அரசியல் அரசியல்வாதி 12-இறுதி பகுதி

----------------- தொடர்கதை : இரா .சந்தோஷ் குமார் /


தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வந்தது.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில், எலக்ட்ரானிக் எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் ஆரம்பமானது.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு .
தமிழமெங்கும் அரசியல்வாதிகள், கட்சி அனுதாபிகள் மட்டுமல்லாமல் சராசரி பொதுமக்களிடமும ஒரு வித பரபரப்பு.

----------------------------------------------------------------------------

எந்த வித பரபரப்பும் இல்லாமல் ராஜ்குமார், தன் மேற்படிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான். அவன் தேர்வு செய்த படிப்பு. பி.ஏ. அரசியல் அறிவியல்.

“என்ன ராஜ் ? தமிழ் நாடு ஃபுல்லா ஒர் பெரிய விவாதத்தை உண்டு பண்ணிவிட்டு , இப்போ மீடியா எல்லாம் பரபரப்பா இருக்கும் இந்த நேரத்துல நீ என்னடானா ஜாலியா உக்கார்ந்து என்னமோ எழுதிட்டு இருக்க ? மாணிக்கம் ஆச்சரியமாக கேட்க
“எனக்கு என்னன்னா டென்ஷன்? எனக்கு தப்பா தெரிஞ்சதா மக்கள்கிட்ட சொன்னேன், அதுக்கு நீங்க, அன்சாரி அப்பா, ஜாஸ்மீன் அக்கா எல்லாரும் ஹெல்ப பண்ணீங்க. நாம சொன்னது மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுவே நமக்கு வெற்றிதான், தேர்தல் முடிவு நம்ம எதிர்பார்த்த மாற்றம் தரலாம். இல்ல அடுத்த தேர்தல்ல கூட மாற்றம் வரலாம். நம்ம மக்களை நாம சாதாரணமா எடை போட முடியாது, உணர்ச்சி வசப்பட்டவர்கள் தமிழர்கள் அப்படீன்னு சொல்லுவாங்க. அது தப்பு ! உணர்ச்சியை உருவாக்குபவர்கள் தமிழர்கள். ஆக அரசியல் மாற்றம் நம்ம மக்கள் உருவாக்குவாங்க.. கண்டிப்பா.. ஆனா எப்போன்னு சொல்ல முடியாது. “ ராஜ்குமாரின் பேச்சில் ஆவேசம் மாறி ஒரு பக்குவநிலை அடைந்ததை மாணிக்கம் உணர்ந்தான்.

----------------------------------------------------------------------------

முதல் சுற்று முடிவடைந்தது... அதில் பெரும்பாலும் ஆளும் கூட்டணி கட்சிகளே முன்னிலை வகுத்தன. சில இடங்களில் ஆளும் கட்சிக்கு நிகரான வாக்குகளை பெற்றன எதிர் கட்சிகள் .

நாளை விடியல் தொலைக்காட்சியில் விவாதம் ஒன்று நடைபெறுகிறது.. அதில்

---
“என்னமோ மக்கள் அரசியல்வாதிங்களை புறக்கணிச்சடுவாங்கன்னு எவனோ கிறுக்குபசங்க பேஸ்புக் எழுதிட்டானுங்களாம். உடனே மக்கள் மனசு மாறி அரசியலை மாத்திடுவாங்களாம்.. ஹா ஹா ஹா ஹா
இப்போ என்ன ஆச்சு.........! ” அரசியல் பிரமுகர் ஒருவர் நையாண்டியாக பேசுகிறார்.

“ இருங்க இருங்க இப்போதான் ஒரு ரவுண்டு முடிஞ்சு இருக்கு. அதுவும் வெறும் 400, 500 லீடிங் தான்.. அடுத்து எங்க ஆட்சிதான்,,, பாருங்க. மக்கள் உங்க கட்சியைதான் புறக்கணிப்பாங்க, ஏன்னா நீங்க ஆளுங்கட்சி , அடுத்த சான்ஸ் எங்களுத்தான் ..வழக்கம்போல மக்கள் எங்களுக்குதான் ஓட்டு போட்டிருப்பாங்க “ எதிர்கட்சி பிரமுகர்

விவாதம் சூடாக நடக்கிறது.

----------------------------------------------------------------------------

அன்சாரி தன் வீட்டு படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தார்..

“ அப்பா, என்ன இன்னும் தூங்குறீங்க?, இன்னிக்கு எலெக்‌ஷன் ரிசல்ட், எழுந்திருங்க “ ஜாஸ்மீன் தன் தந்தையை எழுப்புகிறாள்.
“என்னம்மா நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சுடா... அதான், சரி ரிசல்ட் எப்படி போகுது “

“என்னப்பா , நாம எதிர்ப்பார்க்குகிற ரிசல்ட் வரலப்பா.. பட் ரொம்ப ஸ்லோவா ரிசல்ட் வருது.. லாஸ்ட்டா 10 மணிக்கு அப்டேட் ஆனா செய்தி , 2 மணி நேரமாச்சு.. இன்னும் எந்த ரிசல்ட்ஸ்ம் வரலப்பா... சம்திங் ராங்” ஜாஸ்மீன் புதிர் போடுகிறாள்

“ ம்ம் வெயிட் பண்ணி பார்ப்போம்.. எதோ நடக்குது.. என்னான்னு தெரியல , நம்ம மினிஸ்டர் பி,ஏ கிட்ட கேட்போம். “ அன்சாரி ஆளும் கட்சி அமைச்சர் பி ஏவை தொடர்பு கொண்டு தேர்தல் முடிவு கால தாமதம் ஆவதற்கான காரணத்தை அறிகிறார். பின்பு “ ஆமாம்மா, ரிசல்ட்ஸ் தமிழ்நாடு புல்லா வேற லெவெல்ல போகுதாம்,.. ஆளும்கட்சிகாரங்க எலக்ட்ரானிக் மிசின்ல வேலை செய்யல.... அப்படி இப்படின்னு தகராறு பண்றாங்களாம்.. அதான் கொஞ்ச நேரத்திற்கு ரிசல்ட்ஸ் அறிவிக்காம இருக்காங்க.” என்ற அன்சாரி

” சரிம்மா , நான் ராஜ்குமாரை வர சொல்லி இருக்கேன். நாளைக்கு அவன் காலேஜ் ஜாயிண்ட் பண்ணனும்... நான் வெளிய போயிட்டு வரேன்.. அவன் வந்தா இன்னிக்கு நைட் இங்கேயே இருக்க சொல்லு.. “

” சரிப்பா ”என்ற ஜாஸ்மீன் டி.வியை நோக்கி ரிமோட் கண்ட்ரோலை காட்டுகிறாள்.

செய்தி சேனல் ஒன்று டி.வி திரையில் வருகிறது

----------------------------------------------------------------------------


மாலை 3 மணி....................

ஓட்டுக்கள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால் சில காரணங்களால் முடிவு அறிவிப்பதை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்திருக்கிறது. மிண்ணனு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் முடிவு அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்ருக்கலாம் என்று தெரிகிறது.

செய்தி சேனலில் ”சற்று முன் வந்த செய்தி” யாக வாசிக்கப்படுகிறது.

மாலை 4:17 மணி ............

மீண்டும் ஒரு புதுசெய்தி

== மிண்ணனு ஓட்டுபதிவு இயந்திரத்தில் எந்த கோளாறும் இல்லை என்றும் முடிவு இன்று இரவு 8 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ===

மாலை 4 :35 மணி

பரபரப்பாக செய்தி ஒன்று தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது...

தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்ற செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு “ தமிழகத்தில் சில இடங்களில் எதிர்கட்சிகள் வன்முறை. போலீஸ் குவிப்பு .. மதுரையில் எதிர்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கு மோதல்........ “
தமிழகம் முழுவதும் வன்முறை பரவலாக பரவும் அபாயம்.

என்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.

மாலை 6 :21 மணி

ஊடகங்களில் ஓரு செய்தி பரவுகிறது ” தமிழகத்தில் பாதுகாப்புக்காக கூடுதல் ராணுவப்படையை அனுப்புமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்கிறது.” குறிப்பிடத்தக்க வன்முறையை தவிர வேறு அசம்பாவிதம் நடக்காத சூழ்நிலையில் ராணுவப்படை எதற்கு?... மக்களை விட அரசியல்வாதிகள், பத்திரிக்கை, ஊடகத்துறைகாரர்களுக்கு குழப்பம் .

----------------------------------------------------------------------------
இரவு 7:02 மணி

அன்சாரியின் வீட்டில் ராஜ்குமார், ஜாஸ்மீன் உடன் சதுரங்க ஆட்டத்தில் மும்முரமாக ஆடுகிறான்.

அப்போது அங்கு வந்த அன்சாரி மற்றும் மாணிக்கம் ஆகியோர் ராஜ்குமாரை டி.வி செய்தி பார்க்க வருமாறு அழைக்கின்றனர்.

----------------------------------------------------------------------------
இரவு 7:10 மணி

தேர்தல் முடிவுகளை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அறிவிக்கிறார் ... தேர்தல் ஆணையர்

“ இதுவரை இந்திய வரலாற்றில் தேர்தல் ஆணையம் சந்திக்காத ஒரு சூழ்நிலையை இன்று சந்திக்க நேர்ந்துவிட்டது. ஆதலால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஆகிவிட்டது...

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 234 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே தெளிவான முடிவு கிடைத்துள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகளில் அனைத்து கட்சிகளிலும் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று 30 முதல் 100 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளன. ஆதலால் முடிவு அறிவிப்பத்தில் இழுபறி நீடிக்கிறது.

ஆனால் 91 % ஒட்டுகள் பதிவு ஆகியுள்ள இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு 15 சதவீதமும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பதிவு ஆகியுள்ளன.. “ அப்போது குறுக்கிட்ட ஓரு பத்திரிக்கை நிருபர். ” அப்படீன்னா மீதி ஓட்டு எல்லாமே செல்லாத ஓட்டுகளா சார் ? “

தேர்தல் ஆணையர் பதில் அளிக்கிறார்...

“இல்லை.. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் செல்லாத ஓட்டுக்கள் விழ வாய்ப்பில்லை. அப்படி என்றால் மற்ற சதவீத ஓட்டுக்கள் என்ன ஆயிற்று என்றால்..........

15 + 4 = 19 சதவீத ஓட்டுக்கள் தவிர மற்ற சதவீத ஓட்டுக்கள் அனைத்தும் “ 49 ஒ” க்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது யாருக்கும் ஓட்டளிக்க மக்கள் விரும்பவில்லை என்று பட்டனை அழுத்தி மக்கள் ஓட்டு அளித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தான் எலெக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் புதிதாக ”49 ஒ” க்கு வாக்கு அளிக்கும் முறையை கொண்டு வந்தோம் என்பது குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். “ என்றார் தேர்தல் ஆணையர்..


பத்திரிக்கையாளர்கள் : அப்படி என்றால் சமுதாய தளத்தின் மூலம் மக்களை ஓட்டளிக்க வேண்டாம் என்ற வற்புறுத்தியவர்களின் வெற்றியாக இது இருக்கும் அல்லவா.. அப்படி மக்களை ஓட்டளிக்க கூடாது என்று பிரச்சாரம் செய்வதும் சட்டத்திற்கு புறம்பானது தானே .. உங்களின் கருத்து ?

தேர்தல் ஆணையர் : ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமுதாய தளங்களில் வந்த செய்திதான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது தனிப்பட்ட கருத்து உரிமையுள்ளவர்கள் சொல்லும் செய்தியாகத்தான் பார்க்கப்படுகிறது . அதை மக்கள் நம்புவதும் நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அது பிரச்சாரமாக எடுத்து கொள்ள முடியாது.. அப்படிப்பட்ட சமுதாய தளத்தில் பரப்பட்ட செய்தியையும் அதை பரப்பியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது ,, அப்படிப்பட்ட விதி ஏதும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை.

பத்திரிக்கையாளர்கள் : ஆட்சி அமைக்க யாருக்கும் தகுதி இல்லை எனும் போது. வேறு என்ன வழி.. ? மீண்டும் எலெக்‌ஷன் வருமா?

தேர்தல் ஆணையர்.: யாருக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் இல்லை என்பதைவிட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கட்சி சின்னத்தை இழக்க வாய்ப்புள்ளது. கட்சி அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால் மொத்தம் குறிப்பிட்ட சதவீததிற்கு குறைவாக வாக்குகள் அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன, விதியின் படி கட்சி அங்கீகாரம் ரத்து செய்யலாம் , இதுகுறித்து நாளை அறிவிக்கப்படும். அடுத்த 6 மாதத்திற்கு தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும்.

மீண்டும் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி எப்படி அமைக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தை தேவைப்பட்டால், ”மாற்றம் தேவைப்படுமெனில் மாற்றம் ”செய்ய சட்ட வல்லுனர்களிடம் கலந்துரையாடி குடியரசுத்தலைவர் மற்றும உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை கேட்கப்படும்.

நன்றி !!

----------------------------------------------------------------------------

மறுநாள் காலை :

லயோலா கல்லூரி வளாகம் , கல்லூரி முதல்வர் அறையில்
ராஜ்குமார் மற்றும் அன்சாரி....

“ வாவ் எக்செலண்ட் ராஜ்குமார்........ இவ்வளவு சாதனை பண்ணி இருக்க? நிறைய உலக அறிவு உனக்கு இருக்கே... நீ சாதாரண ஆள் இல்ல தம்பி . உனக்கு இந்த காலேஜ் ல கண்டிப்பா இடம் உண்டு. உனக்கு நோ பீஸ்“ ராஜ்குமாரின் சான்றிதழ்களையும் அவன் பள்ளியில் எழுதிய சில ஆய்வு கட்டுரைகளையும் பார்த்தப்படியே கல்லூரி முதல்வர்.

“ நன்றி சார்....... அப்போ ..அப்போ என்ன செய்யனுமோ அத கரெக்ட்டா பண்ணிடுவேன் சார். என் வெற்றிக்கு அதுதான் காரணம் சார்.. நானும் சாதாரண பையன் தான் சார் “

“ ம்ம்ம் உன்னை போல சில யூத்ஸ் தானே ஃபேஸ்புக் மூலமா அரசியலை புரட்டி போட்டாங்க.. லேட்டஸ்ட் டெக்னாலாஜில ஓர் புரட்சி.. .. சரி ராஜ்குமார் நீ ஃபேஸ்புக்ல இருக்கியா ? அந்த “ மாற்றம் தேவையெனில் நாம் ,மாறுவோம் “ பேஜ் பார்த்திருக்கியா என்ன ? “

அன்சாரியும் ராஜ்குமாரும் மெலிதாக சிரித்தனர்....


” அந்த பேஜ் எவன் கிரியேட் பண்ணினான்னு தெரியல. அவனை பார்த்தா கை எடுத்து கும்பிடணும். இப்போ அந்த பேஜ் ஏன் ஒபன் ஆக மாட்டிங்கிறதுன்னு தெரியல அன்சாரி சார் “ கல்லூரி முதல்வர்..

”அப்படியா சார்.. !!” அப்பாவி முக பாவனையுடன் அன்சாரி .

----------------------------------------------------------------------------

கல்லூரிக்கு வெளியே ........................

கல்லூரி மாணவர்கள் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி ,பட்டாசு கொளுத்தி.. அரசியல் மாற்றத்தினை வரவேற்று கொண்டாடினர். அவர்களுக்கு தெரியாது அந்த அரசியல் மாற்றம் கொண்டு வந்தவன் ,அங்கு அவர்களை கடந்து செல்லும் அந்த கல்லூரியின் நாளைய மாணவன் என்று..........
..................................................................
...................................................................

ராஜ்குமார் , அப்துல் அன்சாரி முன்னாள் I.A.S அதிகாரியிடம் கேட்கிறான்.
“அன்சாரி அப்பா............. நீங்க ஏன் அடுத்த தமிழக முதலமைச்சர் ஆக முயற்சி செய்ய கூடாது ? “


.............................(முற்றும் )..............................................

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Nov-13, 3:32 am)
பார்வை : 545

மேலே