இந்திய முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ச்சி1

வீரர் திப்பு சுல்தான் (கி.பி. 1782 - 1799)

இந்திய விடுதலை உணர்வின் சின்னமாக விளங்கிய வீரர் திப்பு சுல்தான் என்ற மாமனிதரைப் பற்றி இந்தியர்கள் இன்னும் சரியாகவும் தேவைப்படும் அளவுக்கும் அறிந்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பது முற்றிலும் ஒரு கற்பனையான குற்றச்சாட்டே என்பதைப் புரிந்து கொள்ள திப்புவின் வாழ்க்கை ஒன்றே போதுமான ஆதாரமாக உள்ளது.

ஆனால் ஔரங்கசீப்புக்குச் செயதது போலவே, திப்புவின் சரிதையை எழுதிய ஆங்கில வரலாற்று ஆசிரியர்களும் , திப்பு ஒரு மதவெறியர் என்பதாக சித்தரித்துள்ளனர். ஆனால் இம்மாதிரியான நூல்களைப் படித்தவர்கள். மைசூர் மாநிலத்திலும் மற்ற தென்னகப் பகுதிகளிலும் சிறந்து விளங்கும் பழம்பெரும் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஒரு முறை செல்வார்களேயானால், அங்கே பல அதிசயங்களைக் காணலாம்.

திப்புவின் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சம உரிமை பெற்று வாழ்ந்தனர். ஒரு முஸ்லீம் ஞானி ஒருவர் சீரங்கப்பட்டிணத்தில் தம் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒரு முறை சீரங்கப்பட்டிணத்தின் முக்கிய வீதியொன்றில் இந்துக்களின் ஸ்வாமி ஒன்று உற்சவ கோலத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பீர்லதாவின் சீடர்கள் அதைப் பார்த்து எள்ளி நகையாடினர். அது கண்டு சினமுற்ற இந்துக்கள், பீர்லதாவின் சீடர்களை நையப் புடைத்துவிட்டனர்.

"ஒரு முஸ்லீம் ஆளும் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லையே" என்று பீர்லதா திப்புவிற்கு கடிதம் எழுதினார். ஆனால் நடந்த உண்மைகளை விசாரித்தறிந்த திப்பு, "சட்டத்தின் கண்களில் இந்துக்களும் முஸ்லீம்களும் சமமானவரே. குற்றம் செய்தவர்களைத்தான் அடியேனால் தண்டிக்க முடியும்" என்று பதில் அனுப்பினார்!

எதிர்ப்பு காட்டிய மங்களூர்க் கிறிஸ்தவர்களை மைசூரில் குடியேற்றினார் திப்பு. அவர்கள் தங்கள் மதத்தை அசட்டை செய்து மனம்போன போக்கில் வாழத் தலைப்பட்டனர். எல்லா மதத்தினரும், அவரவர் மதவழிபாட்டில் முறைப்படி இருக்க வேண்டும் என்று திப்பு விரும்பினார். எனவே, அந்த கிறிஸ்தவர்களைச் சீர்திருத்த, குருமார்களை அனுப்புமாறு, போர்த்துக்கீசிய வைஸ்ராய்க்கும், கோவாவின் தலைமைப் பிஷப்பிற்கும் கடிதம் எழுதினார்! அக்கடிதங்கள் இன்றும் கோவாவின் வரலாற்று ஆவணக்களரியில் உள்ளன.

திப்புவின் ஆட்சியில் இடம் பெற்ற மாற்று மதத்தவர்:-

இந்துக்களில் எந்தெந்த வகுப்பார், எந்தெந்த துறைகளில் சிறந்து விளங்குவார்கள் என்று கண்டறிந்து, அவரவர் திறமைக்கு ஏற்ற பதவிகளை திப்பு அளித்தார். அதில் திவான் பூர்ணய்யாவும் திவான் கிருஷ்ணா ராவும் முக்கியமானவர்களாக இருந்தனர். காவல்துறையின் ஒற்றை பிரிவிற்கு, ஆஞ்சி ஷாமையா என்ற ஷாமா அய்யங்கார் என்பவர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். வரிவசூல் துறையின் பொருளாளராக, சுப்பாராவ் இருந்தார். ராஜா ராமச்சந்திர ராவ் என்பவர் மாவட்ட அதிகாரிகளில் சிறந்து விளங்கினார்.

பிற அரசுகளுக்குத் திப்புவின் தூதர்களாகச் சென்றவர்களிலும் இந்துக்கள் பலர் இருந்துள்ளனர். அவர்களில், அப்பாஜி, சீனிவாச ராவ் ஆகியோர் முக்கியமானவர்கள். படைத்துறையில் சிவாஜி ராவ், ஹரி சிங் போன்ற தளகர்த்தர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.


தொடரும்...

எழுதியவர் : நாகூர் ரூமி (15-Dec-13, 7:49 pm)
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே