மழைக்காலத்திலும் வீடு பளிச்சுன்னு இருக்க இதோ, சூப்பர் டிப்ஸ்கள்

மழை வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் ஆனா குடும்பத் தலைவிகளுக்கு பெரும் தலைவலி.. வீடு, துணி தொடங்கி ஒவ்வொரு பொருளையும் பாதுகாத்து பத்திரப்டுத்துவதென்றாலே அப்பப்பா..... பெரும் போராட்டம் தான். இதோ உங்க தலைவலியை குறைக்க சில டிப்ஸ்...

கதவுகளை எப்படிப் பாதுகாப்பது?

மழைக் காலத்தில் வீட்டுக்கு பெயிண்டிங், ஒயிட் வாஷ் என்று எந்த வேலைகளையும் வைத்துக்கொள்ளாதீர்கள். மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பாகவே பெயிண்டிங், வார்னிஷ் செய்துவிடுவது நல்லது.

ஒருவேளை, மழைக்கு முன்பு இரும்பு கேட் மற்றும் கிரில்களுக்குப் பெயிண்டிங் செய்ய மறந்துவிட்டால்கூட, மண்ணெண்ணெயும், தேங்காயெண்ணெயும் கலந்து தினம் ஒருமுறை துடைத்துவிடுவது நல்லது.

வெள்ளை நிற ஷூ, செப்பல்ஸ் சாதாரண காலங்களிலேயே மங்கலாகிவிடும். மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். எனவே ஒரு ஸ்பான்ஜில் ஒயிட் வினிகர் அல்லது ஆல்கஹால் தொட்டுத் துடைத்து பின் ஒயிட் பாலீஷ் போடவும். அல்லது உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டித் தேய்த்து பின் துடைத்து விட்டு பாலீஷ் போட்டால் ஷூ வெள்ளை நிறமாக பளிச்சிடும்.

கேன்வாஷ் ஷூக்களில் மழைக்காலத்தின் எந்தவித கறை என்றாலும் கூட தண்­ணீரில் வினிகர் கலந்து துடைத்து விட்டால் உடனே போய்விடும்.

துணிகளால் தைக்கப்பட்ட மெத்மெத்தென்ற கால் மிதியடிகள் நிறைய வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. தினம் ஒன்றாக மிதியடிகளை மாற்றிக் கொண்டேயிருக்கவும். உடனுக்குடன் அலசி பால்கனியில் உலரப்போட்டால்தான் அடிக்கடி மாற்ற சௌகரியமாக இருக்கும்.

செல்ஃப்களை எப்படி பாதுகாப்பது?

துணி ஸ்கிரீன்கள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தால் உடனே ட்ரைகிளீனிங் செய்து மடித்துவைத்து விட்டு இந்த சீசனில் நெட் ஸ்க்ரீன் யூஸ் பண்ணுங்கள். ஈரம் பட்டால் உடனுக்குடன் காய்ந்து விடும்.

அலங்கார அலமாரிகளைத் துடைத்து கிஃப்ட்பேக் பேப்பர்கள் விரித்து, அதன்மேல் அலங்காரப் பொருட்களை வைத்துவிடுங்கள். ஈரம்பட்டால்கூட துடைத்தெடுக்க வசதியாக இருக்கும்.

ஒரு பக்கெட் வெதுவெதுப்பான வெந்நீரில் டெட்டால் 3 டீஸ்பூன் விட்டு தரையை காலையும்-மாலையும் இருவேளை துடைக்கவும். மழைக்காலக் கிருமிகள் தரையில் அண்டாமல் இருக்கும்.

டிரஸ்களை எப்படிப் பாதுகாப்பது?

பீரோவில் உள்ளாடைகளுக்கு மட்டும் தனி அடுக்கு வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலங்களில் உள்ளாடைகளைக் கூட அயர்ன் செய்து மடித்து வைப்பது நல்லது.

மழைக்காலத்தின்போது கர்ச்சீப் முதல் ரிப்பன் வரை எல்லாவிதமான உடைகளுக்கும் அயர்னிங் மிக முக்கியம்.

மழைக்காலத்தின்போது வீட்டின் சுவர்களைக்கூட வெறும் ஸ்பான்ஜால் தினம் ஒருமுறை துடைப்பது நல்லது. இல்லாவிடில் மழைக்குப்பின் ஒருவித பூஞ்சக்காளான் போல் பூத்து சுவர்களை அசிங்கப்படுத்திவிடும்.

பாத்ரூம் சுவர்கள், டாய்லெட் சுவர்களை தினம் டெட்டால் கலந்த நீரில் ஸ்பான்ஜை நனைத்துத் துடைக்க வேண்டும். தரையை டெட்டால் நீரில் அலசிவிட வேண்டும்.

கொழ... கொழ... எப்படித் தவிர்ப்பது?

மழைக்காலங்களில் குளியல் சோப் எப்போதுமே ஈரம் போகாமல் கொழகொழவென்று பார்க்கவே அசிங்கமாக இருக்கும். குளித்தவுடன் சோப்பை டிஷ்யூ பேப்பரில் லேசாக ஒற்றி எடுத்து விட்டு ட்ரையான பின் சோப் டப்பாவைத் துடைத்து விட்டு ஈரமில்லாத டப்பாவில் வைத்து மூடவும்.

குளிக்கும் முன் தினமும் டெட்டால், எலுமிச்சைச் சாறு கலந்து வாஷ்பேஸினை கழுவி விட வேண்டும்.

பாத்திரம் கழுவும் சிங்கை எலுமிச்சைச்சாறு மட்டும் கலந்து ஊறவிட்டுப்பின் கழுவினால் கிருமிகள் அண்டாது.

நான்வெஜ் சமைத்த பிறகு தேய்த்துக் கழுவிய பாத்திரங்கள் ஈரமாகவே நசநசவென்று இருந்தால், மைக்ரோவ் அவனில் ஒரு செகண்ட் வைத்து எடுக்கவும். மீன் குழம்பு போன்ற வாடைகள் பாத்திரத்தில் வீசாது.

கியாஸ் ஸ்டவ் ட்யூப்களுக்கு ரப்பர் டியூப்புக்குப் பதிலாக பிளாஸ்டிக் ட்யூப் போட்டு வைப்பது பாதுகாப்பானது. மழைக்காலங்களில் ரப்பர் ட்யூபில் பூஞ்சைக்காளான் வைக்க வாய்ப்புள்ளது.

வாஷிங் மெஷின், ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர், மிக்ஸி இவைகள் எப்போதுமே ஈரமாக இருப்பது போலவே இருக்கும். உபயோகப்படுத்தும் நேரங்கள் தவிர கவர்போட்டு வைப்பது நல்லது. துடைத்துவிட்டு யூஸ்பண்ணினால், கரண்ட் ஷாக்கிலிருந்து தப்பிக்கலாம்.

மெத்தை... கவனம் ப்ளீஸ்!

மழைக்காலத்தில் ஈரத்துணியை மறந்தும்கூட மெத்தையில் போட்டுவிடாதீர்கள். கட்டிலுக்கருகே ஒரு மிதியடி போட்டு வைப்பது நல்லது.

மழை ஆரம்பிக்கும் முன்பே பரணை ஒரு தடவை சுத்தம் செய்து விடுங்கள்.

மழைக்காலங்களில் மளிகை சாமான்களை கூடுமானவரை தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சத்தை பாலிதீன் கவரைப் பிரிக்காமலேயே மெயின்டெய்ன் பண்ணுங்கள்.

பெயிண்டிங், வேலைப்பாடு பொருட்கள், மரவேலைப்பாடு பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை தினம்தினம் உலர்ந்த துணி அல்லது ஸ்பான்ஜ் கொண்டு துடைத்துவிடுங்கள். பூஞ்சான் படியாது.

கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு உறை மெயின்ட்டனன்ஸ் தவிர, தினம் சுத்தமான உலர்ந்த துணியால் துடைப்பதும் அவசியம்.

கிச்சனில் தேவையில்லாத இடங்களில் ஸ்கிரீனைத் தொங்க விடாதீர்கள். ஈரம் படர்வதால் தேவையில்லாத தொற்றுக் கிருமிகள் அண்ட வாய்ப்புள்ளது. மாடுலர் கிச்சன் என்றால் மட்டும் ஷட்டரை உபயோகப்படுத்துங்கள்.

வாஷிங்மெஷினில் ட்ரையர் இல்லாதவர்களும், வாஷிங் மெஷின் இல்லாதவர்களும் துணிகளை பால்கனியில் உலர்த்தி எடுத்தபின் அயர்ன் செய்து வைக்கவும்.

வாஷிங்மெஷினில் ட்ரையர் இருந்தால் ட்ரையர் போட்டு மின் விசிறியில் உலர்த்தி மடித்து வைக்கவும்.

மழைக்காலங்களில் பூட்டுகூட மக்கர் பண்ணும். கடைசிநேரத்தில் பூட்டும்போது டென்ஷனாவதை விட, அவ்வப்போது பூட்டையும் கண்காணித்து வையுங்கள்!

மழையில் நனைந்து அல்லது சேற்றை மிதித்து வீடு திரும்பும்போது நல்ல மிதியடி வீணாகாமல் இருக்க, கோணிப்பைகளைப் போட்டு வைத்தால், கோணிப்பைகளில் கால்களைத் துடைத்துக்கொண்டு, பின் நல்லமிதியடிகளில் கால்துடைத்து வீட்டினுள் வரலாம்.

மழை, குளிர்காலங்களில் பரணின்மேல் இருக்கும் சூட்கேஸ், ஏர்பேக், போன்றவற்றில் ஈரப்பதம் படிந்து இருக்கும். இதனால் இவைகளில் பூஞ்சகாளான் படியாமல் இருக்க பெரிய பிளாஸ்டிக் கவர் அல்லது காட்டன் புடவை, வேஷ்டிகளைச் சுற்றி வைக்கலாம்.

துர்நாற்றம் நீங்கணுமா?

மழைக்காலங்களில் வீட்டிற்குள்ளேயே துணிகளை காயப்போடுவதாலும், அங்கங்கு ஈரமாக இருப்பதாலும் வீட்டுக்குள் ஒருவித கெட்ட நாற்றம் வீசும். இதைப்போக்க ஊதுவத்தி, சாம்பிராணி அவ்வப்போது ஏற்றிவைக்கலாம். கொசு மேட்டில் கற்பூரம் வைத்து ஸ்விட்ச் போடலாம். வீடெங்கும் வாசனை நிறைந்திருக்கும்.

கட்டைப்புகையிலையை வேஷ்டித்துணியால் முடிந்து வீட்டின் மூலையில் வைத்துவிட்டால், கரையான், கரப்பான் பூச்சிகள் அண்டாது.

ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு இரண்டையும் சேர்த்து உருண்டையாக உருட்டி ஃப்ரிட்ஜ் அடியில், பீரோ அருகில் வைத்தால் மழைக்கால குட்டி குட்டிப்பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.

மளிகைப் பொருட்களை ஈஸியாகப் பாதுகாக்கலாம்!

அரிசியில் வண்டு வராமலிருக்க, இரண்டு உள்ளங்கையிலும் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு அரிசிப்பாத்திரத்தில் கையை விட்டுத் துலாவி கலக்கினால் அரிசி வண்டு பிடிக்காது.

ரவை, பருப்பு வகைகளை லேசாக ஈரம் போக வறுத்து பாட்டிலில் வைத்துக் கொண்டால் வண்டு, பூச்சி வராது.

மழைக்காலம் முடியும் வரை பருப்பு வகைகளை ஃப்ரிட்ஜில்கூட வைத்துப் பாதுகாக்கலாம்.

மழைக்காலத்தில் தொண்டைப்புண், இருமல் வந்து அவதிப்படுபவர்கள் தும்பையிலைச்சாறு, சுண்ணாம்பு இரண்டையும் கலந்து தொண்டைக்குழியில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சளியால் தொல்லையா?

குளிர்காலத்தில் மார்புச்சளி தொல்லை கொடுத்தால் தண்ணீ­ரில் மஞ்சள்பொடி கலந்து கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாள் செய்து வர மார்புச்சளி போயேபோய்விடும்.

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 8:49 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 171

மேலே