக்கத்தில் இருக்கிற கலந்துரையாடல்களை ஒர் நியூஸ் ஆக்கிடுவாங்க. ஆனா இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கல. ஏன் ? இன்னும் நம் பேஜ் அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துல.
ஆக நாம் உருவாக்கிய இந்தபக்கம் இன்னும் பெரிய லெவல்க்கு பேச வைக்கணும்
அடுத்து இந்த பேஜ் பற்றி நாம மீடியாவில செய்தியா வர வைக்க தேவையில்லைன்னு நான் நினைக்கிறேன் .. நமக்கு பிராப்ளம் வராது. முதல்ல அரசியல்வாதிங்க **இதெல்லாம் நடக்குற காரியமா ? **அப்படீன்னு பேசுவாங்க. 2 வது மக்களும் இதப்பற்றி சிந்திக்க ஆரம்பிப்பாங்க....... இதுனால காது வழி செய்தியா எல்லாருக்கும் போகும். அது ஓரளவு நமக்கு பயன்படும் ” என்ற ராஜ்குமாரின் பேச்சை குறுக்கிட்டு... மாணிக்கம்

“பொதுவா அரசியல் கட்சிங்க டெவலப் ஆனது டீ கடை, சலூன், போன்ற பொதுமக்கள் ஒன்று கூடும் இடம்தான். அத நம்ம குழுவில் இருக்கிற நண்பர்கள் செஞ்சிட்டு இருப்பாங்க. இருந்தாலும் நாமளும் ஒன்னா இங்க இருக்காம தனியா தனியா ஒவ்வொரு ஊருக்கும் போய் மக்கள்கிட்ட அரட்டை அடிக்கிற மாதிரி பேசணும்.. “மாணிக்கம் சொல்ல

உடனே அன்சாரி “ யெஸ் . குட் ஐடியா... இன்னிக்கு 6 வது நாள்.. அடுத்த 15 நாளைக்கு நாம் தமிழ்நாடு முழுக்க முடிந்த வரை ஊர் சுற்றி இந்த அரசியல் மாற்றத்தின் கருத்துக்களை ஹாட் டாபிக்காக மாற்றுவோம். கூட நம்ம நண்பர்களும் கூட்டிட்டு போகலாம்... ஜாஸ்மீன்...... நீயும் உனக்கு தெரிந்த ரிப்போர்ட்டர்ஸ் மூலமா இந்த பேஜ் பற்றி எடுத்து சொல்லி ...... மக்கள் கிட்ட கருத்து கேட்கிற போல நம்ம திட்டத்தை சொல்ல வைக்கலாம்.
சரியா... நானும் மாணிக்கமும் ஊர் சுற்றுகிறோம்.. ஹா ஹா..
நீயும் , ராஜ்ம் இங்ககேயே இருங்க.... “

“சரிப்பா.. நல்ல ஐடியாதான் .. முடிஞ்சவரை மீடியா மூலமா பப்ள்சிட்டி பண்ண முயற்சி எடுக்கிறேன்.. ”என ஜாஸ்மீன் ஆர்வமாக சொல்லிட்டு இருக்கும் போது .. ராஜ்குமார் .. “அக்கா..! மீடியால நீயுஸ் வந்தாலும் நாம் பயப்பட வேண்டாம்.. பேஜ் பிளாக் பண்ணுவாங்க தெரிஞ்சுதான் நான் பேஸ்புக் அக்கெளண்டை கனடாவில் இருந்து ஆரம்பிக்க சொன்னேன்.. எப்படி அக்கா.......என் பிளான்... “

“அதான் சொன்னேன்ல டா ... நீ கேடி.. கிரிமினல்ன்னு..” நக்கல கலந்த தொனியில் ராஜ்குமாரை பாராட்டுகிறாள்.

“ஒகே ! நான் இப்போவே சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கிற முக்கியமான என் நண்பர்கள் கிட்ட சொல்லி நமது திட்டத்தின் படி அரசியல் மாற்றம் கருத்துக்களை பேச சொல்றேன். நானும் கடலூர் க்கு கிளம்புறேன்.. ” அன்சாரி

“நானும் அப்படியே என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லிடுறேன்... இப்போ நான் மதுரைக்கு கிளம்புறேன்..” மாணிக்கம்..

“ம்ம் சரி சரி........ கிளம்புங்க.... எதோ விளையாட்டுத்தனமா பண்றோம்... நல்லது நடக்கும்.. அப்பா... இந்தாங்க பணம்.. என் பேங்க் சேவிங்.. உங்க பயணத்துக்கு உதவும் .. இதுல கொஞ்சம் மாணிக்கம் அண்ணாவுக்கும் கொடுங்க. ” ஜாஸ்மீன் தன் அக்கறையை வெளிகாட்டுகிறாள்.

ராஜ் குமார் மனம் நெகிழ்கிறான்.. “உங்களுக்கு எல்லாம் எப்படி நான் நன்றி சொல்வேன்னு தெரியலே... என் வயசையும் பொருட்படுத்தாம ...எனக்கு மதிப்பு கொடுத்து எல்லாம் பண்றீங்க...”

“டேய்........ஒவரா பேசாதேன்னு சொல்லி இருக்கேன்.. “ ஜாஸ்மீன் பொய் கோபத்தை காட்டுகிறாள்.

இவ்வாறு இந்த நால்வர் குழுவின் “ மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் “ என்ற அரசியல் மாற்றத்திற்கான திட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடனும், அர்பணிப்பு உணர்வோடும் ஈடுபடுகின்றனர்.

அடுத்த நாள்...

ராஜ் குமார்............ தனது மற்றொரு முகநூல் கணக்கில் இருந்து **மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம்**(MTNM) பக்கத்தை பார்வையிடுகிறான். பக்கத்தை விரும்பியவர்கள் எண்ணிக்கை 2,89,008 பேர்...

அதில் கருத்து பரிமாற்றங்களின் மூலம், பலரின் மன எண்ணங்களை அறிந்து கொள்கிறான். அடுத்து ராஜ்குமார் ஒர் விவாதத்தை ஆரம்பித்து வைக்கிறான். அது அரசியல் அமைப்பை தலைகீழாக மாற்றிவிடும் என்பதை அவன் அறிந்திருக்க வில்லை.

அவன் முன் வைத்த விவாதம்....
===============================================
தற்போதைய அரசியல்வாதிகளை முற்றிலும் நாம் ஏன் புறக்கணிக்க கூடாது. முன்னாள் ஆட்சிக்கு இன்றை ஆட்சி மோசம்... இன்றைய ஆட்சிக்கு நாளைய ஆட்சி மோசம் என்று நாம் புலம்பி கொண்டிருப்பது ஏன். ?
எல்லாரும் ஊழல் குட்டையில் ஊறிய லஞ்ச மட்டைகள் தானே.. இவர்களை ஏன் நாம் புறக்கணிக்க கூடாது..
கட்சி அனுதாபிகள், தலைவர்/தலைவி அனுதாபிகள், சின்னத்தில் மயங்கிய முட்டாள்கள் என நாம் இருப்பதால் தான் நம்மை ஏமாற்றி அரசியல் மூலம் ஆதாயம் பார்க்கிறார்கள். சினிமா என்ற மாய உலகம் தந்த மந்திரவாதிகள் நம்மை மயக்கி ஆண்டது போதும். மந்திரவாதிகளுக்கு பல்லாக்கு தூக்கிய மற்ற கட்சிகளையும் புறக்கணிப்போம். சினிமாவாதிகள் அற்ற அரசியல் தேவைப்படுகிறது .
அடுத்து ஜாதி வெறி தூண்டும் கட்சிகளை புறக்கணிப்போம்.. ஜாதியற்ற சமுதாயம் அமைப்போம்.

அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில்...

எவருக்கும் வாக்கு இல்லை என்ற 49 ஒ பிரிவை பயன்படுத்தி .. இந்த சதிக்கார கும்பலை முதலில் விரட்டுவோம்.
ஆள்வதற்கு கட்சி இல்லை என்ற நிலையை வரவழைப்போம். அப்போது வாக்களார்களாகிய நமக்கு புதிய தலைமை கிடைக்கும்.. அந்த புதிய தலைமைக்கு தலைவன், தலைவி உங்களில் ஒருத்தர் தான்........ யார் அது......??

சிந்திப்போம்.. மாற்றுவோம்.. அரசியலை புனிதப்படுத்துவோம்.
===============================================

இந்த விவாதம் பல ஆதரவு கருத்துக்கள் வந்தாலும் எதிர் கருத்துக்களும் வராமல் இல்லை. எதிர் கருத்திட்டவர்களுக்கு ராஜ்குமார் தக்க பதிலை கொடுத்தான்.. அவனுக்கு ஆதரவாக மற்றவர்களும் வாதிட்டார்கள்.
இந்த பக்கத்தில் நடக்கும் விவாதங்களை பார்த்த ஒர் மூத்த பத்திரிகையாளர்... தன் வார இதழில் இதனை பற்றி கட்டுரை ஒன்று எழுதி.. ஊடகத்துறைக்கு இந்த முகநூல் பக்கத்தை அறிமுக செய்து வைக்கிறார்.
அந்த கட்டுரையில்

================================================
ஃபேஸ்புக் என்றாலே இளைஞர்கள் அரட்டை அடிப்பதும், நட்பு, காதல் கொள்வதும், பல விஷயங்களை அறிந்து பகிர்ந்து கொள்வதுமாக இருக்கும் என குற்றம் சாட்டியவர்களின் முகத்தில் கரி பூசுகிறது. ஒர் ஃபேஸ்புக் பக்கம்.
அது MTNM. அபிமான சினிமா நட்சத்திரங்கள், பிரபல நட்சத்திரங்களின் பக்கத்தை விரும்புவதை போல இந்த பக்கமும் அதிக பேரால் விரும்பப்படுகிறது.. கிட்டதட்ட 3 லட்சம்..
அப்படி என்னதான் இருக்கிறது..? பார்த்தேன். கிசுகிசு பக்கம் அல்ல. சினிமா கவர்ச்சி படங்கள் அதில் இல்லை.
அதில் நான் பார்த்தது அரசியல். இன்றைய அரசியலை விமர்சித்து இன்றைய இளைஞர்கள் விவாதிக்கும் அரசியல் பக்கம் அது
நியாய விலைக்கடை லஞ்சம் முதல் அந்நிய செலவாணி ஊழல் வரை. உள்நாட்டு பிரச்சினை முதல் சர்வதேச பிரச்சினை வரை அனைத்தும் விவாதிக்கிறார்கள். தற்போது இருக்கும் அரசியல்வாதிகளின் கனவை தூள் தூளாக்கும் முற்போக்கும் சிந்தனைக்கு சென்றுவிட்டார்கள்.
இது என்னவோ ? வெறும் திண்ணை பேச்சு மாதிரி தெரியவில்லை. அடுத்த மாத தேர்தலில் இந்த முகநூல் பக்கம் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். அரசியலில் முக்கிய முடிவினை எடுக்கும் அதிகாரம் இன்றைய மாடர்ன் இளைஞர்கள் கையில்... ===============================================
இவ்வாறு அந்த கட்டுரை நீள்கிறது.

இந்த கட்டுரை ஊடகத்துறையில் முக்கிய விவாதப்பொருளாக மாறி கொண்டிருந்தது.
ஜாஸ்மீன் தன் ஊடக நண்பர்களின் மூலமாக MTNM பக்கத்தை மக்களிடையே பரப்ப செய்கிறாள்.. தினசரி, வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள், பண்பலை ரேடியோக்கள் என அனைத்திலும் முகநூல் பக்கத்தின் கருத்துக்கள் பரவுகின்றன. பரவ வைக்கப்பட்டன என்பதே உண்மை. காரணம் ஜாஸ்மீன். அவளின் ஊடகத்துறை பயற்சி இதற்கு நன்கு உதவியது.
மாணிக்கம் மற்றும் அவனின் நண்பர்கள் ......... மதுரை, திருநெல்வேலி சுற்றியுள்ள கிராமங்களின் டீக்கடையில் இதனை பற்றி எதார்த்தமாக மக்களிடம் பேச்சுக்கொடுத்து மக்களை சிந்திக்க வைக்கிறார்கள்.
அன்சாரி மற்றும் அவரின் நண்பர்கள் கடலூர், கும்பகோணம் , தஞ்சாவூர் , திருச்சி, நாகப்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் மக்களிடையே கலந்து பேச்சு கொடுத்து அரசியல் மாற்றம் சிந்தனையை மக்களிடையே ஆழமாக பதிய முயற்சிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக ராஜ்குமார், அன்சாரி , ஜாஸ்மீன் ,மாணிக்கத்தின் கடின உழைப்பு மற்றும் மறைமுக தந்திர வேலைகள் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளை புறக்கணிக்கும் சிந்தனையை மக்களிடம் திணித்துவிட்டனர் என்றே சொல்லவேண்டும்.
ஆனால் மக்கள் அவ்வாறான மாற்றத்தினை விரும்புகிறார்களா ? இல்லையா.. அந்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட “செய்தி தொகுப்பு” சொல்வது என்ன ?

-------தொடரும்.............

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (31-Oct-13, 4:50 pm)
பார்வை : 298

மேலே