இந்திய முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ச்சி 2

திப்பு சுல்தான் கோயில்களுக்கும் மடங்களுக்கும் அளித்த கொடை:-

திப்புவின் ஆதரவால் சீர்பெற்று விளங்கிய திருக்கோயில்களில் முதன்மையானது ஸ்ரீரங்க நாதர் கோயிலேயாகும். இது விஜய நகர ஆட்சியின் போது, ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கட்டப்பட்டது. திப்புவின் மாளிகையான பட்டன் மஹாலுக்கும் இந்தக் கோயிலுக்கும் இடையில் 200 அடி தூரம்கூட இருக்காது.

காலம் தவறாமல் அதில் ஆராதனை நடப்பதற்கு திப்புவின் அரசு வேண்டிய உதவிகளைச் செய்துள்ளது. இக்கோயிலில் திப்புவின் பெயரைத் தாங்கிய, பிரசாதம் வைக்கும் வெள்ளிப் பாத்திரங்கள் ஏழும், பல தீபத்தட்டுக்களும், ஊதுவத்தி நிலைப்புத் தண்டுகளும் இருப்பதை இன்றும் காணலாம். (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, அறிக்கை, 1912, பக்கம்2).

ஒரு முறை இந்துக் கோயிலில் மணி அடிக்கவில்லை என்பதற்காக, அதன் தர்மகர்த்தாவை திப்பு கடிந்து கொண்டார். ஒரு முஸ்லீம் ஆட்சியில், இந்துக் கோயில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவிடக்கூடாது என்பதில் திப்பு கவனமாக இருந்தார். (திப்புவின் அரசியல், பக்கம் 203).

திப்புவின் தலைநகர் கோட்டைக்குள் ஸ்ரீரங்க நாதர் கோயிலைத் தவிர, சில அனுமார் கோயில்களும், சைவ சமயக் கோயில்களும் இருந்தன. மைசூருக்கு மேல் திசையில், மேல்கோட்டை என்ற ஊரில், நரசிம்மர் கோயிலும், நாராயணசாமி கோயிலும் சிறந்து விளங்கின. இக்கோயில்களுக்கு திப்பு அளித்த கொடைப் பொருள்கள் எண்ணிக்கையிலும் மதிப்பிலும் மிகுந்தன. நரசிம்மர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1931, பக்கம் 73).அதனை,, திப்பு 1786ஆம் ஆண்டு கோயிலுக்குக் கொடுத்திருக்கிறார். நாராயண சாமி கோயிலுக்கு வெள்ளித் தாம்பளங்கள் பலவும், வெள்ளி மற்றும் தங்க ஆராதனைப் பாத்திரங்கள் பலவும் கொடுத்துள்ளார். (மைசூர் ஆரிக்கியலாஜிகல் சர்வே, 1917, பக்கம் 146).

நஞ்சன் கூடு என்ற சைவத்தலத்தில் இருந்த திரு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்துக்கு திப்பு கொடுத்த பல கொடைப் பொருள்களில், திப்புவின் பெயரால் உள்ள மரகத லிங்கம் முக்கியமானது. பார்வதி சிலைக்கு இடப்புரத்தில் அந்த லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அங்குல உயரம் உள்ள அந்த லிங்கம் பளிச்சிடும் பச்சைக் கல்லால் ஆனது. திப்பு சுல்தான் வழங்கியதால், அந்த லிங்கத்துக்கு "பாதுஷா லிங்கம்" என்றே பெயரிடப்பட்டுள்ளது! (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1940, பக்கம் 23).

திரு காந்தேஸ்வர ஸ்வாமி கோயிலில் திப்பு அளித்த ஆராதனைத் தட்டு ஒன்று உள்ளது. அதன் அடித்தளமாக நவரத்தினங்கள் அமைந்துள்ளன. (எபிக்ராஃபியா கர்னாட்டிகா, வால்யூம் 3, ப்ளேட் 77, பக்கம் 25). அதே கோயிலில் ஸ்வாமியின் கழுத்தில் பச்சை மரகதங்கள் பதிப்பப் பெற்ற பொன்னாரம் ஒன்றும் உள்ளது. இதுவும் திப்புவால் கொடுக்கப்பட்டதே.

மேல்கோட்டை நாராயணசாமி கோயிலுக்கு ஒருமுறை திப்பு 12 யானைகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அவற்றில் இரண்டு ஆண் யானைகள். (மைசூர் ஆரிக்கியலாஜிகல் சர்வே, 1917, பக்கம் 146).

நஞ்சன்கூடு தாலுக்காவில் கலேல் என்ற ஊரில் திருலட்சுமி காந்தர் கோயில் உள்ளது. அதற்கு, திப்பு வழங்கிய ஆராதனைத் தட்டுகளும், தாம்பூலத் தட்டுகளும் வெள்ளிக் கும்பங்களும் இன்னமும் அவர் பெயரிலேயே இருந்து வருகின்றன. (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1918, பக்கம் 23).

இன்றும் பல கோயில்களில், திப்புவின் கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவர் பெயரில் சங்கல்பம் என்று அறியப்படும் ஆராதனைகள் செய்யப்படுகின்றன.


தொடரும்...

எழுதியவர் : நாகூர் ரூமி (15-Dec-13, 8:34 pm)
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே