இந்திய முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ச்சி 5

கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்குவதோடு திப்புவின் பங்களிப்புகள் முடிந்துவிடவில்லை. சமுதாய முன்னேற்றத்திற்கான பல சீர்த்திருத்தங்களை அவர் செய்திருக்கிறார். உதாரணமாக, மலபாரில், அவர் காலத்தில், தாழ்த்தப்பட்ட ஜாதிப்பெண்கள் இப்போது அணிவது மாதிரியான ஜாக்கெட் எனும் உள்ளாடை அணிந்து மானம் மறைப்பதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது. (இந்த விசயம் பற்றி திரைப்படங்கள்கூட வந்துள்ளன). அவர்களும் இடுப்புக்கு மேலே ஆடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, மானம் மரியாதைக்கு ஜாதி மத பேதம் கிடையாது என்ற உண்மையை உணர்த்தினார். சீர்த்திருத்தவாதியான திப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தகவல் திப்பு சுல்தான் பற்றிய முக்கியமான எல்லா நூல்களிலும் காணப்படுவதாகும்.இது தவிர, மது அருந்துவதையும், விபச்சாரம் புரிவது, ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்வது ஆகியவற்றையும் அவர் தடைசெய்தார். (ஷெய்க் அலி, பக்கம் 53).

இந்திய நாட்டுக்காக தனது உயிரையும் தியாகம் செய்தார் திப்பு. இந்த திப்பு சுல்தானைப் பற்றித்தான் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் மதவெறியர் என்று பேனாவின் வாய்கூசாமல் கூறினர். ஒரு முஸ்லீம் ஆட்சியாளர், நல்ல ஆட்சியாளராக வாழ முயற்சி எடுத்துக்கொண்டால், அது மேற்கின் பார்வையில் மதவெறியாகி விடுகிறது! அக்பரைப்போல நிலை இல்லாமல் இருந்தால், அது புகழுக்குரிய மதச்சார்பின்மையாக மாறிவிடுகிறது!

நாடு பிடித்தல், படையெடுப்பு, யுத்தம் என்று எதை நாம் பார்த்தாலும், அதன் பின்னணியில் எந்த காலத்திலுமே முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு தம் மார்க்கத்தை திணிப்பது நோக்கமாக இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.

என்றாலும், இஸ்லாத்தை பரப்புகிற நோக்கமே எந்த ஆட்சியாளருக்கு இருந்தது கிடையாது என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு எண்ணம் இருந்து இருப்பதிலும் எந்த தவறும் இல்லை. மார்க்கம் பரப்பப்பட்ட விதம் குறித்துதான் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பாபர் இந்தியா மீது படையெடுத்து மார்க்கமும் ஒரு நோக்கமாக இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. "இயற்கை வளத்துடன் தெய்வீகமும், மெய்ஞானமும் தலைத்தோங்கும் இந்துஸ்தானத்தில் இஸ்லாம் தழைக்குமானால் அது பசும்பட்டில் வைரம் போல் ஜொலிக்கும்" என்று பாபர் சொன்னாராம். (ஞான சூரியன், பக்கம் 15). ஆனால் இத்தகைய நோக்கம் கொண்டு வந்த ஆட்சியாளர்கள்கூட தம் வாளை கொண்டு மார்க்கத்தை பரப்பவில்லை என்பதைத்தான் இது காறும் பார்த்தும்.

இந்தியாவுக்குள் முகலாயர்கள் வந்ததற்கு காரணம் இஸ்லாத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல என்பது வெளிப்படை. ஒரு பஞ்சத்தில் அடிபட்ட நாடாக இருந்திருந்தால், இந்தியாவுக்குள் யாருமே வந்திருக்கமாட்டார்கள்!

ஒரு நாட்டை கிறிஸ்துவர்கள் பிடித்து, குறிப்பிட்ட காலம் ஆண்டால், அந்த நாட்டில் உள்ள மக்களில் சிலர் அல்லது பலர் கிறிஸ்துவராவதற்கு வாய்ப்புகள் இருப்பதைபோல தான் முஸ்லீம்களின் படையெடுப்புகளின் போதும் நடந்துள்ளது. ஆனால், படையெடுப்புகள் சாதிக்க முடியாததை அமைதி காலத்தின் வாழ்வு சாதிக்கிறது. இரத்தத்தால் வாங்க முடியாததை, கண்ணீரும், மௌனமும் பொறுமையும் வாங்கியுள்ளன. இதுதான் உலகெங்கிலும் உள்ள மார்க்கங்கள் பரவிய வரலாறாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், யுத்தங்களை கைவிட்ட பிறகும்தான், மார்க்க உணர்வே ஒரு மனிதனுக்கு எழுகிறது. ஒரு லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டும், குற்றுயிரும், கொலையுயிருமாக கிடப்பதைக் கலிங்கத்தில் பார்த்த பிறகுதான் அசோகரின் மனம் மாறுகிறது. அவர் பௌத்திரராகிறார். ஏகப்பட்ட இசைக் கருவிகளின் சப்தம் சாதிக்க முடியாததை ஒரு அமைதியான மெஹ்தி ஹசனின் குரல் சாதித்து விடுவதைபோல.

'மத்திய அரசு' என்ற ஒரு கருத்துருவே (concept) முஸ்லீம்களால்தான் இந்தியாவிற்கு அறிமுகமானது என்று வின்சன்ட் ஸ்மீத் என்ற வரலாற்று ஆசிரியர் தனது history of indiaஎன்ற நூலில் கூறுகிறார். வாளால்தான் இஸ்லாம் பரவியது என்றால் இன்று இந்தியாவில் முஸ்லீம்கள் அல்லவா பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள்? ஆனால் நமது நாட்டில் இன்றும் முஸ்லீம்கள் சிறுபானமையினராகத்தானே உள்ளனர்! ஏன் எல்லோரையும் அவர்கள் வாளால் மாற்றவில்லை? ஏனெனில் சிலர் அல்லது பலர் நினைப்பதுபோல இஸ்லாம் வாளால் பரவவில்லை. உண்மை அதுதான், அதனால்தான்.

எழுதியவர் : டாக்டர் நாகூர் ரூமி (22-Dec-13, 8:48 pm)
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே