வீட்டில் தனியாக இருக்கிறீர்களா

இப்போதெல்லாம் பட்டப் பகலிலே வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுகிறான் கொள்ளைக்காரன்.

சின்னச் சின்ன திருட்டுக்களில் தொடங்கி, திட்டமிட்டு செய்யப்படும் கொள்ளை வரை அனைத்துமே பெரும்பாலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் நேரங்களிலோ, வீடு பூட்டியிருக்கும் நேரங்களிலோ நடப்பவைதான்! அதற்காக வீட்டுக்கொரு காவலாளியை வேலைக்கு வைக்க முடியாது தான்.

ஆனால், நம் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களையும், விலை மதிக்கவே முடியாத நம் குடும்பத்தவரின் உயிரையும் பாதுகாக்க வேறு சில சாதனங்களை உபயோகிக்க முடியுமே... அப்படி என்னவெல்லாம் சாதனங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

கதவில் பொருத்தப்படும் "லென்ஸ்"-ன் லேட்டஸ்ட் வடிவம்தான் "வீடியோ டோர் போன்". இதன் மூலம் கதவுக்கு வெளியே இருக்கும் நபரை வீட்டினுள் இருந்தபடியே பார்க்கலாம். இதில் இருக்கும் "ஸ்பீக்கர் போன்" மூலம் அந்த நபரிடம் பேசலாம்.

கதவின் உட்புறம் தாழ்ப்பாள் போடும் இடத்தில் பொருத்த முடிகிற அயிட்டம் "மேக்னடிக் சென்ஸார்". இதைப் பொருத்தி விட்டால், கதவு லேசாக திறந்தாலும், அலாரம் அடிக்கும். வீட்டின் மேற் கூரையில் (ஏழு அடி உயரத்தில்) "மோஷன் சென்ஸார்" என்கிற உபகரணத்தைப் பொருத்தி விட்டால், இதன் எல்லைக்குள் யாராவது அல்லது ஏதாவது குறுக்கிடும்போது அலாரம் அடிக்கும். தேவையான நேரங்களில் மட்டும் இதை "ஆன்" செய்து கொள்ள முடிவது இதில் ஸ்பெஷல்!

இந்தக் கருவியைப் பொருத்தும் நிறுவனத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய "கஸ்டமர் கேர்" பிரிவு உள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அலாரம் அலறினால், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் "கஸ்டமர் கேர்" பிரிவுக்கு தகவல் சென்று விடும். அந்த நிறுவனம், உடனடியாக நம்மைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்.

அடுத்தது "ஃபிங்கர் பிரின்ட் லாக்"

இதைக் கதவில் பொருத்தி விட்டால், இதில் உள்ள சென்ஸாரில் கட்டை விரலை வைத்து, நாலு இலக்க பாஸ்வேர்டை தந்தால்தான் கதவு திறக்கும். இதில் சுமார் 120 ரேகைகள் வரை பதிவு செய்து கொள்ளலாம்.

நாம் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் வீட்டில் நடக்கிற எல்லா நிகழ்வுகளையும் கேமராவுடன் இணைந்த "கிளியர் சர்க்யூட் டி.வி" மூலம் பதிவு செய்யும் வசதி தற்போது வந்து விட்டது. நாம் வெளியூரில் இருந்தால் சிறப்பு கட்டணம் செலுத்தி, இன்டர்நெட் மூலம் வீட்டைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்.

இவை எல்லாமே சாம்பிள்தான். இன்னும் பல வகையான அலாரம்கள் சென்னை, கோவை, மதுரை போன்ற எல்லா முக்கிய நகரங்களிலும் இருக்கிற எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கிற கடைகளில் கிடைக்கின்றன. விலை கொஞ்சம் அதிகம் என்பதுதான் இவற்றில் இருக்கிற ஒரே நெகட்டிவ் அம்சம்! ஆனால், பாதுகாக்க வேண்டியவற்றோடு ஒப்பிடும்போது விலை பற்றி அவ்வளவாக யோசிக்க வேண்டியது இல்லைதான்!

"ஆனால், அலாரமை மட்டும் நம்பினால் போதாது" வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது". இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது. ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.

ஆபத்து ஏற்படுவதாக லேசாக சந்தேகம் வந்தாலும் உடனடியாக 100 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

"பாதுகாக்குமே பாலிஸி!"

"வாகனங்களுக்கு இருப்பது போலவே வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது" "காப்பீடு செய்வது எப்போதுமே நல்லது. பொருள் திருடு போய்விட்டால் கூட, அதற்கான காப்பீட்டுத் தொகையாவது கிடைக்குமே... வீட்டு உரிமையாளர், "ஹவுஸ் ஹோல்டர்" பாலிஸி எடுப்பதன் மூலம் தன் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால் இழப்பீடு பெறலாம். இந்த பாலிஸியின் மூலம் நெருப்பு, புயல், வெள்ளம் போன்றவற்றால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதம், திருட்டு மற்றும் கொள்ளை போன்றவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்.

நகைகள், கண்ணாடி பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் சம்பந்தமான வீட்டு உபயோக பொருட்கள் (இதில் கம்ப்யூட்டர் அடங்காது), டி.வி மற்றும் வி.சி.ஆர், சைக்கிள், வெளியூர் செல்லும் சமயத்தில் கொண்டு செல்லும் பொருட்கள் உட்பட இன்னும் சிலவற்றுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் (செல்போன், காமிராவுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது). நாம் செலுத்தும் பிரிமீய தொகைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்".

ஆங்கிலத்தில், "கடவுளை நம்ப வேண்டியதுதான். ஆனால், உங்கள் காரையும் பூட்டி வையுங்கள்" என்றொரு பழமொழி உண்டு. நமக்கு எதுவும் நேராதுதான்... ஆனாலும் கவனத்துடன் இருப்பது நல்லதுதானே!

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 9:20 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 186

மேலே