தொலைபேசியா தொல்லைபேசியா

அப்புசாமியின் தொ(ல்)லைப் பேச்சு


”தொலை பேசியா? தொல்லை பேசியா?
தொலைவில் இருக்கும் சீதாக் கிழவிக்கு
ஃபோன் செய்யப் போனால் தொல்லை அதிகம்.
இடைமறிப் பேச்சைக் கேட்கும் அவலம்.
கொஞ்சும் காதலர் குரல்கள் கேட்கும்
கோபக் கனல்என் செவியில் பாயும்.
என்சீதாவின் பொன்குரல் மட்டும்
கேளாது நானோ அனலாய்க் கொதிப்பேன்.
பலமுறை முயன்றும் தோல்வியில் விழுந்தேன்
பாவிகள் என்ன நிர்வாகம் செய்கிறார்?
எந்த நேரமும் இடைமறிப் பேச்சு
சீதையின் குரலை எப்போது கேட்பது?
கால்கள் கடுத்தன காத்து நின்றதால்
தோள்கள் வலித்தன ரிசீவரைச் சுமந்ததால்.
நெஞ்சம் கனத்தது ஏமாற்றம் வந்த்தால்.
தேன்மொழி சீதையின் குரலைக் கேட்க
நான்படும் தொல்லைகள் சொல்லில் அடங்குமோ?
காலை மதியம் மாலை என்று
முயன்றேன் அயர்ந்தேன் தளர்ந்தேன் சோர்ந்தேன்.
ஒவ்வொரு தோல்வியும் புத்துணர்ச்சி யூட்டும்
அதனால் எனக்கு வருமோ தோல்வி?
தொலைபேசிக் கருவியின் அருகில் என்படுக்கை
மாற்றி விட்டேன்நான் மனத்துணிவுடனே!
தொல்லை இதனால் மற்றவர்க் கெல்லாம்
அதைப் பற்றிக் கவலை எனக்கு இல்லை.
என்கடன் சீதைக்கு ஃபோன் செய்வதுவே!
ஆயிரம் முயற்சிகள் வீண் போனாலும்
ஒருநாள் அதிகாலை என்கனா பலித்தது!
ஐந்து மணிக்குக் கொம்புத் தேனாய்
சீதையின் குரல்என் செவியில் பாய்ந்தது.
பிறவிப் பயனைப் பெற்றவன் போல
பேசத் துவங்கினேன் சீதை மாதுடன்.
அவள் குரல் மதுரம் சொரிந்த போதிலும்
அவள் பேச்சு ஏனோ அனலாய்ச் சுட்டது.
“அப்புக் கிழவா, அப்புக் கிழவா
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை
எழுப்பித் தொல்லை தருவதற் காகவா
உலகே உறங்கும் இந்த வேளையில்
‘காமன் சென்ஸ்’ கொஞ்சமும் இன்றி
தொலை பேசுகிறாய் தொல்லை சனியனே!”
என்றுகூறி இணைப்பைத் துண்டித்தாள்.

இந்தப் பேச்சுக்கா தவமிருந் தேன்நான்?
உடனே ரிசீவரைப் பட்டென்று எறிந்தேன்
அருகில் கிடந்த கட்டையை எடுத்து
அடித்து நொறுக்கினேன் தொலைபேசிக் கருவியை.
அதன்பின் படுக்கை அறைக்குப் போனேன்
கையளவு தூக்க மாத்திரை எடுத்து
கபீரென்று வாயில் அவற்றை போட்டபின்
வயிறு முட்டத் தண்ணீர் குடித்தேன்!
கிடுகிடு வென்று மாத்திரை சென்று
இரைப்பை உணவில் கலந்து கொண்டது.
இவ்வுலகில் இனி எனக்கென்ன வேலை?
இன்னுயிரே நீ அஞ்சிட வேண்டாம்
சீதாக் கிழவிக்குக் ‘குட் பை’ சொன்னேன்
சீக்கிரம் என்னுயிர் பிரிந்திட வேண்டினேன்”


தன்னுரை முடித்தபின் படுக்கையில் அப்பு
அடுத்த நொடியில் குறட்டை இடிகள்.
தூக்க மாத்திரை என்று நினைத்து
பேதி மாத்திரைகள் விழுங்கிய தாலே
அடுத்த நாள் முழுதும் கழிப்பிடந் தன்னை
இருப்பிடமாகக் கொண்டார் அப்பு. (1991)


(1991 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள CIEFL –ல் 4 வாரகாலப் புத்தொளிப் பயிற்காகச் சென்றிருந்தேன். அங்கு பயிற்சி பெற வந்த ஒரு பேராசிரியர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி போலவே தோற்றத்தில் இருப்பார். விடுதியில் உள்ள தொலைபேசியில் அவர் அடிக்கடி பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அது மட்டுமே உண்மை. மற்றவை பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளின் தாக்கம்)

எழுதியவர் : இரா, சுவாமிநாதன் (15-Nov-13, 12:28 pm)
பார்வை : 351

மேலே