தைப்பூசம்

சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த தைப்பூச திருநாள்:

சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை
பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு
உகந்த நாளாகும். மேலும், ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தையும், இறைவன் ஜோதி சொரூபியாக உள்ளான் என்பதையும், அன்னதானத்தின் மகிமையையும் உணர்த்தியுள்ளார். மேலும் மரணமில்லா பெருவாழ்வு அடைந்து மீண்டும் பிறவாமல் இருக்க போதனை செய்துள்ளார்.

25/1/1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் தொடங்கி வைத்தார். அதன்பின் அந்த ஜோதியிலேயே ஐக்கியமானார். அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்.தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள்.

இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.ஆடு, மாடு, கோழி, சேவல், மயில் போன்ற ஜீவராசிகளை கோயிலுக்கு அர்ப்பணித்தல், நேர்ந்து விடுதல் போன்ற வழிபாடுகளை தைப்பூச நாளில் நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். சென்னை கந்தகோட்டத்து முருகப் பெருமானை துதித்து வள்ளலார் பாடிய பாடலை இந்த நன்னாளில் நாமும் பாடி சகல நலன்களும் பெறுவோம்.

எழுதியவர் : முரளிதரன் (17-Jan-14, 9:43 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 2566

சிறந்த கட்டுரைகள்

மேலே